ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்று கடந்த இதழில் நீர் குறிப்பிட்டிருந்த விவரங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. அதுபோல், எல்லா வாட்ஸ்-அப் குரூப் களிலும் ஃபார்வேர்டு செய்யப்பட்டது. அதைக் கவனித்தீரா?” என அலுவலகம் வந்த கழுகாரிடம் கேட்டோம். “ஆமாம்” என்று தலையசைத்த கழுகார், நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

‘‘தூத்துக்குடியில் இன்னமும் வெப்பம் தணியவில்லை. ஆட்சியாளர்கள்மீதான கோபம் கூடிக்கொண்டே போகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரின் கேள்வியால் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிர்ந்து விட்டார். தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு, லத்திசார்ஜ் ஆகியவற்றில் காயமடைந்தவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள்கூட அவர்களைச் சந்திப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிக்கொண்டு போனால்தான், காயமடைந்தவர்களைப் பார்க்க முடியும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது போலீஸ். காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல, அமைச்சர் கடம்பூர் ராஜு மே 27-ம் தேதி வந்தார். மருத்துவமனையின் 5-வது தளத்தில் சிகிச்சை பெற்றுவந்த பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்ராஜுவுக்கு ஆறுதல் சொன்னார், அமைச்சர் கடம்பூர் ராஜு. அப்போது, ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுங்க… நாங்க உங்கள அப்போ நம்புறோம்” என்றார் அந்த இளைஞர். கடம்பூர் ராஜு அதிர்ந்துவிட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அமைச்சர், ‘அப்படியெல்லாம் உடனடியாக எழுதிக்கொடுக்க முடியாது தம்பி’ என்றார். அருகில் இருந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ‘சார்.. கிளம்பிடுவோம்… போதும்’ என்றதும், அமைச்சரும் உடனே இடத்தைக் காலிசெய்தார்.”
‘‘ம்!”
‘‘அமைச்சர் ஆறுதல் கூறிக்கொண்டிருந்த நேரத்தில், மீடியாக்கள் முன்னிலையில் கொந்தளித்த ஒரு பெண், ‘சம்பவம் நடந்து அஞ்சு நாள் கழிச்சு வந்து ஏன் பார்க்கணும்… சுட்டுக் கொல்ல உத்தரவு போட்டது யாருன்னு எங்களுக்குத் தெரியனும்… எடப்பாடி இருக்காரா, இல்லையா? அமைச்சர் எங்ககிட்ட பேசப் பயந்து பாதியிலேயே ஓடுறாரே ஏன்…. செத்தவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்குற பணத்துக்கு மேல ஒரு லட்சம் போட்டு அவங்க குடும்பத்துக்கு நாங்க தர்றோம்… அவங்க செத்துடுவாங்களா?’ எனச் சீறினார்.”

‘‘இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு, முதல்வர் எப்படி அங்கு போவார்?” 
‘‘துணை முதல்வர் ஓ.பி.எஸ் வருகையின்போது, இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. கடம்பூர் ராஜுவை அதிர வைத்த அந்த இளைஞரிடம், ‘உங்க குறைகளை மட்டும் சொல்லுங்கள். வேறு எதுவும் பேச வேண்டாம்” என அதிகாரிகள் ஸ்ட்ரிக்ட்டாகக் கூறியிருந்தனர். ஆனாலும், ஓ.பி.எஸ்-ஸிடம் அந்த இளைஞர், ‘சார்.. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா… மூடப்படாதா..? ஆலையைமூட தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா, இல்லையா?’ எனக் கேட்டார். அதற்கு, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பதில் சொன்ன ஓ.பி.எஸ்., ‘அதிகாரம் இருக்கிறது’ என்றார். ‘அப்படீன்னா… அதை எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எழுதிக்கொடுங்கள்’ என்றார் அந்த இளைஞர். அது காதில் விழாததுபோல, பக்கத்து ‘பெட்’டுக்கு நகர்ந்துவிட்டார்    ஓ.பி.எஸ்.”
‘‘ஓ.பி.எஸ் சென்றுவந்த பிறகு, அன்றைய தினமே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துவிட்டதே?”
‘‘ஆமாம். ‘பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்தான் தமிழக அரசை நடத்துகிறார்கள். இவர்களின் முழு ஆதரவு ஸ்டெர்லைட்டுக்கு உண்டு’ என்று சொல்லப்படுகிறது. இதனால், ‘மக்களைத் திருப்திப்படுத்த மாநில அரசு எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்’ என்று டெல்லியிலிருந்து சொல்லிவிட்டார்களாம். இந்த நிலையில்தான், தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதாக இருப்பதை தூத்துக்குடி விசிட்டின்போது ஓ.பி.எஸ் நேரடியாக உணர்ந்துகொண்டார். அதை, முதல்வரிடம் அவர் சொல்லியுள்ளார். அதையடுத்து, கோட்டையில் முக்கிய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடந்தது. சட்ட நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு அவசர அவசரமாக அந்த ஆணையைப் பிறப்பித்தனர்.”

‘‘கவர்னர்..?”
‘‘தூத்துக்குடி சம்பவத்தில் கவர்னர் ‘அப்செட்’ ஆக இருக்கிறாராம். கடந்த வாரம் முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்தபோது, அவர்களிடம் இறுக்கமான முகத்துடன் கவர்னர் பேசியுள்ளார். தனக்கு வேண்டிய சோர்ஸ்கள் மூலம் தூத்துக்குடி நிலவரத்தை கவர்னர் அறிந்துவருகிறார். ‘அது, ரொம்ப சென்சிட்டிவ் ஆன மாவட்டம். இப்போதைக்கு இந்த விவகாரம் ஓயாது’ என மத்திய உள்துறை கொடுத்துள்ள ரெட் அலெர்ட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கவர்னர் தெரிவித்தாராம். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுவிட்டார்களே தவிர, போலீஸ் வட்டாரம் கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: