செஞ்சுரி போட சில வழிகள்

முப்பது வயதிலிருந்தே சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் அதிக நாள்கள் உயிர் வாழலாம்’, `மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதில் சுவாசம் தொடர்பான கோளாறுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன’, `மொத்த ஆயுள் காலத்தில் 20 சதவிகிதம் மரபணுக்களைப் பொறுத்தே அமைகிறது’ – 100 வயது வரை வாழ்வது குறித்து மருத்துவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் கிடைத்த பதில்கள் இவை.

முதுமை… ஒவ்வோர் உயிரினமும் தம் வாழ்நாளில் எதிர்நோக்கும் ஒன்று. உலகின் அனைத்து உயிர்களின் உடல் அமைப்புக்கும் அடிப்படையானவை அணுக்கள். நமது உடலின் ஒவ்வொரு பாகமும் எங்கும் நிறைந்திருக்கும் அணுக்களால் ஆனதே. திசுக்களை அணுத் திரள்களே வடிவமைத்துள்ளன. ஆனால், ஆயுள் முழுக்க ஒரே அணுக்கள் உடலில் இருப்பதில்லை. அவை புதிது புதிதாக உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். முதிர்ச்சி அடையத் தொடங்கும்போது அணு உற்பத்தியின் வேகம் குறையத் தொடங்கும். அணுக்களில் இருக்கும் நிறமிகள் பாதிப்படைவதால், உடல் வெளுக்கத் தொடங்கும். அணுக்களும் திசுக்களும் மாற்றமடைவதால், உடலின் பாகங்களும் மாற்றமடையும், வலுவிழக்கும்.

ஒரு திசுவிலிருந்து இன்னொரு திசுவுக்குத் தொடர்பு ஏற்படும்போது, தனது நெகிழ்வை இழந்து இறுக்கமடைவதால் உடலிலுள்ள வளையும் பாகங்களில் சிரமம் ஏற்படும். வயதாகும்போது இது பெரும்பாலானோரை மூட்டுவலி, எடைகளைத் தூக்க இயலாமைக்கு இட்டுச்செல்லும். நமது உடல் பாகங்களுக்கென ஒரு வரையறை உண்டு. அதையும் தாண்டி உழைப்பது பயன்பாட்டுத் திறனுக்கு இயலாமல் போகும். உதாரணமாக, 20 வயது இளைஞனின் இதயத்தால், வாழ்வதற்குத் தேவையானதைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் ரத்தத்தைச்  சுத்திகரிக்க முடியும். அதே இளைஞன் 30 வயதைத் தாண்டியதும் வருடத்துக்கு ஒரு சதவிகிதம் என அந்தத் திறன் குறையத் தொடங்கும்.

சராசரியாக 30 வயதிலிருந்தே உடல், முதிர்ச்சியை நோக்கியப் பயணத்தைத் தொடங்கிவிடும். ஆனால், சிறிது சிறிதாகவே நிகழ்வதால் அந்த மாற்றத்தின் விளைவை நாம் உணரக் குறைந்தது 10 வருடங்கள் ஆகும். 40 வயதைக் கடந்த பிறகே அதன் பாதிப்புகளை உணரத் தொடங்குவோம். முதுமையைக் கண்டு அஞ்சாதவர்கள் இல்லை. நீண்ட நாள்கள், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 6,05,778 பேர் நூற்றாண்டுகளைக் கடந்தும் வாழ்ந்திருக்கின்றனர். 2001-ம் ஆண்டில் 1,39,472 ஆக இருந்தது 2011-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் முன்னேறியிருப்பதன் மூலம் ஆரோக்கியத்தின் மீதான மக்களின் அக்கறை புரிகிறது. ஆரோக்கியமான உணவுமுறையும், அன்றாடம் உடலுக்குச் சிறிது பயிற்சிகளையும் தொடர்ச்சியாகக் கொடுப்பதன் மூலம் நூற்றாண்டை நோக்கிய பாதையில் நாமும் நடக்கத் தொடங்குவோம். அதற்கான வழிகளை மருத்துவர்களிடம் கேட்போம்.

பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் மருத்துவர் ரகுநாதன்

“மருத்துவத் தொழில் நுட்பங்களின் முன்னேற்றத்தால் மனிதனின் வாழ்நாள் அதிகரித் திருப்பது உண்மைதான். அதேநேரம் வாழும் காலம்வரை ஆரோக்கியமாக வாழ்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை. நாளொன்றுக்கு நாம் குடிக்கும் அதிகபட்ச 3 1/2 லிட்டர் நீரில் மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால், 1,000 லிட்டருக்கும் மேலாகச் சுவாசிக்கும் காற்றைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. இந்த நூற்றாண்டில் மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதில் சுவாசம் சம்பந்தமான கோளாறுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. அதிலிருந்து விடுபட சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்பு உணர்வு நமக்கு அவசியம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய் ஆகியவையும் மனிதர்களைப் பாதிக்கும் முக்கிய நோய்களாக இருக்கின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி நாம் வாழ்நாளை அதிகரிக்க வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது உணவுக் கட்டுப்பாடு.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சிறு வயதிலேயே  ஏற்படும் உடல்பருமன், மாரடைப்பு போன்ற பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். யோகா, தியானம், நண்பர்களுடன் உரையாடுதல், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நோய்கள் வந்த பிறகு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் இவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தால் நிச்சயமாக 100 வயதுவரை வாழலாம்.’’

முதியோர் மருத்துவத்துறைப் பேராசிரியர் மருத்துவர் சாந்தி

“மனிதன், 30 வயதிலிருந்தே சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால், அதிக நாள்கள் உயிர் வாழலாம். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் புரதம் அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்க வேண்டும்.

வைட்டமின் ஏ, சி, இ நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக உண்பதால், உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதுடன் தேவையில்லாத கழிவுகள் வெளியேற்றப்படும். இதனால் செல்கள் புதுப்பிக்கப்பட்டுப் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம். வைட்டமின் டியைப் பெற சூரிய ஒளிபடும்படி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

வயதானவர்களை அதிகமாகப் பாதிப்பவை உயர் ரத்த அழுத்தமும் ‘டிமென்ஷியா’ என்கிற மறதிப் பிரச்னையும். தேவையில்லாமல் கோபப்படுவது, பதற்றம் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது. அதைத் தவிர்க்கச் சிறுவயதிலிருந்தே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். `டிமென்ஷியா’ வராமல் தடுக்க பெயின்டிங், ரைட்டிங், குறுக்கெழுத்துப் புதிர்கள் என நமக்குப் பிடித்தவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி நேரில் சந்தித்து உரையாடலாம். தடுமாறி விழுவதால் இறக்கும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தசைகள் வலுவிழந்து விடுவதால்தான் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. `பேலன்ஸ் எக்சர்சைஸ்’ தினமும் செய்துவந்தால் இதைத் தவிர்க்கலாம்.’’

யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மணவாளன்

“மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதில் யோகாவுக்கு முக்கிய இடமுண்டு. யோகா உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், அதிக நாள்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். யோகாவில் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், கிரியா, நாடிசுத்தி ஆகியவை மிகவும் முக்கியமானவை.  6 வயதிலிருந்தே இதுபோன்ற பயிற்சிகளைச் செய்யத் தொடங்கிவிட்டால் ஆரோக்கியமாக வாழலாம். தினமும் ஒரு மணி நேரமாவது யோகப் பயிற்சி செய்ய வேண்டும். அது உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் அட்ரினல், பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

தினமும் யோகா செய்துவந்தால் மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதியடையும். தேவையில்லாமல் கோபப்படுவது குறையும். உடலில் தேவையில்லாத ரசாயனங்கள் சுரக்காது. இதயப் படபடப்பு குறையும். நன்றாகப் பசியெடுக்கும். நல்ல ஜீரணசக்தி கிடைக்கும். மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறினாலே உடல் புத்துணர்ச்சியாக இருக்கும், நோய்கள் நெருங்காது. குளோபல் வார்மிங்கைவிட மென்டல் வார்மிங் உடனடியாக மனிதனைப் பாதித்துவிடும். அதைத் தவிர்த்துவிட்டு அதிக நாள்கள் ஆரோக்கியமாக வாழ யோகப் பயிற்சிகள் மிகவும் அவசியம்.’’

ஆயுள் காக்கும் ஐந்து!

* தினமும் ஒரு மணி நேரமாவது யோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* நாளொன்றுக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். காலை உணவை சூரிய உதயத்துக்குப் பின்னரும் மதிய உணவை சூரியன் மறைவதற்கு முன்னரும் சாப்பிட வேண்டும்.

* வாரத்தில் ஒருநாளாவது திட உணவுகளைத் தவிர்த்துவிட்டு, திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

* தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* நாளொன்றுக்கு இரண்டு வேளை குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களாவது ஏதாவதொரு பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கண்ணை மூடி அமைதியாகத் தியானம் செய்யலாம்.

%d bloggers like this: