சீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்!

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பு டாக்டர்களின் பற்றாக்குறை, 80 சதவீதம் உள்ளது. 30 – 40 ஆண்டுகளுக்கு முன், பொருளாதார வசதி இல்லாதவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்வர்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது.ஆனால், இன்று பெரும்பாலான அரசு

மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகளே நடப்பதில்லை. காரணம், அறுவை சிகிச்சை செய்வதற்கு, மயக்க மருந்து தருவதற்கு, அந்தத் துறையில் பயிற்சி பெற்ற டாக்டர்கள் இல்லை; தேவையான மகப்பேறு மருத்துவர்களோ, குழந்தைகள் சிறப்பு டாக்டர்களோ கிடையாது.
பொருளாதார வசதி குறைவான ஒருவர், வயிறு வலிக்காக அரசு மருத்துவமனையில் சேருகிறார். அவசரமாக அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். வலியோடு இரண்டு, மூன்று நாட்கள் படுத்து இருப்பார். அதன்பின் அவருக்கு புரியும், ‘இங்கு படுத்து இருப்பதால் எந்த பலனும் இல்லை; நமக்கு ஆபரேஷன் செய்யவே மாட்டார்கள்’ என்று!
வேறு வழியில்லாமல், தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்வர், அவரது மனைவி. அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
மருத்துவக் கட்டணத்திற்காக, தங்களுக்கு சொந்தமான ஒரே வீட்டையோ, வாழ்வாதாரத்திற்கான கால் ஏக்கர் நிலத்தையோ விற்பர். சில சமயங்களில் தாமதமாக செய்யப்படும் அறுவை சிகிச்சை, பலன் தராமல் போகும்; நோயாளி இறந்து விடுவார்.
அந்தக் குடும்பம், வீட்டில் முக்கியமான நபர் ஒருவரோடு சேர்த்து, சொத்தையும் இழந்து தவிக்கும். எல்லாவற்றையும் இழந்த அதிர்ச்சி, ஆத்திரத்தில் மருத்துவமனையை கொளுத்துவர். இது இயல்பு.
மருத்துவ கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, எங்களைக் கேட்டனர். இதய ஆபரேஷன் செய்வதற்கான செலவு, தற்போது இரண்டு லட்சம்; அதை, 50 ஆயிரம் ரூபாயாகக் குறைத்து விட்டேன்.
ஆனால், மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், இந்தக் கட்டணத்தையும் செலுத்தும் நிலையில் இல்லை; காரணம், அவர்களிடம் இந்த அளவு பணம் கிடையாது.
டாக்டர் – நோயாளி உறவு சிறப்பாக இருக்க வேண்டும் எனில், அரசு மருத்துவமனைகள் முழுமையாக, சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பிட்ட சிறப்பு வசதி இல்லை அல்லது பிரத்யேக கவனம் தேவைப்படும் நோயாளியை மட்டும், தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
அப்படிச் செய்தால், ‘உயிரை காக்க, உடனடி தேவைக்காகவே, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளோம்’ என்பது நோயாளிக்கும், அவர் குடும்பத்திற்கும் புரியும். செலவு செய்த பணம், தேவையான மருத்துவ கட்டணம் என்பது தெரிந்தால், தனியார் மருத்துவமனைகள் மீது சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வர வாய்ப்பில்லை.
மருத்துவத் துறை என்பது, உயிர் காக்கும் தொழில். எனவே, இங்கு மற்ற எந்தத் தொழிலையும், வர்த்தகத்தையும் போல, பாதுகாப்பான எதிர்காலம் பற்றி விவாதிக்க முடியாது; எப்படியாவது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதை மட்டுமே, நாங்கள் யோசிக்க முடியும்.
நவீன மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சி, மருத்துவத் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்… சிகிச்சையில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், பணம் வசூலிப்பதற்காகவே, இதுபோல செய்கின்றனர் என்ற கண்ணோட்டத்தை தருகிறது.
அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக, 14 லட்சம் படுக்கைகள் உள்ளன. இதில் பாதி எண்ணிக்கையே, தனியார் மருத்துவமனைகளில் உள்ளது. இந்த நிலையில், 80 சதவீதத்திற்கும் அதிகமான இரண்டாம், மூன்றாம் நிலை சிகிச்சைகளை, தனியார் மருத்துவமனைகளே செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்; அது சாத்தியம் கிடையாது.
டாக்டர்கள், சிறப்பு மருத்துவர்களை நாங்கள் உருவாக்கவில்லை; அவர்கள் எல்லாம் அரசு முறைப்படுத்தியுள்ள அமைப்பின் கீழ் உருவாகின்றனர். எங்களுடைய கண்களையும், கைகளையும் கட்டி விட்டு, மாரத்தானில் ஓட வேண்டும் என்று சொன்னால், எப்படி முடியும்?
சுகாதார துறையின் காவலர், அரசு தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தற்போது, மருத்துவ கட்டணத்தை தனியார் மருத்துவ மையங்கள் குறைக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
அரசு மின் வினியோகம் செய்வதைப் போலவே, நாங்களும் செயல்படுகிறோம். பணக்காரர்களிடம் முழு தொகையையும் வாங்குகிறோம். பொருளாதார வசதி இல்லாதவர்களிடம், குறைந்த கட்டணம் வசூலித்து, சமன் செய்து கொள்கிறோம்.
கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால், பணக்காரர்களிடமும் குறைந்த கட்டணத்தையே வாங்க வேண்டும். அப்போது, வசதி இல்லாதவர்களுக்கு, குறைந்த செலவில் மருத்துவம் செய்ய எங்களால் முடியாது.
டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது, தாக்குதல் நடத்துவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை எனில், சீனாவில், நிறைய டாக்டர்கள், நோயாளிகளின் குடும்பத்தினரால் கொல்லப்படுவதைப் போன்றதொரு நிலை இங்கேயும் வரலாம்.
டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி,
தலைவர், நாராயணா ஹெல்த், பெங்களூரு.
devishetty@narayanahealth.org

%d bloggers like this: