மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!

ழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.
‘‘அவை என்ன?”

‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்தேன். தூத்துக்குடியில் துப்பாக்கிகளைக் கையாண்டவர்களுக்கு ‘ஆபரேஷன் Center Mass’ தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

‘‘அது என்ன Center Mass?’’
‘‘துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கும்போது துப்பாக்கியின் வகைகள், ரேஞ்ச், தோட்டாக்கள் பற்றியெல்லாம் பாடங்கள் நடத்தப்படும். அதில், Center Mass பற்றியும் விளக்குவார்கள். கலவரத்தை அடக்குவதற்காகச் சுட வேண்டுமென்றால், காலில்தான் சுடுவார்கள். ஆனால், Center Mass என்பது வேறுவகைத் தாக்குதல். அதாவது, தோட்டாக்களுக்குச் சேதாரம் இல்லாமல் உயிரை எடுக்கும் தாக்குதல் இது. எங்கு சுட்டால் இலக்கு தவறாதோ, உயிர் உடனே போகுமோ, அங்கே சுடுவது. வயிற்றுக்கு மேலே இருக்கும் உடல்பகுதிதான் அகலமானது. உயிர் காக்கும் உறுப்புகள் இங்கேதான் உள்ளன. இந்த இடங்களைக் குறிவைத்துச் சுடுவதைத்தான், Center Mass எனப் பயிற்சியில் குறிப்பிடுவார்கள். அதாவது, உடலின் மத்தியில் அகன்று இருக்கும் பகுதியில் சுடுவது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இதற்காக வைக்கப்படும் மனித உருவங்களில், தலையிலும் மார்பிலும் சுட வைப்பார்கள். தூத்துக்குடியில் பலரும் இந்த இடங்களில் குண்டு பாய்ந்தே இறந்துள்ளனர். ‘இப்படித்தான் சுட வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு போயுள்ளது’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.’’
‘‘இப்போதுகூடத் துப்பாக்கிச்சூடு பற்றித் தனக்குத் தெரியாது என்ற தொனியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரே?”

‘‘எடப்பாடி சொல்வதில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. 100 நாள்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முதல்வரைச் சந்தித்து, ‘தூத்துக்குடியில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. விரைந்து முடிவெடுங்கள்’ என்றனர். அவரோ, ‘இதில் நான் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. தலைமைச் செயலாளரிடம் பேசி, நீங்களே முடிவெடுங்கள்’ என்று சொல்லிவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் பல விஷயங்களை நேரடியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்புகொண்டுதான் தெரிவிக்கிறது. அவர், அந்தத் தகவலை முதல்வரிடம் சம்பிரதாயத்துக்குத் தெரிவித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறார். இதனால்தான், முதல்வர் இதிலிருந்து கழன்றுகொண்டார். அந்த அடிப்படையில்தான் முதல்வர், ‘எனக்குத் துப்பாக்கிச்சூடு பற்றி எதுவும் தெரியாது’ என்று குறிப்பிட்டார்.’’
‘‘போலீஸ் தரப்பில் எங்கு ஓட்டை விழுந்தது?”
‘‘அண்மையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்களை ரகசியமாகத் திரட்டினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்தார், தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கவனிக்கும் உளவுப்பிரிவு ஐ.ஜி-யான ஈஸ்வரமூர்த்தி. அவரே உட்கார்ந்து ஸ்கெட்ச் போட்டு, போராட்டக்காரர்கள் கிளம்பும் இடத்திலேயே அவர்களுக்கு ‘செக்’ வைத்து வரவிடாமல் தடுத்தார். கடைசியில் சில ஆயிரம் பேர்தான் சென்னைக்கு வரமுடிந்தது. அவர்களைச் சென்னை போலீஸ் ஈஸியாகக் கையாண்டது. அதுவே, கூட்டம் ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தால், சென்னை போலீஸ் தடுமாறிப்போயிருக்கும். அதற்குக் காரணமான ஈஸ்வரமூர்த்தி இப்போது ஹைதராபாத் போலீஸ் அகடமியில் சிறப்புப் பயிற்சிக்காகச் சென்றுவிட்டார். ‘அவர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது’ என்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் தூத்துக்குடியில் கடையடைப்பு நடந்தபோது, ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத கூட்டம் கூடியது. அதைப்பார்த்த மத்திய உளவுத்துறையினர், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் போய், ‘100-வது நாள் போராட்டத்தில் கூட்டம் லட்சத்தைத் தாண்டலாம்’ என எச்சரித்தார்களாம். ஆனால், எஸ்.பி அலட்சியம் காட்டினார் என்கிறார்கள்.’’
‘‘போராட்டம் இந்த அளவுக்குக் கோரமான முடிவுக்குப் போக என்ன காரணம்?”
சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்து, ‘இந்தப் போராட்டங்களை விரைவில் முடியுங்கள்’ என்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார் களாம். ‘இதுபோன்ற போராட்டங்கள் நீடித்தால், அடுத்து வரப்போகும் திட்டங்களுக்கு இதைவிட எதிர்ப்பு எழும். அதனால், போராடும் மக்களுக்கும் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இப்போதே மரண பயத்தைக் காட்டிவிட வேண்டும்’ என்பது மத்திய உள்துறையின் உத்தரவாம். ‘அதன்பிறகுதான் துப்பாக்கிச்சூடுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன’ என்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் யார், தேவாலயங்களில் முக்கிய ஸ்தானத்தில் இருப்பவர்கள் யார், யாரைச் சுட்டுக்கொன்றால் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்ற விவரங்கள் துல்லியமாக எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சிலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.’’

‘‘உண்மையில் தூத்துக்குடியில் உயிர்ப்பலிகள் எத்தனை?’’
‘‘அதிகாரப்பூர்வ கணக்கு இப்போதுவரை 13 என்று சொல்லப்படுகிறது. ஆனால், உள்விவரங்களை அறிந்தவர்கள் அது இரண்டு மடங்கைத் தாண்டும் என்கிறார்கள். ‘கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் தாக்கப் பட்டுச் சிலர் உயிரிழந்துள்ளனர். அந்தச் சடலங்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்போது தூத்துக்குடியில் யாராவது காணாமல் போய்விட்டதாகப் புகார் வந்தால், அப்படி புகார் செய்ய வருபவர்களை உடனடியாகப் பாளையங்கோட்டையில் போய்ப் பார்க்குமாறு அனுப்புகிறது தூத்துக்குடி போலீஸ்’ என நமக்கு நெருக்கமான சோர்ஸ் ஒருவர் சொன்னார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது திரேஸ்புரம் பகுதி மக்கள் சிலர் கூட்டமாக  போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த போலீஸார், உடனடியாக வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றுள்ளனர். அந்த வாகனத்தைப் பொதுமக்கள் மறித்துள்ளனர். ஆனால், அவர்களை அந்த வேனை வைத்தே ஏற்றிக் காயப்படுத்தியுள்ளது போலீஸ். அப்படி அடிபட்டவர்கள் சிலரை அள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் போட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரையும் அங்கே போலீஸ் நெருங்கவிடவில்லை. அதனால், அவர்களில் இறந்தவர்கள் யார், காயமடைந்த வர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. அதுபோல, திரேஸ்புரம் பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. வெளியில் வீடு பூட்டியிருந்தாலும், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆட்கள் இருக்கிறார்களா என்று சோதனையிடும் போலீஸ், அந்த வீட்டைச் சூறையாடிவிட்டுத்தான் வருகிறது.”
‘‘கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளிலும் கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதற்கு என்ன காரணம்?’’
‘‘முதன்மைக் காரணம், இந்தப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குப் பரவிவிடக்கூடாது. சாதி, மத அடிப்படையில் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட அந்த மாவட்டங்களில் சாதிய ரீதியாகவும், மத அடிப்படையிலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கிடைத்துவிடக் கூடாது. அதுபோல, சாகர்மாலா திட்டத்துக்கு இப்போதே கன்னியாகுமரியில் எதிர்ப்புக் கிளம்பிப் பிரச்னையாகிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்காரர்களுக்கும் இந்தக் கலவரத்தைச் சாக்காக வைத்தே உயிர் பயத்தைக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் போலீஸின் திட்டம்” என்றபடி கழுகார் பறந்தார்.

%d bloggers like this: