அக்கறையால் அல்ல… நம் சுயநலத்தால் தொடங்கப்பட்டதுதான் இந்த சுற்றுச்சூழல் தினம்!

னைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான்” என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான்.
“எனது” என்று சொந்தம் கொண்டாடப்படும் விஷயங்களின் மீது மட்டுமே கொள்ளப்படும் அதீத அக்கறைதான் தனியுடைமையின் உறைவிடம். இது நமது பூமி என்று கூறப்படுவதால் தானோ என்னவோ அந்த அவலம் பூமியையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஒவ்வொரு அணுவுக்கும் சம்பந்தம் உண்டு. ரத்தமும் சதையுமாக இருக்கும் உடலைப் போன்றதுதான் பூமி. அதனால்தான் எங்கோ வெளியிடும் கரியமில வாயு, அதற்குத் துளிகூட சம்பந்தமில்லாத துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகளைச் சூடேற்றிக் கரைத்துக்கொண்டிருக்கிறது.

விழிப்பு உணர்வு

ஒருகட்டத்தில் மனிதர்களின் செயல்கள் இயற்கையோடு பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டது ஐக்கிய நாடுகள் அமைப்பு. ஆனால், மக்களின் சுயநலச் சிந்தனைகள் பொதுவான பூமியின்மீது பரிவுகொள்ளத் தடையாக இருப்பதை உணர்ந்தார்கள். இறுதியில், எனது என்ற சுயநலத்தையே ஆயுதமாகக் கையில் எடுத்தார்கள். “இது எனது பூமி இதை நான் தான் பாதுகாக்க வேண்டும்” என்ற சிந்தனையை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைக்கப் பெரும்பாடுபட்டார்கள். அப்படித் தொடங்கிய சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு தான் 44 ஆண்டுகளாக 183 நாடுகள் கொண்டாடும் உலக சுற்றுச்சூழல் தினமாகப் பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-5 வரை நடைபெறும் கொண்டாட்டங்கள் முடிவடையும் நாளான 5-ம் தேதி தான் உலக சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்காக ஆண்டுதோறும் ஒரு விருந்தினர் நாடும், மூலப்பொருளும் தேர்வுசெய்யப்படுகிறது. சூழலை அழித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளில் முக்கியமானவற்றைத் தேர்வு செய்து அதை மூலப்பொருளாக வைத்து விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். அதற்கு அடுத்த ஆண்டில் அப்பிரசாரங்களின் தாக்கம் பற்றியும் அதனால் விளைந்த நன்மைகளைப் பற்றியும் ஆய்வுசெய்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கையாள்வார்கள். அந்த வரிசையில் 2018-ம் ஆண்டு 45-வது உலக சுற்றுச்சூழல் தினத்தின் விருந்தினர் நாடாக இந்தியா தேர்வுசெய்யப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம்

பிப்ரவரி மாதம் 19-ம் தேதியில் இந்தியா விருந்தினர் நாடாக இருக்க ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டதில் இருந்தே பிளாஸ்டிக் குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரங்களையும், நடைப்பயணங்களையும் நாடு முழுவதும் பல்வேறு சூழலியளார்கள் மேற்கொண்டுவிட்டனர். இந்திய அரசாங்கம் இந்த ஐந்து நாள்களும் டில்லியில் இருக்கும் விஜ்யன் பவனில் பிளாஸ்டிக் குறித்த கண்காட்சியை நடத்துகிறது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வரதன் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்திய பள்ளிகளுக்கு கௌரவ விருதுகளை வழங்குவார். இவை மட்டுமின்றி பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளால் பிளாஸ்டிக் மறுசுழற்சி விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள், கடற்கரை சுத்தம் செய்தல் என்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும்.

சுற்றுச்சூழல்

இந்தச் சமயத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, பிளாஸ்டிக் மோகம் பற்றியதுதான். ஒன்று நம்மைக் காயப்படுத்துகிறது என்பது நமக்குத் தெரியாதவரை அதனால் ஏற்படும் காயங்கள் நமக்கு வலிக்காது. அந்த அறியாமையோடே நாம் இருக்கும்போது காயப்படுவதையே விரும்பிச் செய்யத்தொடங்கிவிடுவோம். 1930-களில் சிகரெட் பயன்பாடு உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது என்ற பிரசாரத்தை நம்பிப் புகைப்பிடிக்கத் தொடங்கியவர்கள், பிற்காலத்தில் விஞ்ஞானிகள் அதன் விளைவுகளைக் கண்டறியும்வரை அப்படியே நம்பியிருந்தனர். அதன் விளைவாக ஆபத்து என்று தெரிந்தும் அதைவிட முடியாத நிலையும், புகைப்பிடித்தல் மன அமைதி தருவதாகச் சில பிரமைகளும் இன்றளவும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. காரணம், வீடியோக்களாலும், விளம்பரங்களாலும் ஏற்பட்ட மோகம். அப்படியொரு மோகம்தான் பிளாஸ்டிக் மீதும் திணிக்கப்பட்டது. விஷயம் என்னவென்றால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கிய பின்னும்கூட அதைப் பயன்படுத்துவதை நிறுத்த நம்மால் முடிவதில்லை. காரணம் அது நமது அத்தியாவசியங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. அதைத் தவிர்ப்பதற்குத் தற்போது நமக்கு மாற்றுத் தேவைப்படுகிறது.

மாற்று என்ற வகையில் காகிதப் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதற்காக மரங்களை வெட்டவேண்டி வரும். ஒரு வருடத்துக்குப் பயன்படுத்தப்படும் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக எத்தனை மரங்களை வெட்டுவது? அதில் 50% மறுசுழற்சி செய்ய முடியாதவை. ஒரு நிமிடத்துக்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. அந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் சில நூற்றாண்டுகளுக்குக் கூடச் சிறிதும் மக்காமல் அப்படியே இருக்கும் அளவுக்கு அபாயமானவை. இத்தகைய பிளாஸ்டிக் பொருள்களைக் குப்பைக்கு அனுப்பாமல் மறுபயன்பாடு செய்வதே வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் கழிவுகள் சேருவதைத் தடுக்க இருக்கும் ஒரே தீர்வாகக் கருதப்படுகிறது. இதுவரை சேர்ந்த கழிவுகளைச் சேகரித்துத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி அவற்றை மறுசுழற்சி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் முழுமையாக மேற்கொள்ளவேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்களை வாங்குவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்துவதே மறுசுழற்சியின் முக்கியத்துவத்தைப் புரியவைக்கும். அதையே இந்த ஆண்டின் மூலப்பொருளாகக் கொண்டு இந்தியா உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடி வருகிறது.

பிளாஸ்டிக்

%d bloggers like this: