கர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி!

ர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தனது தன்மானப் பிரச்னையாக நரேந்திர மோடி நினைத்தார். எந்தவொரு பிரதமரும் ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு இத்தனை நாள்கள் பிரசாரம் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்குக் கர்நாடகாவில் இருந்தார் மோடி. மத்திய அமைச்சரவையே கர்நாடகாவில்தான் இருந்தது. எடியூரப்பா – சித்தராமையா ஆகிய இருவருக்கு இடையிலான தேர்தல் என்பது மாறி, நரேந்திரமோடி – சித்தராமையா ஆகிய இருவருக்கான தேர்தலாக இது மாறியது. காங்கிரஸின் வாக்குகளை தேவகவுடா உடைப்பார், பி.ஜே.பி வெல்லும் என்பதுதான் மோடி போட்ட கணக்கு. ஆனால், 38 இடங்களை வென்று, தனது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை தேவகவுடாவும் குமாரசாமியும் உருவாக்கினார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருக்கும் என்றும் மோடி நினைத்தார்.

ஆனால், 104 இடங்களில் வென்ற பி.ஜே.பி-யை விட, 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளது. இதனை மிக மோசமான சிக்னலாக பி.ஜே.பி தலைமை பார்க்கிறதாம். மக்களின் மனோபாவம் பி.ஜே.பி-க்கு எதிராக இருக்கிறது என மத்திய உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளதாம்.
வரும் டிசம்பர் மாதத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோன்ற தேர்தலை, ‘மினி பார்லிமென்ட் தேர்தல்’ என்பார்கள். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள்தான் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அப்படிச் சொல்வார்கள். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்குத் தயாராக வேண்டியதுதான் என்று டெல்லி பி.ஜே.பி மேலிடம் நினைத்ததாம். அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள நினைத்தார்களாம். ஆனால், கர்நாடகாவில் வாங்கிய வாக்குகள் மூலமாக இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த நிலைமைதான் எதிரொலிக்கும் என்று நினைத்த மோடி, மனம் மாறிவிட்டார் என்றும் சொல்கி றார்கள். மேலும், பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் அனைத்தும் மனரீதியாக ஒன்றுசேர்ந்திருக்கும் இந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதும் நல்லதல்ல என்றும் பி.ஜே.பி தலைமை நினைக்கிறதாம்.
தேசிய அளவில் சில வாரங்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளிடம் மோதல் போக்கு இருந்தது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா, இல்லையா என்பதே இந்த மோதலுக்குக் காரணம். காங்கிரஸைச் சேர்த்துக்கொண்டு சிலரும், காங்கிரஸ் இல்லாமல் சிலரும் கூட்டணிக்கான முயற்சிகளைச் செய்து வந்தார்கள். ‘இவர்களெல்லாம் எங்கே ஒன்றுசேரப் போகிறார்கள்?’ என்ற சந்தேகத்தைத்தான் இவர்களது வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுத்தின. இந்த நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்தது. எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கொடுக்க, ‘நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு’ என்று தேவகவுடாவும் அறிவித்துவிட்டார்.    பி.ஜே.பி-க்கு எதிரான முக்கியக் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர தேவகவுடா முயற்சி செய்துவருகிறார். இதனையும் பி.ஜே.பி எதிர்பார்க்கவில்லை. எனவே, கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவு என்பது அகில இந்தியத் திருப்பங்களை உருவாக்குவதாக அமைந்து விட்டது.

%d bloggers like this: