கணவர்களைக் காக்க `புருஷா கமிஷன்’ அமையுங்கள்’ – கோரிக்கைவைக்கும் மகளிர் ஆணையத் தலைவி

மனைவிகளின் கொடுமைகளிலிருந்து கணவர்களைக் காப்பற்றவும் ஆண்களின் பாதுக்காப்பை உறுதி செய்யவும் `புருஷா கமிஷன்’ என்ற ஒன்றை அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக ஆண்கள்தான் பெண்களை அடிப்பது, துன்புறுத்துவது, கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போதுள்ள பெண்கள், ஆண் நண்பர்களின் உதவியுடன் தன் கணவனை அடிப்பது, கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் மகளிர் ஆணையத்தின் தலைவியும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான நன்னாபேனி ராஜகுமாரி சில வருடங்களுக்கு முன்னரே ஆண்கள் மீதான கொடுமைகளைத் தடுக்க ‘புருஷா கமிஷன்’ என்ற ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். தற்போது ஆண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் ஆண்களுக்கு எனத் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு ராஜகுமாரி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன். அதேபோல் ஆண்களுக்கும் இப்போது வன்முறைகள் நடக்கத் தொடங்கிவிட்டன. பெண்கள் வேறோர் ஆணுடன் நட்பு வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் தன் கணவரைக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க ஆண்களுக்கு எனத் தனி கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் டி.வி சீரியல்களில்தான் பெண்கள் ஆக்ரோஷமாகவும் கொடூரமானவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இது குறித்து மத்திய அரசிடம் புகார் அளித்து சீரியல்களைத் தணிக்கை செய்ய கூறினோம். ஆனால், படங்களை மட்டுமே தணிக்கை செய்ய முடியும், டி.வி-களுக்கு இல்லை எனப் பதில் தெரிவித்துவிட்டார்கள்” என்று கூறினார்.

%d bloggers like this: