எனக்கு அதிக மழை வேண்டும்..!" – சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா?

னிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப்படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக

இருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் பெரிதும் தேவையாக இருக்கும் தண்ணீர் நம்மிடம் போதுமானதாக இருக்கிறதா? நம்முடைய உரிமையான காவிரிக்காக கர்நாடகாவிடமும் முல்லைப் பெரியாற்றுக்காக கேரளாவிடமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரும் கிடைத்தபாடில்லை. கேப்டவுனில் இருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தத் தண்ணீர் பற்றாக்குறை பெரும்பிரச்னையாகவே இருக்கிறது. அதனைத் தீர்க்க அறிவியல்ரீதியாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரை குடிநீராக்குதல், அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளை உருக்குவது, மேக விதையூட்டல் (Cloud Seeding) மூலமாகச் செயற்கை மழையினைப் பெறுவது எனப் பல முறைகள் சோதனை முயற்சியிலேயே உள்ளன. சில முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் படுகின்றன. அப்படி ஒரு முயற்சியைச் சீனா மிகப்பெரிய அளவில் செயல்படுத்த முனைந்துள்ளது. 

உலகிலேயே மிக அதிக பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்கும் முயற்சியில் சீனா நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை பெரியளவில் திபெத் பீடபூமியில் அமைத்துள்ளது. திபெத் பீடபூமி உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி. பத்தாயிரக்கணக்கான எரி உலைகள் (Burning Chambers) திபெத்திய மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியின் சராசரி மழைபொழிவை விட 10 பில்லியன் க்யூபிக் மீட்டர் வரை அதிக மழைப்பொழிவைப் பெற முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தத் திட்டம் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம். 

செயற்கை மழை

2016 ஆம் ஆண்டு சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் (Tsinghua university) சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய தியான்ஹே (Tianhe) திட்டத்தின் விரிவாக்கமே இவ்வளவு பெரிய முயற்சி. சீனாவில் தியான்ஹே என்பதற்கு வான் நதி என்று பொருள். அதே பெயரிலேயே இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் முழு வெற்றி பெற்றால் சீனாவின் ஒரு ஆண்டிற்கான குடிநீர்த் தேவையில் 7% இதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்கின்றனர். அவர்கள் எந்த முறையில் செயற்கை மழையினை உருவாக்கப் போகிறார்கள்? அது எப்படி சாத்தியம் என பலருக்குள்ளும் கேள்விகள் இருக்கும். மேக விதையூட்டல் (Cloud Seeding)  எனும் முறையின் மூலம் வானிலையில் மாற்றம் (Weather Modification) செய்து மழையைப் பெறுவதுதான் செயற்கை மழை.

இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்களில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பருவக்காலங்களில் மேகங்களில் நீர்கக்கூறுகள் சேமிக்கப்பட்டு குளிர்ந்த காற்றின் மூலமோ அல்லது புற விசையின் மூலம் மழையாகப் பொழிகிறது. இந்த இயற்கையான முறையில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை மேகங்களில் கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். பொட்டாசியம் நைட்ரேட், சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதிப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த முடியாது. மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும்போது இந்த முறையினைப் பயன்படுத்தி மேகங்களை மேலும் செறிவூட்டி அதிகமான மழையைப் பெறலாம். இந்த முறையைத்தான் சீனா பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பெய்யும் மழையினைவிட அதிகமான மழைப்பொழிவை இதன் மூலம் பெற முடியும். 

செயற்கை மழை

திபெத்திய பீடபூமியின் வானிலையில் மாற்றம் செய்து மழையைப் பெறும் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் சீனாவின் தண்ணீர் நெருக்கடியை இல்லாமல் செய்துவிடலாம் என்கிறார் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி வரும் சீன விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லெய் ஃபன்பெய் (Lei Fanpei) . இது சீனாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கே வளங்களைக் கொடுக்கும் முக்கிய கண்டுபிடிப்பாகவும் இருக்கும் எனவும் சொல்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தைச் சிலர் எச்சரிக்கவும் செய்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் வானிலை மாற்றத்தில் பெரியளவில் மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கின்றனர். 

திபெத்திய மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எரி உலைகளில் (Burning Chambers) 500க்கும் மேற்பட்ட எரி உலைகள் ஜின்ஜியாங் ( Xinjiang), ஆல்பைன் சரிவுகள் (Alpine Slopes) போன்றவற்றில் சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படைகளில் அதிகமான மழைப்பொழிவைப் பெற முடியும் என நம்பிக்கைக் கொடுக்கின்றனர் திட்டத்தின் ஆய்வாளர்கள். இந்த எரி உலைகளில் சில்வர் அயோடைடு துகள்கள் உருவாகுதன் மூலம் இதனைச் செயல்படுத்துகின்றனர். 

ஏற்கனவே துபாயிலும், ரஷ்யாவிலும் இந்த முறையில் மழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிகப்படியான மழைப் பொழிவையும் பெற்றுள்ளனர். ஆனால் இதற்காக ஆகும் செலவு அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் இதனை முயற்சி செய்யவில்லை. ஆனால் சீனா இந்த முயற்சியில் துணிந்து இறங்கியுள்ளது. உலகம் அததனைக்கும் இருக்கும் நன்னீரின் அளவு மாறப்போவதில்லை. ஆனால் மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நீரையும் மேகத்திலிருந்து உறிஞ்சி எடுப்பது போன்ற செயல் இது எனக் கண்டனமும் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் மழையை உருவாக்க அதற்கேற்ப மேகங்களும் வேண்டும் என செக் வைக்கின்றனர் மற்ற ஆய்வாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம் சீனாவின் முயற்சியை.

%d bloggers like this: