இரண்டே நிமிடங்களில் ஆரோக்கியம்

ப்போதான் தேதி இருபதாகுது. அதுக்குள்ள பட்ஜெட்ல பள்ளம்…’ மாதச் சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்புகிற வாசகம். ஆனால், இதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றும் இருக்கிறது. பணம் அல்ல, மாதம் முழுவதுமே நாம் எதிர்கொள்ளும் பிரச்னை. அது, ‘நேரமின்மை.’

‘டைமே இல்லை பாஸ்…’ என்பது நம்மில் பலரும் குறைபட்டுக் கொள்ளும் விஷயம். நேரம் விலைமதிப்பற்றது. எந்த அளவுக்கு நேரம் நமக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அது குறித்த நம் பார்வையும் முக்கியம். ‘எனக்கு டைமே இல்லை…’ என்று சொல்லிக்கொண்டு அன்றாட வாழ்வில் அவசர அவசரமாக நாம் செய்யும் செயல்கள், சில நேரங்களில் உடல்ரீதியான பல இன்னல்களை நமக்குக் கொடுத்துவிடும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், மன அழுத்தம் என்று பல பிரச்னைகள் ஏற்படக் காரணமாகிவிடும்.

தீர்வுதான் என்ன?

அன்றாட வாழ்வில் செய்யும் சில வேலைகளில் உங்களுக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க முடிந்தால் போதும். அது செரிமானம்,  எடைக் குறைப்பு, இன்சுலின் அளவைச் சீராக வைத்திருப்பது என  நன்மைகளை அள்ளித் தரும்.  நம்மில் பலர் காலை உணவைப் போகிற போக்கில் அள்ளிப் போட்டுக்கொண்டு போவார்கள்; இரவு உணவை அடுத்தடுத்த வேலைகளுக்கு இடையே அவசரமாக உட்கொள்வார்கள். இந்தப் பழக்கங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. இவற்றையெல்லாம் நம்மால் தவிர்க்க முடியும்; எப்படி?

 

பல் துலக்கும்போது வேறு சிந்தனைகள் வேண்டாமே!

பற்களைத் துலக்கும்போது கவனத்தை அதில் மட்டும் செலுத்த வேண்டும். நேற்று நடந்தது, அடுத்து செய்யவேண்டியது என்று மனதை அலைபாயவிடாமல் பற்களை மட்டும் கவனித்துத் துலக்க வேண்டும். இப்படி அக்கறையோடு பல் துலக்குவது, பற்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவதுடன் அவை பளிச்சிடவும் செய்யும்.


 

காலை நேரத்தில் கறார்!

சாப்பிடும் உணவை நன்கு மென்று, சுவைத்துச் சாப்பிடுங்கள். எதை அருந்தினாலும் மெதுவாக ரசித்துக் குடியுங்கள். பொறுமையாக, மூச்சை இழுத்துவிட்டுச் சாப்பிடும்போதும், பானங்களை அருந்தும்போதும் இதயத் துடிப்பு சீராகும். இதற்கெல்லாம் இரண்டே நிமிடங்கள்தான் தேவை. இதற்காக உங்கள் தூக்கத்தைத் துறந்துவிட்டு, சீக்கிரமே எழுந்துகொள்ள வேண்டும் என்கிற தேவையும் இல்லை.


 

கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்!

மன அழுத்தத்தோடு இருக்கும்போது உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துகள் கிடைப்பதிலும் பிரச்னைகள் வரலாம். சாப்பிடும்போது, உணவுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் சின்னதாக ஒரு நன்றி சொல்லிட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். அது, உங்களுக்கு  மன அமைதியைக் கொடுக்கும். குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியாத நேரங்களிலும் இதைச் செய்யலாம். இதற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லை. ஏனென்றால், மதம் என்பது தனிமனித விருப்பம், ஆனால் நம்பிக்கை, எல்லோருக்குமானது.

கை கழுவலாமே!

நம் மனதைக் குளிர்விக்கவும், எண்ணங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கவும், டென்ஷனைக் குறைக்கவும் தண்ணீரைவிடச் சிறந்த மருந்து வேறு இல்லை. குறிப்பிட்ட இடைவெளிகளில் கைகளையும் முகத்தையும் கழுவுவதுகூட நல்லது.

உறக்கத்துக்கு முன்னர்

தூங்கப் போவதற்கு முன்னதாக, அன்றைய தினம் எதிர்கொண்ட பிரச்னைகளை விட்டுவிட்டு, சந்தோஷமான சின்னச் சின்ன நிகழ்வுகளை மட்டும் நினைவுபடுத்திக்கொண்டு, புன்னகையோடு உறங்கப் போகவும். இது உங்கள் மனதை லேசாக்கும். முடிந்தால், உங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதத் தருணங்களை அசைபோடுங்கள். அவை, உங்களை இனிய நித்திரையில் ஆழ்த்தும். மேலே குறிப்பிட்டவற்றுக்கெல்லாம் அதிகபட்சமாக நீங்கள் ஒதுக்கப்போவது இரண்டு நிமிடங்கள்தான். இது, உங்கள் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு தரப்போவதில்லை. ஆனால், இந்த இரண்டு நிமிடங்கள் உங்களுக்கு நிறைய ஆச்சர்யங்களையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.

%d bloggers like this: