மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?

அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன.  அவை இதோ…
குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம்

‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சி இது’’ என்கிறார்கள் அவர்கள். குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், “எஃப்.ஐ.ஆரில் யார் பெயரும் இல்லை. ஆனால், ‘பப்ளிக் சர்வன்ட்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படிக் குறிப்பிட்டாலே, அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லோருமே அடக்கம்தான். எனவே, விசாரணை தொடரும்போது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு. குட்கா தயாரிப்பாளர்களிடம் கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், ‘யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என்று தெளிவாக உள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்யும்போது, லஞ்சம் கேட்டார்களா அல்லது லஞ்சம் கொடுக்கப் பட்டதா என்ற விவரம் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர், தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். ஒருகட்டத்தில், பன்னீரின் உறவுகள் அனைவரின் பதவிகளையும் அதிரடியாக ஜெயலலிதா பறித்தார். அப்போது, ரவியின் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஒதுங்கிய ரவி, தன் தந்தையின் ‘தர்மயுத்த’ காலகட்டத்தில்கூட, வெளியில் தலைகாட்டாமல் இருந்தார்.
பன்னீரும் எடப்பாடியும் இணைந்த பின்னர், தேனி மாவட்ட அரசியல் பேனர்களிலும் மேடைகளிலும் தவிர்க்க முடியாத நபராக ரவி மாறினார். இப்போது, அவருக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘எம்.பி-யாகி டெல்லிக்குப் போகவேண்டும் என்பதுதான் ரவியின் கனவு. பன்னீருக்கு இதில் விருப்பம் இல்லை. இது தொடர்பாக ரவிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. இப்போதுகூட விருப்பம் இல்லாமல் தான் இந்தப் பதவியை வாங்கியுள்ளார் ரவி. அவரின் இலக்கு எம்.பி பதவிதான்’’ என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.
டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க. கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தை, சென்னையில் திறக்கிறார். புதிய அலுவலகக் கட்டடம் அசோக் நகரில் இருந்தாலும்,    கே.கே.நகரை ஒட்டி அந்தத் தெரு வருவதால், இதையும் கே.கே. நகர் ஏரியா என்றுதான் மக்கள் அழைப்பார்கள். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஏரியாவில் தினகரன் ஏன் கட்சி ஆபீஸைத் திறக்கிறார்? திறப்பு விழா நடத்தும் ஜூன் 3-ம் தேதி, கருணாநிதியின் பிறந்தநாள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா குடியிருந்த வேதா இல்லத்தின் எதிரே காலியிடம் ஒன்று உள்ளது. அந்த இடம் சசிகலாவின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அங்கேகூட சென்டிமென்ட்டாக புதிய கட்சி ஆபீஸை ஆரம்பித்திருக்கலாமே?’ என அவரின் கட்சி பிரமுகர்கள் சிலர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இதெல்லாம் தினகரன் காதுக்குப் போனதாம். அதற்கு அவர், ‘‘அசோக்நகர் நல்ல சாய்ஸ்தான். விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை” என்று சொல்லிவிட்டாராம். 

  ப.சிதம்பரத்தை ஏதாவது ஒரு வழக்கில் ஒருமுறையாவது கைது செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பி.ஜே.பி-பிரதமர் மோடி-ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரத்துக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டிலிருந்து விதிகளைமீறி பணம் வந்துள்ளதாகப் புகார் இருக்கிறது. ‘‘இதில், நிதியமைச்சகம் சில சட்ட திட்டங்களை மீறியது. அதற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அழுத்தம்தான் காரணம்’’ என்பது சி.பி.ஐ வைக்கும் குற்றச்சாட்டு. இதுதொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதிக்குள் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விசாரணைக்குச் சென்றால், ஆதாரம் இருக்கிறதோ… இல்லையோ… கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை சிதம்பரம் உணர்ந்துள்ளார். அதையடுத்துதான், இரண்டு வழக்குகளிலும் தன்னைக் கைதுசெய்ய அவர் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தாராம். இதில், தூத்துக்குடி மாவட்டம்தான் முதலிடம். ‘‘தூத்துக்குடியில் காயம்பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் நேரில் பார்க்க நீங்கள் போகலாமே?’’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுள்ளனர். ‘‘நான் போனால், நோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் என்று திரண்டு வருவார்கள். இதனால், சிகிச்சை பெறுபவர்களுக்கு சங்கடமாகிவிடும். கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று சொல்லிவந்தாராம். மே 28 திங்களன்று இரவு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தை போனில் அழைத்த ரஜினி, ‘‘புதன்கிழமை காலை தூத்துக்குடிக்குப் போக நினைக்கிறேன். எனக்கும் என் உதவியாளர் சுப்பையாவுக்கும் டிக்கெட் போடுங்கள்’’ என்றாராம். அதன்பிறகுதான், ஏற்பாடுகள் துரிதமாகின. விமானத்தில் பயணித்த பலரும் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். விமானம் கிளம்பியதும், ரிட்டர்ன் வந்ததும் சற்று லேட்டாகிவிட்டது. சென்னை திரும்பியதும் பிரஸ்மீட்டில் டென்ஷனாகப் பேசிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது, தன் உதவியாளர் காரில் ஏறியிருக்கிறாரா என்பதைக்கூட கவனிக்காமல், வீட்டுக்குப் பறந்தார்.

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள்… தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச்சட்டையில் வர, துரைமுருகன் மட்டும் நீலநிற சட்டையில் வந்திருந்தார். ‘‘காலையில் வீட்டில் பவர்கட். இருட்டில் இது கறுப்புச் சட்டை மாதிரி தெரிந்தது. அதனால்தான் தப்பு நடந்துடுச்சு’’ என்றாராம். தி.மு.க நடத்திய மாதிரி சட்டசபையிலும் ஒரு சுவாரசியம். ‘‘மாதிரி சட்டசபையில் நான் முதல்வராக உட்காருகிறேன்’’ என முன்வந்தாராம் துரைமுருகன். ஸ்டாலினிடம் இந்த விஷயம் போனபோது, ‘‘முதல்வர், துணை முதல்வர் என்பதெல்லாம் வேண்டாம். ஆளும் கட்சி வரிசை என்று மட்டும் அமைத்தால் போதும்’’ என்று சொல்லிவிட்டாராம். மாதிரி சட்டசபையில்கூட துரைமுருகனுக்கு அந்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

%d bloggers like this: