Advertisements

இது பெற்றோர்களுக்கான பாடம் – பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு

ன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப் படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு குழந்தைகள்நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அதற்காக அவர் தந்த முழுமையான வழிகாட்டல் இங்கே…

உடல்நலனில் செக் பாயின்ட்ஸ்

* பள்ளியில் சேர்ப்பதற்கு முன்புவரை, வீட்டில் பெற்றோரின் கண்காணிப்பில் பாதுகாப்பான வட்டத்திலேயே குழந்தைகள் வளர்ந்திருப்பார்கள். பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்களுடனும் சேர்ந்திருக்க நேரும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் மூலம் மற்ற குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். எனவே, முதலில் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை வலுவாக்க வேண்டும்.

* மாணவர் சேர்க்கையின்போது பெரும்பாலான பள்ளிகளில் மருத்துவப் படிவம் ஒன்றைத் தருவார்கள். அதில், குழந்தையின் எடை, உயரம், ரத்த வகை, பார்வைத் திறன், கேட்கும் திறன், அலர்ஜி ஏதேனும் இருக்கிறதா, மருத்துவமனையில் எதற்காகவாவது நீண்ட நாள் சிகிச்சை பெற நேர்ந்திருக்கிறதா, வலிப்பு இருக்கிறதா, மூச்சிரைப்பு இருக்கிறதா, தொற்றுநோய் இருக்கிறதா, சருமப் பிரச்னைகள் உள்ளனவா, எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாமா, ஏற்றுக்கொள்ளாத உணவுகள், மருந்து மற்றும் மாத்திரைகள் எனக் குழந்தையைப் பற்றிய முழு மருத்துவ விவரங்களையும் கேட்பார்கள். இதைப் பெற்றோர் பூர்த்திசெய்வதுடன், சில குழந்தைகளுக்கு, தேவைப்படும் பட்சத்தில், மருத்துவ அறிக்கை/சான்றிதழும் பெற்றுவரச் சொல்லிக் கேட்கப்படலாம். பள்ளியில் குழந்தைக்கு ஏதாவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சையை அளிக்கவும், ஒரு குழந்தையின் பாதிப்பு மற்ற குழந்தைகளைப் பாதிக்காமல் தவிர்ப்பதற்கும் கோரப்படும் விவரங்கள் இவை. எனவே, இந்தப் படிவங்களை சம்பிரதாயமாகப் பார்க்காமல், முழு ஈடுபாட்டுடன் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

* டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண  ஜன்னி – DPT – Diphtheria, Pertussis and Tetanus) தடுப்பூசியைக் குழந்தையின் ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம், ஒன்றரை வயதில் போட்டிருப்பார்கள். இதேபோல, எம்எம்ஆர் (பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை – MMR – Measles, Mumps, Rubella) தடுப்பூசியை ஒன்பது மற்றும் பதினைந்தாம் மாதங்களில் போட்டிருப்பார்கள்.  டைபாயிட், சின்னம்மை தடுப்பூசியையும் மூன்று வயதுக்குள் போட்டிருப்பார்கள். இவற்றின் பூஸ்டர் டோஸ் (Booster Dose) தடுப்பூசியைக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன் (3 – 4 வயதில்) போட்டுவிடுவது நல்லது. இதனால், பள்ளியில் பிற குழந்தைகளின் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

* குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள், மூச்சுத்திணறல் பாதிப்புள்ள குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பே, அந்தப் பிரச்னைகளின் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

* பிறந்தது முதலே சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கும். அத்தகைய குழந்தைகளின் மூன்று வயதுக்குள் அந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.

* தற்போது சுமார் 20 சதவிகிதக் குழந்தைகளுக்குக் கடுமையான காய்ச்சலின்போது வலிப்பு ஏற்படுகிறது (Simple Febrile Seizures). அதைப் பள்ளித் தரப்பிடம் தெரிவித்து, குழந்தைக்குச் சிறப்புக் கவனம் கொடுக்கச் சொல்லலாம். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வீட்டுக்குத் தகவல் சொல்லவும், தேவைப்படும் பட்சத்தில் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.

* சில குழந்தைகளுக்கு பஸ்/வேனில் செல்லும்போது வாந்தி வரும் பாதிப்பு இருக்கலாம். இந்தப் பாதிப்பைப் பள்ளியில் சேர்க்கும் முன்பே கட்டுப்படுத்த வேண்டும்.

* பள்ளிக்குப் பிள்ளைகளைக் காட்டன் உடைகளிலேயே அனுப்பிவைக்கவும். சாக்ஸ், ஷூ அணிவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி உண்டாகும். பள்ளியில் சேர்க்கும் முன்பே இந்தப் பாதிப்பைக் கண்டறிந்து குணப்படுத்திவிட வேண்டும். ஒருவேளை பள்ளிச் செல்லும் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால், அதைப் பள்ளித் தரப்பில் தெரிவித்து, அதற்கான சிகிச்சை பெற்றுச் சரியாகும்வரை விலக்கு பெறலாம்.

மனநலனில் செக் பாயின்ட்ஸ்

* பயண தூரம் குறைவாக / வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது நலம். இதனால், அலைச்சல்/அசதியைத் தவிர்க்கலாம்.

* குழந்தைகளைத் தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களை நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று சில மணி நேரமாவது அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகவைக்க வேண்டும்.

* கிண்டர் கார்டன், கேஜி வகுப்புகளில் குழந்தைகளை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்கவைக்கலாம். எனவே, பள்ளி செல்வதற்கு முன்னர், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்கவைத்துப் பழக்கலாம்.

* ஆரம்பத்தில் சில வாரங்களுக்குக் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடித்து அழுவது இயல்பானதே. அதுவே மாதங்களைக் கடந்தும் அழுகை தொடர்ந்தால், என்ன பிரச்னை என்பதைக் குழந்தையிடமும் பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

* பென்சில், சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களைக் கடிக்கும் மற்றும் சாப்பிடும் பழக்கம் (Pica) சில குழந்தைகளுக்கு இருக்கும். இதை முன்பே சரிசெய்ய வேண்டும். பள்ளித் தரப்பிடம் தெரிவித்துக் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்கச் சொல்லலாம்.

* தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருள்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இந்தப் பழக்கம் பள்ளியில் நிகழ்வது நல்லதல்ல. இதனால், பள்ளியில் சேர்க்கும் சில மாதங்களுக்கு முன்பே, செய்முறையுடன் விளக்கி, ‘இது தவறு’ எனக் குழந்தைக்குப் புரியும்படிப் பெற்றோர் தீர்க்கமாகப் புரியவைக்க வேண்டும்.

* சில குழந்தைகள் மற்றவர்களை அடிப்பது, கையில் உள்ளதைப் பிறரின் மீது எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகப் பெற்றோர், கதைகள், தொடர் உரையாடல்கள், தேவைப்பட்டால் கண்டிப்பின் மூலம் இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

* பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூம் சென்று கழிப்பது, சளி வந்தால் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

* குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதேபோல, பெற்றோர் சார்பாக யாராவது தன்னைப் பள்ளியிலோ, வேறெங்கும் வெளியிடத்திலோ வந்து அழைத்தால், அவர்களிடம் பாஸ்வேர்டு சொல்லச் சொல்லிக் கேட்கப் பழக்க வேண்டும். (அந்த பாஸ்வேர்டை, ஏற்கெனவே பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்)

* வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, குழந்தைக்குத் தொந்தரவு தராத வகையிலான ஹேர்கட் போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள் விளையாடும்போது/சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதமாக வாய்ப்புள்ளது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4 – 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு

* புதிய கல்வியாண்டில் வேறொரு புதிய பள்ளிக்குக் குழந்தையை மாற்றும்போது, அவர்களின் உளவியல் பெரிதும் பாதிக்கப்படும். படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, குழந்தை சரியாகப் படிக்கவில்லை உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனைக் கண்டறிந்து தீர்வு காண்பதே சரி. அடிக்கடி பள்ளி மாற்றுவது நல்லதல்ல.

* விடுமுறை நாள்களிலேயே கண் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் கண்ணாடியை அணிவிக்கலாம். இதனால், ஆரம்ப நாள்களில் ஏற்படும் உறுத்தல் சரியாகி, பள்ளி திறக்கும்போது கண்ணாடி அணிவதென்பது அவர்களுக்குப் பழகிப்போயிருக்கும். கண் பிரச்னையால் குழந்தைகள் படிப்பில் கவனம் குறைந்துபோவதையும் தவிர்க்கலாம்.

* புதிய கல்வியாண்டு, புத்தகங்கள், வகுப்பறை, ஆசிரியர்கள் என்றாலே சில குழந்தைகள் பயமாகிவிடுவார்கள். ‘நீ புரமோஷன் பெற்று, அடுத்த வகுப்புக்குச் செல்கிறாய். பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள இருக்கிறாய், அது நல்லதோர் அனுபவமாக அவர்களுக்கு இருக்கும்’ என்று பெற்றோர் பாசிட்டிவாகச் சொல்லி, அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

* குட் டச், பேட் டச், யாரிடம் எப்படிப் பழக வேண்டும், பிறர் பழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட, பாலினம், பாலியல் சார்ந்த விஷயங்களை, குழந்தைகளின் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப சொல்லித்தர வேண்டும்.

* காது வலி, பல் வலி, சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, மூச்சுத்திணறல், தொடர் இருமல் உள்ளிட்ட எந்த உடல்நலப் பிரச்னையாக இருப்பினும் அதைக் கண்டறிந்து சரிபடுத்த வேண்டும்.

* உரிய நேரத்தில் சிறுநீர் கழிக்காமல்விட்டால் உண்டாகும் யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னையின் தீவிரத்தை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* பொதுவாக, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையே ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும்.

மேற்சொன்ன விஷயங்களில் எல்லாம் உங்கள் குழந்தையின் உடலும் மனமும் நலம்தானா?! உறுதி செய்துகொள்ளுங்கள்.

பெண் குழந்தைகளுக்கு ‘பாய் கட்’ நல்லது!

* 3 – 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ‘பாய் கட்’ செய்துவிடுவது நல்லது. இதனால் தலையில் அழுக்கு சேர்தல், பேன், பொடுகு பிரச்னைகளைத் தவிர்க்கலாம், பராமரிப்பதும் சுலபம். பிள்ளைகளும் கேசப் பிரச்னைகள் இன்றி படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

Advertisements
%d bloggers like this: