மெள்ளக் கொல்லும் உப்பு!

சோடியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு தனிமங்கள் ஒன்றிணைந்ததே உப்பு. மற்ற தனிமங்களைவிட உப்பில் சோடியம் அதிகம் உள்ளது. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பில் 90 சதவிகிதத்துக்கும் மேல் சோடியம் (NaCl) உள்ளது. ரத்தத்தில் உப்பின் அளவு சராசரியாக லிட்டருக்கு 135 – 140 mEq/L (Milli equivalents/ Litre) இருக்க வேண்டும்.

உப்புச்சத்துக் குறைபாடு நோய் (Hyponatremia)

* உப்பின் அளவு  135 mEq/L-க்கு குறைவாக இருந்தால் அது உப்புச்சத்துக் குறைபாடு நோய் (Hyponatremia) எனப்படுகிறது. அதிகத் தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளாதது போன்ற காரணங்களால் உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.

* உப்புச்சத்துக் குறைபாட்டால் வயிற்றுப்போக்கு, பசி, மயக்கம், உடல் சோர்வு, வாந்தி, குறைந்த ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகள் ஏற்படும்.

* ரத்தத்தில் உப்பின் அளவு தொடர்ந்து குறைந்தால் மூளையின் செல்களில் வீக்கம் ஏற்படும். இதனால் மூளையில் நீர் கோத்து வலிப்பு ஏற்படும். கோமா நிலைகூட ஏற்பட வாய்ப்புண்டு. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.

 

உப்பு உடலில் அதிகம் சேரும்போது என்ன நடக்கிறது?

* ரத்தத்தில் உப்பு அதிகம் சேர்ந்தால், அதை நீர்த்துப்போகச் செய்ய ரத்தத்துடன் நீர் சேர்ந்து கொள்ளும். இதனால் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் திரவமும், ரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து இதயத்தின் செயல்திறன் கூடும். இதனால் அதிக ரத்த அழுத்தம் உருவாகிப் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும். இந்நிலை தொடர்ந்தால் இதயம் செயலிழக்க நேரிடும்.

* உடலில் உப்பின் அளவு அதிகமானால் இதயம், பெருந்தமனி ஆகியவை ரத்த அழுத்தம் அதிகரிக்காமலே நேரடியாகப் பாதிப்புக்குள்ளாகும்.

உப்பு மிகைப்பு நோய் (Hypernatremia)

* ரத்தத்தில் உப்பின் அளவு 145 mEq/L-யைவிட அதிகமானால் உப்பு மிகைப்பு நோய் (Hypernatremia) ஏற்படும். உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது, உப்பில் பதப்படுத்திய உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, உப்புத் தண்ணீரைக் குடிப்பது போன்ற காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

* உப்பு மிகைப்பு நோய் வந்தால் அதிக தாகம் எடுக்கும். உதட்டில் வெடிப்பு, சருமத்தில் வறட்சி, சிறுநீரகப் பாதிப்புகள், குடல் செயல்திறன் குறைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

* சருமம் வறண்டுபோகும். உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். செல்கள் சுருங்கி மூளை சேதமடையும். மூளையில் ரத்தக் குழாய்கள் சேதமடைந்து பக்கவாதம் ஏற்படும். இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

* 50 வயதுக்கு மேற்பட்டோர்

* குறைந்த ரத்த அழுத்தம் அல்லது அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

* சர்க்கரைநோய் உள்ளவர்கள்

* சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்

உப்பின் தேவை

* ஒரு நாளைக்கு உடலுக்கு 5 முதல் 6 கிராம் உப்பு (சோடியம்) தேவைப்படும். இது கிட்டத்தட்ட ஒரு டீஸ்பூன் அளவு மட்டுமே.

தூள் உப்பு/கல் உப்பு

* சுத்திகரிக்கப்பட்ட உப்பு (Refined Salt) எனப்படும் தூள் உப்பில், சோடியம் குளோரைடு தவிர மற்ற அனைத்துத் தனிமங்களும் நீக்கப்பட்டுவிடுகின்றன. இதில் கடல் உப்பு எனப்படும் கல் உப்பைவிட 40 சதவிகிதம் சோடியம் (உப்புத் தன்மை) அதிகமுள்ளது. தூள் உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதால் தைராய்டு பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.

அதிக உப்பால் புற்றுநோய் வருமா?

* உப்பு உடலில் அதிகம் சேர்வதால் புற்றுநோய் ஏற்படாது. ஆனால், அதிக உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்த காரமான உணவுகளைத் தினமும் உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் வரும் வாய்ப்புண்டு.

சோடியம் உப்பு / பொட்டாசியம் உப்பு

* உணவுப் பொருள்களுடன் சேர்த்து உண்ணும் சோடியம் உப்புக்கு நேர் எதிர் தன்மை கொண்டது பொட்டாசியம் உப்பு.

* உடலில் பொட்டாசியம் அதிகம் சேர்ந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதனால் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் குறையும்.

* நம் உடலுக்கு சோடியம் உப்பைவிடப் பொட்டாசியம் உப்பின் தேவை அதிகம்.

* பொட்டாசியம் உப்பு, பழங்கள், பால், கீரை உணவு, பச்சைக் காய்கறிகள், பருப்பு மற்றும் உலர் பழங்களில் நிறைந்திருக்கிறது.

%d bloggers like this: