முடக்கு வாதம் வெறும் எலும்பு தொடர்பான நோய் அல்ல… கவனம்!’ – விளக்கம் சொல்லும் மருத்துவம்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள்-மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பல்வேறுவிதமான நோய்கள், அவற்றுக்கான அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். அந்த வகையில், 28.5.2018 அன்று மூட்டு, தசை, இணைப்புதசைத் துறை சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில், அந்தத் துறையின் இயக்குநரும் பேராசிரியருமான இரா.ரவிச்சந்திரன் பங்கேற்று, முடக்கு வாத நோய்கள் குறித்து விவரித்தார்.

முடக்கு வாதம் பற்றி விளக்குகிறார் மருத்துவர்

“பல நோய்களின் கூட்டுதான் முடக்கு வாதம். ஆனால், முடக்கு வாதம் என்றாலே பலரும், அது எலும்பு தொடர்பான நோய், மூட்டுவலி என்று நினைத்துவிடுகிறார்கள். இது மூட்டு, தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. உடலின் பல்வேறு  உறுப்புகளையும் பாதிக்ககூடியது.  

உதாரணமாக, கண் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். கைகளில் முடக்கு வாதம் வந்தால் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் அதிக வலியை ஏற்படுத்தும். கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளைச் சுழற்றவோ முடியாது. பாதம் மற்றும் கணுக்காலில் ஏற்பட்டால், அதிக வலியோடு, நடக்கக்கூட முடியாமல் போய்விடும். சில முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் மற்றும் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இதயம், நுரையீரல் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படி முடக்கு வாதத்தில் 300-லிருந்து 500 வகைகள் உள்ளன.  

பொதுவாக, முடக்கு வாத நோய்கள் குணப்படுத்த முடியாதவை. சர்க்கரை நோயைப்போலவே, இவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க மட்டுமே முடியும். அதுவும் ஆரம்பநிலையில் கண்டறிந்தால் மட்டுமே சாத்தியமாகும். மாறாக, நீண்ட நாள்களுக்கு முடக்கு வாதம் இருந்து கவனிக்காமல் விட்டுவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்றவற்றையும் பாதித்துவிடும். எனவே, முடக்கு வாத நோய்கள் குறித்த விழிப்பு உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை’’ என்றவர், அதிகம் பாதிக்கும் சில முடக்கு வாத நோய்களைப் பற்றியும் அதன் அறிகுறிகளையும் விவரித்தார். 

“ருமட்டாய்டு ஆர்த்தரட்டிஸ் (Rheumatoid Arthritis)

சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாதநிலையில்  மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும். அப்படி நீண்ட நாள்கள் வலி இருந்தால், அதற்கு `ரூமட்டாய்டு முடக்கு வாதம்’ என்று பெயர். அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களைப் பாதித்து, அதன் செயல்பாடுகளைக் குறைத்துவிடும். 

இந்தப் பிரச்னை பொதுவாக, எல்லோருக்கும் வரலாம்; பெரும்பாலும், நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கை, கால் மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இதை குணப்படுத்த முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், மருந்து மாத்திரைகளிலேயே கட்டுப்படுத்திவிடலாம். அதேபோல உரிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலமும் நிவாரணம் பெறலாம். இல்லையென்றால், முடக்கு வாதம் இதயத்தைச் சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியிருக்கும் ப்ளியூரா (Pleura), கண்ணின் வெள்ளைப் பகுதியான ஸ்கிளிரா  (Sclera) போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

* லூபஸ் முடக்கு வாதம் (Lupus)

இதற்கு  `செம்முருடு’ என்ற பெயரும் உண்டு. இதுவும் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய பிரச்னை. உடல் சோர்வு, மூட்டுவலி, சொறி, நீண்ட நாள் காய்ச்சல் போன்றவை இந்தப் பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகள். தசைகளில் வலி, மூச்சு விடும்போது மார்பில் வலி, தலை முடி  உதிர்வு, தோல் நோய், வெயில் ஒவ்வாமை, சிறுநீரகத்தில் ரத்தம் போதல், உடல் எடை குறைதல், முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவில் சொறி உண்டாவது போன்ற அறிகுறிகள் தென்படும். இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல்விட்டால், தோல், சிறுநீரகம், ரத்தச் செல்கள், மூளை, இதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்படலாம். ரத்தம் மற்றும் திசுக்களைப் பரிசோதனை செய்வதன்  மூலம் இந்தப் பிரச்னையைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதோ, அதைப் பொறுத்து சிகிச்சை செய்யப்படும்.

* முதுகெலும்பு முடக்கு வாதம்

‘ஸ்பாண்டைலோ ஆர்த்ரிட்டிஸ்’ (Spondyloarthritis) எனும் ஒருவித முடக்கு வாதம். முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் ஒன்றோடு இணைந்து இறுகிப் போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது. முதலில் முதுகுவலியில் தொடங்கும். கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும். அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். கூனல் விழும். இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும். முற்றியநிலையில் கண்களையும் பாதிக்கலாம். 

* ஸ்க்லீரோடெர்ம (Scleroderma)

இந்த நோய் பாதிப்பால், தோல் இறுகிப் போய்விடும். சிலருக்கு நுரையீரல், குடல், இதயம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கும். சிகிச்சைக்குப் பிறகு சில வருடங்களில் தோல் இறுக்கத்தைச் சரிசெய்துவிடலாம். ஆனால், இந்த முடக்கு வாதத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது. 

மருத்துவ விழிப்புஉணர்வு கருத்தரங்கு

* கீல்வாத நோய் (Gout)

`யூரிக் ஆசிட்’ என்னும் உப்பு உடலில் அதிகரிப்பதால் ‘கெளட்’ (Gout) எனப்படும் கீல் வாதநோய்  உண்டாகிறது. ஆறு வாரங்களுக்கு மேல் எலும்புகள் இணையும் பகுதிகளில் வலி இருந்தால், அது கீல் வாதநோயாக இருக்கலாம்.
முடக்கு வாதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யவேண்டியவை…

இந்த நோய்களுக்கான காரணங்களும் முழுமையாகத் தெரிவதில்லை. எனவே, இவற்றைத் தவிர்க்க முடியாது. ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

*  உடலில் கை, கால், தசை, மூட்டுகள் என எங்கேயாவது வலி, வீக்கம் ஒரு மாதத்துக்கு மேல்  இருந்தால் அது முடக்கு வாதமாக இருக்கலாம். எனவே, உடனடியாக  எலும்பு, தசை, இணைப்புதிசு துறை மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

* மூட்டுவலிக்காக கொடுக்கப்படும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்த நாள்கள் வரை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். வலி குணமாகிவிட்டது என தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை நிறுத்திவிடக் கூடாது.

* ஆண்களைவிட, அதிகமாகப் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். முடக்கு வாதத்தின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

* ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.” 

%d bloggers like this: