ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்க இதெல்லாம் அவசியம்… உங்களுக்கு செட்டாகுமா?!

முன்பெல்லாம் கம்யூட்டர் பைக் என்று ஒரு செக்மன்டே இருந்தது. ஸ்ப்ளெண்டர், பிளாட்டினா, டிஸ்கவர்,  CT100 என பல பைக்குகள் இருந்தன. அதாவது, ஆஃபீஸ், கடைவீதி, பால் பாக்கெட்டு வாங்குவதற்கெல்லாம் ஏற்றவை இந்த கம்யூட்டர்கள். இப்போதெல்லாம் சிக்னல்ல நிக்கிறப்போ பார்த்தீங்கன்னா, ஸ்ப்ளெண்டர் பைக் இருந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டுகதான் அதிகம் நிக்கிது. ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்கிறது பிரச்னையில்லை, ஆனா, அத வெச்சிருக்கவங்கள பார்த்தாதான் கண்ணு வியர்க்குது. ராயல் என்ஃபீல்டு வாங்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், யாருக்கெல்லாம் இந்த ராயல் என்ஃபீல்டு செட்டாகாது என்று பார்ப்போம்.

நம்பிக்கை

ராயல் என்ஃபீல்டு

நம்பிக்கை வேண்டும், நாணயம் வேண்டும் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு சத்தியமாக செட் ஆகாது. இப்போது வரும் கிளாசிக், புல்லட் பைக்குகள் எல்லாம், ஓரளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது உங்கள் பைக்கை நம்பி, அதாவது ராயல் என்ஃபீல்டை நம்பி எந்த வேலையிலும் இறங்கவே முடியாது. சர்வீஸ் செய்யாமலே பலநாள் ஓட்டிடலாம் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்காதீர்கள். ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்றால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாது.

ராயல் என்ஃபீல்டு அந்த பைக்கை நேசிக்கும் காதலர்களுக்கானது. பைக்கை, போக்குவரத்துக்கு மட்டுமே பார்க்கிறீர்கள் என்றால் பிரச்சனை எதுக்கு. ஐடியாவை கைவிட்டுவிடுங்கள். எனக்கு புல்லட் மீது செம்ம காதல். எடுத்தா, புல்லட்டுதான் என்றால் இந்த பைக் உங்களுக்கானது.

சட்டைதான் எனக்கு முக்கியம்

`வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கட்டிட்டு ராயல் என்ஃபீல்டு பைக்ல போறதே ஒரு தனி கம்பீரம்’ என்று அலப்பறை செய்யும் முடிவு இருந்தால் வேறு ஏதாவது மாடர்ன் பைக்காக பார்த்து ஓடி விடுங்கள். ராயல் என்ஃபீல்டு வாங்கவேண்டுமா, காதல் பரத்தில் பாதி, ஆடுகளம் தனுஷில் பாதியாக கொஞ்சம் அழுக்கும், ஹேண்ட்சமுமாக மாறிவிடவேண்டும். உண்மையான ராயல் என்ஃபீல்டு ரைடர்கள் எப்போதும் டூல் கிட்டை பைக்கில் வைத்துக்கொண்டுதான் சுற்றுவார்கள். அதிக வைப்ரேஷன் இருப்பதால் எந்த போல்டு எப்போது லூஸ் ஆகும் என்றே தெரியாது. ராயல் என்ஃபீல்டுடன் வாழ குறைந்த பட்சம் நீங்கள் ஒரு அரை மெக்கானிக்காக மாறவேண்டும். தன் பைக்கை தானே சரிசெய்யும் சுகத்தை ராயல் என்ஃபீல்டு மூலம் அனுபவிக்கலாம். அது ஒரு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ். ஆனால், கையில் கிரீஸ் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு ராயல் என்ஃபீல்டு செட் ஆகாது. 

பணப் பிரியர்

கொடுக்கும் காசுக்கு மற்ற பைக்கை விட அதிக வசதிகள் எந்த பைக்கில் இருக்கிறதோ, அதுதான் எனக்கு வேணும் என நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு ராயல் என்ஃபீல்டு தேவைப்படாது. ராயல் என்ஃபீல்டின் ஆரம்ப விலையே (bullet 350cc) 1.30 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு 350 cc பைக் தராங்களே என்று ஆச்சர்யப்படுபவர்களை பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு கொடுக்கும் காசு அதிகம். 19.8bhp பவரும் 28.5Nm டார்க்கும் பல்ஸர் 200 NS பைக்கிலேயே வந்துவிடுகிறது.  NS பைக்கின் எடையும் குறைவு. மேலும், புல்லட் 350 வெறும் ஸ்பீடோ மீட்டர், ஆம்ப் மீட்டர், ஓடோமீட்டர் மட்டுமே வைத்த ஒரு ஆதிகாலத்து பைக். செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக் கூட கிடையாது. அதன் தனித்த ஓட்டுதல் தன்மைக்காகவே விற்பனையாகும் பைக். உங்களுக்கு பணம் முக்கியமா, இல்லை ராயல் என்ஃபீல்டின் ஓட்டுதல் அனுபவம் முக்கியமா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

பழமை  vs புதுமை

சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாடர்ன் விஷயங்கள் மீது நம்பிக்கை கிடையாது. ஆண்டிராய்டு முதல் மேக் லேப்டாப் வரை எல்லாம் தெரிந்தாலும் அவர்களுக்கு என்னவோ சைக்கிளும்,  டிவியும், சில சந்திப்புகளும் மட்டுமே பிடித்திருக்கும். வாட்சாப் தேவையில்லை, ஃபேஸ்புக் தேவையில்லை, அமேஸான் தேவையில்லை, கிரெடிட் கார்டு தேவையில்லை. மாடர்ன் விஷயங்கள் வேண்டாம்; சிம்பிளான வாழ்க்கை போதும் என்று வாழ்பார்கள். அவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு ஓகே. ஆனால், ஆண்டிராய்டு, மேக், அமேஸான், என மாடர்ன் மனிதர்களாக வாழ்பவர்களுக்கு பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தேவை, ஸ்லிப்பர் கிளட்ச் தேவை, ஏபிஎஸ் தேவை. இதில் நீங்கள் எந்த வகை என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நான் மய்யமா வாழ்றேன் என நினைத்துக்கொண்டு பைக்கை வாங்கிவிட்டுப் புலம்புபவராக இருந்துவிடாதீர்கள். 

வேகம்

” Speed. Faster than fast, quicker than quick. I am Lightning.”  இந்த வசனத்தையே பைக்கிலும் மனதிலும் ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டு திரியும் வேக விரும்பியாக இருந்தால், ராயல் என்ஃபீல்டு உங்களுக்கானது இல்லை. இந்த பைக்கின் தோற்றமே ரொம்ப பாந்தமானது. பைக்கும் அப்படியே. 60 முதல் 80 கி.மீ வேகம்வரை ஜாலியாக போகலாம். அதற்கு மேலே 100 கி.மீ வரை கஷ்டப்பட்டு போகலாம். அதற்கும் மேலே போகவேண்டும் என்றால் அதிக சகிப்புத்தன்மையும், ஆபத்தில்லாத பாதையும் தேவை. அது சாத்தியமே இல்லை. மேலும், வளைவுகளில் த்ரில்லிங்காக சாய்ந்து போக முடியாது. சட்டென்று பைக் நிற்கவும் செய்யாது. ஏனென்றால் ராயல் என்ஃபீல்டு வேகத்துக்குத் தயாரிக்கப்பட்ட பைக் அல்ல.

ஸ்டைல்

ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினால் அதற்கு ஏற்றமாதிரியான ஸ்டைல் ரொம்பவே முக்கியம். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் லுக் அதை தனிமைப்படுத்தி காட்டுகிறது. இதனால் நாம் போடும் உடைகளும் அப்படியே இருக்கவேண்டும். கலர் கலர் சினோஸ் ஸ்டைல் பேன்ட்டுகளும், ரேஸ் ஹெல்மட்டும், வேஃபரர் டைப் கூலிங் கிளாஸும் போட்டுவந்தால் சூப்பராக இருக்கும். ஆனால், அதே கெட்டப்பில் ராயல் என்ஃல்டு ஓட்டினால் சக்கரபொங்கலுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிடுவதாகத்தான் இருக்கும். ஒல்லி உடம்பு காரர்களுக்கு ராயல் என்ஃபீல்டு செட்டே ஆகாது. தாடி, மீசை, வின்டேஜ் லுக், ஃபிட்டான உடல் வாகு உள்ளவர்கள் ராயல் என்ஃபீல்டு ஓட்டினால் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். பைக்கை வாங்கினால் மட்டும் போதாது, நாமும் அந்த பைக்குக்காக கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். ஸ்டைல் மீது கவனம் இல்லையென்றால், ராயல் என்ஃபீல்டுக்கு நோ சொல்லிவிடுங்கள்.

சிம்பிள் பைக்

தேவையான வசதிகள் மட்டுமே வைத்து, பைக் சிம்பிளாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்தப் பாராவைப்  படித்துவிட்டு இன்னொருமுறை யோசியுங்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ஆம்ப் மீட்டர் வருகிறது. இது பேட்டரியின் வோல்டேஜை காட்டும். இந்த வசதி இப்போது யாருக்குமே தேவைப்படுவதில்லை. பைக்கில் அதிர்வுகள் அதிகம் என்பதால் 60 கி.மீ மேல் போனால் ரியர் வியூ மிரர்களில் ஒன்றுமே தெரியாது. அதனால் அதுவும் தேவையில்லை. கிளாசிக் 500, ஹிமாலயன் போன்ற பைக்குளில் Fuel Injection சிஸ்டம் வருகிறது ஆனால், oxygen sensor இல்லை என்பதால் பெட்ரோல் தேவை பூர்த்தியாகாது. இதுபோல ராயல் என்ஃபீல்டில் பல விஷயங்கள் இந்த காலத்துக்கு தேவைப்படாத ஒன்று. தேவையான வசதிகள் மட்டுமே உள்ள சிம்பள் பைக் வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டு உங்களுக்குத் தேவையான என யோசித்துக் கொள்ளுங்கள்!

%d bloggers like this: