அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை உட்காரச் சொன்ன தினகரன்… ஆவேசப்பட்ட அமைச்சர்!

மிழகச் சட்டமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்தி, நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெறுவதற்காகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஒப்புதல் பெறப்பட்டால்தான், அந்தந்தத் துறைக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். இதற்காக, தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதன் பின்னர், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், அரசியல் தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கேள்வி நேரம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் என்ன ஆனது, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். என்றாலும், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசலாம் என்றார் அவர். அதனை ஏற்க தி.மு.க உறுப்பினர்கள் மறுத்துவிட்டதுடன், அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறியதுடன், தி.மு.க-வினரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அறிக்கை ஒன்றைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விளக்கம் அளித்தார். 

“தூத்துக்குடியில் சம்பவத்தன்று 144 தடை உத்தரவையும் மீறி சில அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர், சட்டம்- ஒழுங்குக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகக் கூடாது” என்று அதில் முதல்வர் கேட்டுக் கொண்டார். இந்த விளக்கத்தை ஏற்கமறுத்து தி.மு.க உறுப்பினர்கள் பேரவையில் கோஷமிட்டனர். தாங்கள் கொடுத்துள்ள ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். 

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை; கையாலாகாத அரசு என்று சட்டமன்றத்தில் நாங்கள் குறிப்பிட்டதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். துப்பாக்கிச் சூடு நடந்ததா,  இல்லையா? முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தி, பேட்டி, அறிக்கை என்று எதிலுமே, துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை. ஏன் இந்த ஏமாற்றுவேலை? இந்த அரசின் கையாலாகாத்தனத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டு அரசாணை போட்டிருக்க வேண்டும். அதுவே அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலுவானதாக அமையும். இப்போது முதல்வர் போட்டுள்ள அரசாணை வெறும் கபட நாடகம். அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்துத் தீர்மானம் போட்டு அரசாணை பிறப்பிக்கும்வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள மாட்டோம். துப்பாக்கிச் சூடு நடத்திய டி.ஜி.பி., ஐ.ஜி, டி.ஜ.ஜி., எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை முதலில் `சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும். அவர்கள்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பு ஏற்று, முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்’’ என்றார். 

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில், “சட்டமன்றத்தில் ஒரு விவர அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே அதில் இல்லை. பேரவையில் உண்மையை அவர் மறைத்துள்ளார். அது கிரிமினல் குற்றம் போன்றது’’ என்று சொன்னார். முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “துப்பாக்கிச் சூடு குறித்து அவையில் பேசினால் அமைச்சர்களும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் எள்ளி நகையாடுகிறார்கள். 13 உயிர்களுக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் இதுதான் இவர்கள் செய்யும் மரியாதை. நான், அம்மா கொடுத்த இரட்டை இலை சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றேன். அதற்காக உண்மையைச் சொல்லக் கூடாதா?’’ என்று வருத்தப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் பேசுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குச் சில அரசியல் கட்சிகளே காரணம் என்று முதல்வர் சொல்கிறார். அந்த அரசியல் கட்சி எது என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே? அதில் ஏன் மௌனம்? கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, 144 தடை உத்தரவு போட்டது ஏன்? அரசின் இந்த நடவடிக்கை ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்களே என்று கேள்வி கேட்டால், டாஸ்மாக் தங்கமணிக்கு (மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்) கோபம் வருகிறது. ‘வா, போ’ என்று வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் வாபஸ் வாங்குகிறார். நிதானம் இல்லாமல் பேசுகிறார் டாஸ்மாக் தங்கமணி. அப்படியானால், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், கண்ணை மூடிக்கொண்டு தூங்குகிறார்கள் என்று நான் பேச வேண்டுமா? தூத்துக்குடி மக்கள் கொதிநிலையில் இருக்கிறார்கள். காவிரி பிரச்னையில் கோட்டைவிட்டது போல இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள எந்திரங்களை உடனே அகற்ற வேண்டும். தூத்துக்குடியில் 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்’’ என்றார். 

முன்னதாக, சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது பேசிய தினகரன், “தூத்துக்குடியில் நடைபெற்றது போன்ற கொடுமை இனி எந்தக் காலத்திலும் யார் ஆட்சியிலும் நடக்கக் கூடாது. முதல்வரின் விவர அறிக்கை பொதுமக்களையும் அரசியல் கட்சிகளையும் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை விளைவித்ததாக முதல்வர் கூறுகிறார். அப்படியானால், உங்கள் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? நாங்கள் எல்லாம் அங்கு சென்று மக்களிடம் பேசினோம். ஆறுதல் சொன்னோம். நான்கு, ஐந்து நாள்களாக உங்கள் எம்.எல்.ஏ-க்களை அங்கு பார்க்க முடியவில்லை” என்றார். உடனே அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து தினகரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “உண்மையைச் சொன்னால் உங்களுக்குக் கோபம் வருகிறது. அமைதியாக உட்காருங்கள்’’ என்றார் டி.டி.வி.தினகரன். இதையடுத்து தினகரனுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இரண்டு தரப்பையும் சபாநாயகர் ப.தனபால் அமைதிப்படுத்தினார். தினகரன் பேசி முடித்ததும் அமைச்சர் தங்கமணி எழுந்து பேச முற்பட்டார். அப்போது, தினகரனும் பேச எழுந்தார். உடனே தினகரனைப் பார்த்து, அமைச்சர் தங்கமணி, ஒருமையில் கேள்வி கேட்டதற்கு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், குறிப்பிட்ட அந்த வார்த்தையை அமைச்சர் தங்கமணி வாபஸ் பெற்றார். இதையடுத்து அவையில் அமைதி திரும்பியது.

%d bloggers like this: