உடல் உணர்த்தும் உண்மைகள்

ணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இன்று பலருக்கும் மருந்துகளே உணவாக மாறியிருக்கின்றன. சின்னச்சின்னப் பிரச்னைகளுக்குக்கூட மருத்துவர்களையும் மருந்துக் கடைகளையும் தேடி ஓடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

உடலுக்குள் ஏதோ பிரச்னை ஏற்படுகிறபோது அது வித்தியாசமான அறிகுறியாக வெளிப்படலாம். ஊட்டச்சத்துக் குறைபாட்டை மறைமுகமாக உணர்த்தலாம். ஆனால் உடல் வெளிப்படுத்தும் பெரும்பாலான அறிகுறிகளை உணவுகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கவோ, உணவு முறையைச் சரி செய்து அவற்றுக்குத் தீர்வு காணவோ பலரும் முயற்சி செய்வதில்லை.

“இன்று ஆண்களுக்கு இணையாகப் பெண்களும்  வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இதனால் ‘நாளை காலை டிபனுக்கு இட்லி, மதியம் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், டின்னருக்கு தோசை, இட்லிப் பொடியோடு முடிச்சுக்கலாம்’ என முந்தையநாள் இரவே அடுத்த நாளுக்கான முழு மெனுவையும் முடிவு செய்துவிடுகிறார்கள். பேச்சிலர்களாக இருந்தால், என்ன சாப்பாடு கிடைக்கிறதோ… அதுதான்! இப்படி அவர்கள் தேர்வு செய்யும் உணவுகள், உடலின் தன்மைக்கேற்ப இருக்கின்றனவா என்றால், கேள்விக்குறிதான். சொல்லப்போனால் உடல் உபாதைகளைச் சரிசெய்ய முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவில்தான்.  வீட்டில் பெரியவர்கள் இருந்தால், ‘உடம்புல சூடு அதிகமாயிட்டா மோர் அதிகமா சேர்த்துக்கோ’; ‘தொண்டை வறண்டு போகுதா, இளநீர் குடி’ என்பார்கள். ஆனால் மாறிவரும் சமூகம் பேச்சிலர்களையும் தனிக்குடித்தனக் குடும்பங்களையுமே அதிகரிக்கச் செய்கிறது. இப்படிப் பெரியவர்கள் இல்லாமல் வளரும் குடும்பங்களில், சின்னச் சின்ன விஷயத்துக்கும்கூட பயந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

அன்றாட வாழ்வில் உங்கள் உடலில் நீங்கள் காண்கிற மாற்றங்களின் பின்னணியில் உணவியல் இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.  அப்படிச் சில அறிகுறிகள் பற்றியும் அவற்றுக்கான உணவியல் தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார் அவர்.

எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லையா?

வேலையிலும் மற்ற எந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஒமேகா 3 அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். பேக்கரி  உணவுகள், எண்ணெய்ப் பண்டங்களைத் தவிருங்கள். உடலில் ஏற்படும் நீர்வறட்சிகூட கவனச்சிதறலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, தினமும் குறைந்தபட்சம் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

 

நகம் உடைகிறதா?

நகம், முடி வளர்ச்சிக்குக் கெரட்டின் (Keratin) எனப்படும் புரதச்சத்து தேவை. இது உடலில் குறைவாக இருந்தால், நகங்கள் எளிதில் உடையும். கீரை, பால், கேழ்வரகு, தாதுச்சத்துகள், புரதச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகள், கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருள்களைச் சாப்பிடுவது இப்பிரச்னைக்கான தீர்வாக அமையும்.

வயிறு சரியில்லையா?

உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால்தான் வயிற்றுக்கோளாறுகளும் மலச்சிக்கலும் ஏற்படுகின்றன. உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், தனியா, இஞ்சி, ஓமம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் கீரைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, கொய்யாப்பழம், பப்பாளி சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சரும நிறம் மாறுகிறதா?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சூழலைப் பொறுத்துப் பலவிதமான உபாதைகள்  ஏற்படும். உதாரணமாக, குளிர் காலத்தில் சளி, இருமல் அதிகம் ஏற்படும். வெயில் காலத்தில் சருமப்பிரச்னைகள், உடல் சூடு, சருமநிற மாற்றம் போன்றவை ஏற்படும். சருமத்துக்கு வைட்டமின் டி சத்து அதிகம் கிடைப்பதாலேயே  நிறம் மாறும். ஆகவே, இதை நினைத்துப் பயப்படவேண்டாம். வைட்டமின் டி சருமத்துக்குத் தேவையானது என்பதால், சன்ஸ்க்ரீன் க்ரீம்களைப் பூசி வெயில்படவிடாமல் செய்து விடாதீர்கள். தினமும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

தொண்டை அடிக்கடி வறண்டு போகிறதா?

வாயில் உமிழ்நீர் குறைந்தால் தொண்டை வறட்சி ஏற்படும். ஆகவே உமிழ்நீர்ச் சுரப்பை அதிகப்படுத்த, அதிமதுரம் அல்லது பனங்கற்கண்டு சாப்பிடுங்கள். காபியிலுள்ள கஃபைன் சத்து, வறட்சியை அதிகப்படுத்தும் என்பதால், காபி அதிகம் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆல்கஹால் ஃப்ரீ மவுத்வாஷ் (Alcohol Free MouthWash) பயன்படுத்துவது நல்லது. உணவு விழுங்கும்போது, தொண்டையில் வலி ஏற்பட்டால் நிறைய தண்ணீர் குடிப்பது தீர்வாக இருக்கும். தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்வதும் நல்லது.

உடல் எடை அதிகரிக்கவில்லையா?

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், தயிர், பருப்பு வகைகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் இந்தப் பட்டியலில் முட்டை, சிக்கன், மீனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடைக்கு உணவு எந்தளவு முக்கியமோ, அந்தளவு மனநிம்மதியும் முக்கியம். தினமும் மூன்றுவேளை நிறைவான சாப்பாடு, எட்டு மணி நேர நிம்மதியான தூக்கம் அவசியம்.

%d bloggers like this: