Advertisements

வாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்?

சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட்போல பாடி ஸ்பிரே, பெர்ஃபியூம் போன்றவையும் அத்தியாவசியப் பொருள்களாகி விட்டன. பாடிஸ்பிரே (Body Spray), டியோடரன்ட் (Deodorant), ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant), சென்ட் (Scent), பெர்ஃபியூம் (Perfu me) என ஏகப்பட்ட வாசனைப் பொருள்கள் வந்து விட்டன. சாக்லேட், லாவண்டெர், ஜாஸ்மின், ரோஸ் என எல்லா வாசனைகளிலும் கிடைக்கின்றன. சிலர், காலையில் ஒன்று மாலையில் ஒன்று என நேரத்துக்கு ஒரு வாசனைப் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். வாசனைத் திரவியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? அவற்றைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்துவது?

சரும மருத்துவர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.சிவகுமார் விளக்குகிறார்.

“நம் உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைக்கவும் உடலில் தாமாகச் சுரக்கும் ஒரு திரவமே வியர்வை. நம் உடலில் எக்ரைன் (Eccrine), அபோக்ரைன் (Apocrine) என இரண்டுவகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பியானது உடல் முழுவதும் பரவலாக இருக்கும். அக்குள் மற்றும் மடிப்புள்ள இடங்களில் அப்போக்ரைன் சுரப்பி காணப்படும். இவற்றை, ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. எக்ரைன், ஒரு வயதிலேயே செயல்பட ஆரம்பித்துவிடும். அப்போக்ரைன், பருவ வயதிலிருந்துச் செயல்படத் தொடங்கும். இதனால்தான் பருவ வயதில், வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.

வியர்வை நாற்றம் ஏன்?

வியர்வைக்கு வாசனை கிடையாது. வியர்வைச் சுரப்பிகளுடன் ‘சீபம்’ எனப்படும் எண்ணெய் சுரப்பிகளும் அமைந்திருக்கின்றன. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணெயுடன் வியர்வையும் கலந்து வெளியேறும்போது, அவற்றுடன் பாக்டீரியாவும் சேர்வதால் துர்நாற்றம் வீசுகிறது. பருவ வயதுக்குப் பிறகு உடல்வாகுக்கேற்ப அதிகமாகவோ, குறைவாகவோ வியர்வை சுரக்கும். ஆனால், கோடை காலத்தில் எல்லோருக்குமே வியர்வை அதிகம் வெளியேறுவதால், வியர்வை நாற்றம் பொதுவான பிரச்னையாக மாறிவிடுகிறது. அதனாலேயே வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்கமுடிவதில்லை. வாசனைத் திரவியங்களைப் பொறுத்தமட்டில் பெர்ஃபியூம், டியோடரன்ட், ஆன்டிபெர்ஸ்பிரன்ட் ஆகியவையே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வகையாக இருந்தாலும் ஆல்கஹால், புரொபலின் கிளைக்கால் (Propylene Glycol),  பாராபன் (Paraben), பால்சம் பெரு (Balsam Peru) ஆகிய ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். அவை, எவ்வளவு சேர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே டியோடரன்ட், பெர்ஃபியூம் எனப் பெயர்கள் வேறுபடுகின்றன.

பெர்ஃபியூம் (Perfume)

வாசனை மட்டுமே வீசும். கிருமிகளை அழிக்கவோ, வியர்வையின் அளவைக் குறைக்கவோ செய்யாது. பெர்ஃபியூமில் 15 முதல் 20 சதவிகிதம் வரை வாசனைக்கான ரசாயனங்களும், ஆல்கஹாலும் சேர்க்கப்படுகின்றன. இதில் உள்ள ஃபிக்ஸேடிவ்ஸ் (Fixatives) மற்றும் சால்வென்ட்ஸ் (Solvents) போன்றவை திரவ வடிவிலான வாசனைத் திரவியங்கள் ஆவியாகாமல் பாதுகாக்கின்றன. இவற்றை உடைகளில்தான் ஸ்பிரே செய்ய வேண்டும். சருமத்தில் நேரடியாக ஸ்பிரே செய்யக்கூடாது.

டியோடரன்ட் (Deodorant)

கிருமிகளின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், நறுமணத்தின்மூலம் துர்நாற்றத்தைக் குறைக்கும். ஆனால், வியர்வை வெளியேறுவதைக் குறைக்காது. இதில், 10 முதல் 15 சதவிகிதம் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. இதைச் சருமத்தில் நேரடியாக உபயோகிக்கலாம்.

ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant)

வியர்வைச் சுரப்பிகளின் துவாரங்களில் படிந்து, வியர்வையின் அளவைக் குறைக்கும். அத்துடன், கிருமிகளின் வளர்ச்சியைக் குறைத்து துர்நாற்றத்தை மறைக்கும். இதில், சேர்க்கப்படும் அலுமினியம், தற்காலிகமாக வியர்வைச் சுரப்பிகளைத் தடைசெய்யும். இதில், 10 முதல் 15 சதவிகிதம் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. ஸ்பிரே, ரோல் ஆன், பம்ப், ஏரோசால் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.

ரசாயன விளைவுகள்

நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் புரொபலின் கிளைக்கால், சரும அலர்ஜி ஏற்படுத்தக்கூடியது. பாராபன் (Parabens) ரசாயனம், சிலருக்கு அதிகப்படியான எரிச்சல், நமைச்சலை ஏற்படுத்தலாம். பால்சம் பெரு என்ற ரசாயனம் ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, சைனஸ் பிரச்னை, சரும எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். பெரும்பாலான ஆன்டிபெர்ஸ்பிரன்ட் வாசனைத் திரவியத்தில் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இதனால், பிற்காலத்தில் மறதி நோய், சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, அலுமினியம் உள்ள வாசனைத் திரவியங்களைத் தவிர்க்க வேண்டும்.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

முடிந்தவரை எல்லோருமே வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் ஒருநாளைக்கு ஒருமுறை பயன்படுத்தலாம். சிலருக்கு சருமப் பிரச்னைகள், அரிப்பு, காளான் தொற்று காரணமாக வியர்வை வாடை இருக்கலாம். இவர்கள் பெர்ஃபியூம், பாடி ஸ்பிரே பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பாதிப்பு உள்ள பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் பிரச்னை உள்ளவர்கள் சரும மருத்துவரின் ஆலோசனையுடன் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது எப்படி?

தினமும் இரண்டு தடவை குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்தினால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

அக்குள் போன்ற மறைவிடங்களில் உள்ள முடிகளை நீக்கி, முறையாகச் சுத்தம் செய்துப் பராமரித்தாலே வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

அக்குள் பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்க முடியாது. ஆனால், ஆன்டிபாக்டீரியல் சோப்புகளைப் பயன்படுத்திக் குளிப்பதன்மூலம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

பல வருடங்களாக உடல் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட்டாக்ஸ் (Botox) என்ற ஊசியை அதிகமாக வியர்க்கும் இடங்களில் போட்டுக்கொள்ளலாம். இதனால், அந்த இடத்தில் வியர்க்காது. நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியும் தடுக்கப்படும். ஆனால் இது குறிப்பிட்ட மாதங்கள்தான் பலனளிக்கும். பின்னர் மீண்டும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

அக்குள், பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் அளவைச் சுருக்கும் பிரத்யேகச் சிகிச்சைகளும் இருக்கின்றன. இதனால் வியர்வையின் அளவு குறையும். அதிலும் கட்டுக்குள் வரவில்லையென்றால் அக்குளில் உள்ள சில வியர்வைச் சுரப்பிகள் நிரந்தரமாக நீக்கப்படும். இதனால், வியர்வை குறைந்து நிரந்தரமாக நாற்றம் குறையும்.

எப்படிப் பயன்படுத்துவது?

* ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் எந்த வாசனைத் திரவியத்தையும் பயன்படுத்தக் கூடாது.

* ஸ்பிரே வகைகளை 15 செ.மீ தூரத்தில் வைத்தே ஸ்பிரே செய்ய வேண்டும்.

* குளித்துமுடித்ததும் உடலை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, வியர்வை வருவதற்குமுன் அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

* எந்தவொரு புதிய வாசனைத் திரவியத்தையும் முதலில் பயன்படுத்தும்போது அதை மணிக்கட்டுப் பகுதியில் சிறிதளவு பயன்படுத்திப் பாருங்கள். எரிச்சல், அலர்ஜி எதுவும் இல்லை என்றால் அதைப் பயன்படுத்தலாம்.

* அடிக்கடி குளித்தாலும்கூடச் சிலருக்கு வியர்வை நாற்றம் அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு ஆன்டிபெர்ஸ்பிரன்ட், டியோடரன்ட் வகை வாசனைத்திரவியங்கள்தான் ஏற்றவை. பெர்ஃபியூம் பயன் தராது.

Advertisements
%d bloggers like this: