வீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி?

சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவை நிஜமாக்க உதவுவது வீட்டுக் கடன். வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைச் சரியாக நிர்வகித்து ஒவ்வொரு மாதமும் கட்டிமுடிக்கும்போது உங்களுக்குள் நிம்மதி ஏற்படுவதுடன்,  நீங்கள் செலுத்தும் தொகையால் வீட்டுக் கடன் தொகையின் அளவும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.

உங்கள் வீட்டுக் கடன் மாதத் தவணைக்கான செலவைக் குறைப்பது, அதை எப்படி  நிர்வகிப்பது என்பதைப் பார்ப்போம்.

திரும்பக் கட்டும் காலம்

வீட்டுக் கடன் மாதத் தவணையை, உங்களது வருடாந்திர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். விண்ணப்ப தாரரின் வருவாய் அடிப்படையில், 35-50% வரையிலான தவணையைக் கடன் வழங்கும் நிறுவனம் தீர்மானிக்கும். 

கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் நீண்டதாகத் தேர்ந்தெடுத்தால், கட்ட வேண்டிய மாதத் தவணை குறைவாக இருக்கும். எனவே,  அது உங்களுடைய பணப் புழக்கத்தைப் பாதிக்காது.

அதேநேரத்தில், உங்களால் அதிக இ.எம்.ஐ கட்ட முடியும் என்கிறபட்சத்தில், திரும்பக் கட்டும் காலத்தைக் குறைத்து நிர்ணயிக்கலாம். இதன்மூலம், வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும்.

மாதத் தவணையைக் குறைக்கலாம்

உங்களிடம் கூடுதல் பணம் இருந்தால், அதை முன்கூட்டியே செலுத்தி, வீட்டுக் கடனின் மாதத் தவணையைக் குறைக்கலாம். அதற்கு எத்தகைய கட்டணமும் கிடையாது. இதன்மூலம், உங்களின் நிதிச்சுமை குறையும்.

கடனை முன்கூட்டியே கட்டிமுடித்தல்

வீட்டுக் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையைக் குறைக்கவும் மற்றும் மாதத் தவணைக்கான காலத்தைக் குறைக்கவும் உதவுவது, குறிப்பிட்ட தொகையை மொத்தமாகச் செலுத்தும் ப்ரீ-பேமென்ட் முறை. 

மாறுபடும் வட்டி முறையில் பெறப்பட்ட கடன்களில், பகுதிக் கடனை முன்கூட்டியே கட்டுவதற்கு வங்கிகளும், வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் எந்தவிதமான கட்டணத்தையும் விதிப்பதில்லை. அதேபோல, ப்ரீ-பேமென்ட் தொகை, பெரிய தொகையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ரூ.5,000, ரூ.10,000  என்றுகூட இருக்கலாம்.

முதலீடு செய்துள்ள பங்குகள் மற்றும் ஃபண்டுகள், பத்திரங்கள், சொத்து விற்பனை, போனஸ், வைப்பு நிதித் திட்டங்களை முடித்தல், வரிச் சேமிப்பு முதலீடுகளின் முதிர்ச்சி போன்ற பல்வேறு வகைகளில் கிடைக்கும் தொகையைக் கொண்டு, வீட்டுக் கடனுக்கான தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவே செலுத்தலாம்.

உங்கள் சேமிப்பினை நிர்வகித்தல்

பி.எஃப், பி.பி.எஃப், தபால் நிலைய வைப்பு நிதிகள் போன்ற உங்களுடைய அனைத்து சேமிப்புகள் மற்றும் முதலீடுகளின் பட்டியலை முதலில் உருவாக்கவும். போதுமான அளவு வருமானம் தராத, தேவையற்ற முதலீடுகளை நீக்குவதன்மூலம் உங்களது பணப் புழக்கத்தை அதிகரிக்கலாம். அத்தகைய முதலீடுகளை முடித்துவிட்டு, அந்தத் தொகையை உங்கள் வீட்டுக் கடன் தவணைக்குப் பயன்படுத்தி னால் மிகுந்த பலனளிக்கும்.

குறைந்த வட்டிக்கு மாறுதல்

பாக்கி இருக்கும் ஒட்டுமொத்த வீட்டுக் கடன் தொகையை, குறைவான வட்டிகொண்ட மற்றொரு கடன் வழங்கும் நிறுவனத்துக்கு மாற்றலாம். வங்கிகள் / வீட்டு வசதி நிறுவனங்கள் பல்வேறு கால இடைவெளிகளில் வட்டியை மாற்றும் என்பதால், கடன் வாங்குபவர்கள் வட்டி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

எனினும், பிற நிறுவனத்துக்குக் கடனை மாற்றுவது கூடுதல் செலவு மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், உங்களின் தற்போதைய நிறுவனத்திடம் வட்டியைக் குறைக்கக் கோரிக்கை வைப்பது சிறந்த முயற்சியாகும்.

மாதத் தவணையைத் தவறவிடக் கூடாது

நல்ல கடன் வரலாற்றை நாம் பராமரிப்பது மிக அவசியம். இ.எம்.ஐ தவணையைக் கட்டாமல்  தவறவிடுவது, கடன் வழங்குவோர் உங்கள்மீது கொண்ட நம்பகத்தன்மையைப் பரிசீலிக்கும் படியும் செய்யலாம். தவணையைத் தவறவிடுவது உங்களுடைய கிரெடிட் புள்ளிகளைப் பாதிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் கிரெடிட் கார்டோ வேறு ஏதேனும் கடனோ பெற முயற்சி செய்யும்போது, அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு மறுக்கப்படலாம். எனவே, வீட்டுக் கடன் தவணையை மிகச் சரியாகக் கட்டி முடிப்பதில் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்படுங்கள்.

%d bloggers like this: