நிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி?

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கேரளாவிலிருக்கும் கண்ணூர் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்காகச் சென்றிருந்தார். சில  நாள்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்திருக்கிறது. அதனால், உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெரியசாமி நிபா வைரஸ் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரவின. `தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் தாக்கம் இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், பெரியசாமி நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து  மாநில சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். 

“முதலில், இந்தச் செய்தியே ஆதாரமற்றது. பெரியசாமி இறக்கவில்லை. திருச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்கு இல்லை.  பரிசோதனைகளிலும் அப்படியான முடிவுகள் எதுவும் தெரியவில்லை. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அதோடு நிபாவின் பாதிப்பால்தான் காய்ச்சல் வந்திருக்கிறது என்பதை இங்கிருக்கும் மருத்துவமனைகளில் உறுதிசெய்ய முடியாது. ரத்த மாதிரி எடுத்து, புனேவிலிருக்கும் தேசிய வைரஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பித்தான் உறுதிசெய்ய முடியும். அதைவிட்டுவிட்டு, உறுதிப்படுத்தாமல், தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பக் கூடாது’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

“நிபா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை மையம் இங்கு இல்லாதநிலையில், ஒருவருக்கு அந்த பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது எப்படி உறுதி செய்யப்படுகிறது, அதற்கான மருத்துவ நடைமுறைகள் என்னென்ன?’’  – தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்…

“காய்ச்சல் வருவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று எனப் பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கான காரணியை கண்டறிந்த பிறகுதான் அது எதனால் வந்தது எனக் கண்டறிய முடியும். இந்தக்  காய்ச்சலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய காய்ச்சல்கள் இருக்கின்றன. இதில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மலேரியாவில் கால்சிபாரம் வகை போன்ற காய்ச்சல்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இதுபோன்ற உடனடி பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தால், சாதாரணக் காய்ச்சல் பரிசோதனைகளுடன் ஏ.இ.எஸ் சர்வே. (Acute Encephalitis Syndrome (AES)) என்னும் பரிசோதனை செய்யப்படும். டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற தீவிர வைரஸ் பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிய முடியும். இந்த பரிசோதனைகளிலெல்லாம் மேற்கண்ட நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும். அதன் பிறகே அவருடைய ரத்தம், சளி போன்ற மாதிரிகள் புனேவிலுள்ள தேசிய வைரஸ் சோதனை மையத்துக்கு  (National Institute of Virology) அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை. அங்கு உறுதி செய்யப்பட்ட பின்னரே, அது என்ன நோய் பாதிப்பால் வந்திருக்கிறது என்பது தெரியவரும். 

பெரியசாமியைப் பொறுத்தவரை, நிபா பற்றிய அச்சத்தினாலும், அதனால் ஏற்பட்டிருக்கும் பீதியினாலும் நமக்கு வந்திருக்கலாம் என அச்சப்பட்டிருக்கிறார் அவர். ஏற்கெனவே கேரளாவில்  சாலைப்பணிக்கு அவர் சென்று வந்தது இதற்குக் காரணம். மருத்துவர்களும் முன்னெச்சரிக்கையாக அவரைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இதனால், இது நிபா வைரஸ் பாதிப்பு என தன்னிச்சையாக முடிவுக்கு வந்து பரப்பிவிட்டிருக்கிறார்கள். அதோடு அவர் இறந்துவிட்டதாகவும் செய்தி பரப்பியிருக்கிறார்கள் இதன் விபரீதம் புரியாதவர்கள். ஆனால், உண்மையில், அவருக்கு நிபாவுக்கான அறிகுறிகளே இல்லை.  நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றுதான் முதற்கட்ட பரிசோதனையிலேயே தெரிய வந்திருக்கிறது. சாதாரணக் காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் உடல்நிலை தேறி வருகிறது. அதனால் வீன் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்றவரிடம், “நிபா வைரஸை பரிசோதிப்பதற்கான பரிசோதனை மையங்கள் தமிழகத்தில்  அமைக்கப்படுமா?’’ என்று கேட்டோம்.  

“வைரஸ் தாக்குதலைக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் இந்தியாவில் புனே மற்றும் டெல்லியில் மட்டுமே இருக்கின்றன. இது மட்டுமே போதுமானது. இதற்கான கட்டமைப்புகளும் பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாக இருக்க வேண்டும். அந்தப் பரிசோதனை மையங்களுக்கு மாதிரிகளை அனுப்பும்போது மிகவும் கவனமாகப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். அதற்கென பிரத்தியேகமாக உள்ள கன்டெய்னர்களில் வைத்து விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும். 

இந்த நடைமுறையில், சிறிய தவறுகள் ஏற்பட்டால்கூட அங்கிருந்து மற்ற இடங்களில் வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடும். கிருமிகள், அணுகுண்டுபோல பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதனால், பல இடங்களில் வைக்க முடியாது. வெளிநாடுகளிலும் குறைவான சோதனை மையங்கள் மட்டுமே இருக்கின்றன. விலங்குகளுக்கான நோய் பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனை மையம், போபாலில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற தீவிரமான நோய்க் கிருமிகளைக் கண்டறியும் சோதனை மையங்கள் குறைவாக இருந்தாலே போதுமானது. பிற தீவிரமற்ற தொற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலேயே போதிய எண்ணிக்கையில் பரிசோதனை மையங்கள் இருக்கின்றன’’ என்றார் குழந்தைசாமி.

ஏற்கெனவே,  திருச்சி மாநகர சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா, திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பதை மறுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: