நிபா’ வைரஸ்

நிபா’ வைரஸ் என்றால் என்ன?
பன்றி வளர்ப்பை தொழிலாகக் கொண்ட, மலேஷிய நாட்டு விவசாயிகளிடம், முதன்முறையாக, நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது, மூளைக் காய்ச்சல் பாதிப்பை எற்படுத்தியது.
நிபா குறித்த அச்சம் அவசியமா?

இந்த பாதிப்பிற்கு சிகிச்சை இல்லை; அறிகுறிகளின் அடிப்படையிலேயே மருந்துகள் தரப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக் கூடிய தொற்று இது. எனவே, கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
அதிக, ‘ரிஸ்க்’கில் இருப்பவர்கள் யார்; எப்படி பரவும்?
பன்றிகளை பராமரிப்பவர்கள் மற்றும் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம். வவ்வால்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரம்ப அறிகுறிகள் என்ன?
எதிர்பாராமல் ஏற்படும் காய்ச்சல் தான் முதல் அறிகுறி. தலைவலி, தசைகளில் வலி, குமட்டல், வாந்தி போன்றவை, பிற அறிகுறிகள். கழுத்துப் பகுதியில் இறுக்கம், காட்சிகளை பார்க்கும்போது பதற்றம் என, தீவிர அறிகுறிகள் ஏற்பட்டு, 5 – 7 நாட்களில், கோமா நிலைக்கு செல்வர்.
பரிசோதனை என்ன?
புனேயில் உள்ள தேசிய வைரல் மையத்தில் செய்யப்படும், ‘எலிசா’ பரிசோதனை மூலமே, தொற்று ஏற்பட்டு உள்ளதை உறுதி செய்ய முடியும்.
சிகிச்சை முறைகள் என்ன?
அறிகுறிகளின் அடிப்படையிலேயே சிகிச்சை செய்யப்படும். பாதிக்கப்பட்டவருக்கு, 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு சிகிச்சை அவசியம்.
தடுக்கும் வழிகள் என்ன?
பன்றிகளுடன், பன்றி வளர்ப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்த்தல், சுய சுகாதாரத்தை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக கழுவுவது, பறித்த பழங்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது, முடிந்த அளவு பழம், காய்கறிகளை நன்கு சமைத்த பின் சாப்பிடுவது.
பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது, வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து, லேசாக அறிகுறிகள் தோன்றும் போதே, உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது, தொற்றிலிருந்து காக்கும்.
டாக்டர் ஆர்.சோமசேகர், ‘டீன்’ அரசு மருத்துவக் கல்லுாரி, கன்னியாகுமரி.

%d bloggers like this: