உலக சுகாதார நிறுவனம் ஒரு பார்வை

42

மருத்துவர்களும், மருத்துவக் கட்டுரைகளும் அடிக்கடி குறிப்பிடுகிற ஓர் அமைப்பு உலக சுகாதார நிறுவனம். அப்படி என்ன உலக சுகாதார நிறுவனத்துக்கு சிறப்பு இருக்கிறது? எங்கே இருக்கிறது?அறிந்துகொள்வோம்… World Health Organisation(WHO) என்கிற உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் சர்வதேச அளவில்(194 நாடுகளில்) பொது சுகாதாரத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

மருத்துவரீதியான கல்வித்தகுதி கொண்டவர்களே இதன் உறுப்பினர்களாக உள்ளனர். தலைமை அலுவலகமான ஜெனீவாவில் இதுபோல் தகுதிவாய்ந்த 34 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கொரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

WHO ஏப்ரல் 7-ம் தேதி, 1948-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொடங்கப்பட்டது. உலகில்உள்ள அனைவருக்கும் இயன்றவரை சிறந்த
சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எந்த நாட்டில் சுகாதார பிரச்னைகள் தலை தூக்கினாலும் இது தாமாகவே தலையிட்டு அதற்கான தீர்வையும் அளிக்கிறது.

தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளைத் தீர்க்க போராடுவது மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதை தனது முக்கிய வேலைத்திட்டமாக WHO வைத்திருக்கிறது. இதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் Asklepian stick ஏற்கப்பட்டுள்ளது.

பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பகட்டத்தில் WHO தீவிரமாக மேற்கொண்டதுபோலவே எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான World health report இந்த அமைப்பாலேயே வெளியிடப்படுகிறது.

2009 மற்றும் 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் எச்.ஐ.வியினால் இறக்கக் கூடிய 15 முதல் 24 வயதினரை 50 சதவிகிதமாக உலக சுகாதார நிறுவனம் குறைத்துள்ளது, மேலும் 90% குழந்தைகளுக்கு புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பரவாமலும் தடுத்துள்ளது. எச்.ஐ.வி தொடர்பான இறப்புகளை 25% குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1970-களின்போது மலேரியாவைத் தடுக்க பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டது. உலகளாவிய மலேரியா நோய்த்தடுப்புக்கு வலுவான பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நோய் பரவாமல் எண்ணற்ற கர்ப்பிணிகள் மற்றும் இளம் குழந்தைகளின் உயிர் காக்கப்பட்ட்து. 1990-ம் ஆண்டுக்கும் 2010-ம் ஆண்டுக்கும் இடையில் உலக சுகாதார அமைப்பின் உதவியால் காசநோயானது 40% வீழ்ச்சி அடைந்தது. இந்த அமைப்பு பரிந்துரைத்த நடைமுறைகளின்படி, உலக அளவில் 7 மில்லியன் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஆரம்பநிலையிலே நோயறிதல், சிகிச்சை தரத்தை நிலைப்படுத்தல் மற்றும் மருந்து அளிப்பை உறுதிப்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும். 1988-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது போலியோ ஒழிப்பதற்கான உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியை ஆரம்பித்தது. ரோட்டரி
இன்டர்நேஷனல், டிசீஸ் கண்ட்ரோல் மற்றும் தடுப்பு மற்றும் ஐ.நா. சிறுவர் நிதியம் சிறுநிறுவனங்களுடன் இணைந்து 99% போலியோவைக் குறைத்துள்ளது.

அடுத்ததாக சுற்றுச்சூழல் ஆரோக்கியம், 2012-ம் ஆண்டில் ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழலில் வாழ்ந்து அல்லது வேலை செய்வதன் விளைவாக 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக WHO மதிப்பீடு செய்துள்ளது. இது மொத்த உலக மரபுகளில் 4 ல் 1 பங்காக உள்ளது. காற்று, நீர், மண் மாசுபாடு, ரசாயன வெளிப்பாடுகள், காலநிலை மாற்றங்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு போன்ற சுற்றுச் சூழல் அபாய காரணிகள் 100-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என கூறுகிறது.

உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறாக அசுத்தமான குடிநீரை பருகும் 5 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் மரண மடைவதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதாரத் துறையின் தலைவரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கழிவுகளிலிருந்தே நீரினை பெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து கழிவிலிருந்து பெறப்படும் நீரினை பருகுபவர்கள் காலரா, வயிற்றுக்கடுப்பு, டைபாய்டு மற்றும் போலியோ உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து வியத்தகு முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கர்ப்பம், பிரசவம், குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் உட்பட வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில், நோய்த்தடுப்பு மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பது பாலின மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் அனைத்து தனிநபர்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ
ஊக்கமளிக்க WHO வேலை செய்கிறது.

புகையிலை, ஆல்கஹால் மற்றும் பிற மனோவியல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயலற்ற தன்மை மற்றும் பாதுகாப்பற்ற பால்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய சுகாதாரமற்ற ஆபத்து காரணிகளை தடுக்க அல்லது குறைக்க முயற்சித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பானது ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும், இது பொது சுகாதார மற்றும் நிலையான வளர்ச்சியில் உறுதிப்பாடு கொண்டு இருப்பதையும் காட்டும் வண்ணம் உலக நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது.

அதேபோல் WHO சாலை பாதுகாப்பை மேம்படுத்த ஊக்குவிக்கிறது. இதனால் சாலை போக்குவரத்து விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகள் மற்றும் காயங்களை குறைக்க வழிவகுக்கிறது. உலக அளவில் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு புற்றுநோய் மருந்துகளில் இருந்து கருத்தடை வரை, நுண்ணுயிர் எதிர்ப்புகளிலிருந்து தடுப்பூசிகள் வரை எல்லாவற்றையும் உள்ளடக்கி அனைத்து சிகிச்சைப் பிரிவுகளிலும் தரக்குறைவான அல்லது போலியான மருத்துவ பொருட்கள் பற்றிய அறிக்கையை அதிரடியாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளில் மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துகளில் 10-ல் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என கூறியுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையின் படி, இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறிவிடுகின்றன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு இது காரணமாக உள்ளது. இந்தியாவில்தான் மலேரியா பாதிப்பு அதிகம் இருப்பதாக அதிர்ச்சியான தகவலையும் அளித்துள்ளது.

மேலும் மலேரியாவை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிப்பதில் இந்தியா பின்தங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ் கூறியுள்ளார்.உளவியலுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது WHO.உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 18 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மன அழுத்தமானது  தற்கொலைக்கு காரணமாக அமைகிறது.

எனவே, மனநல சுகாதாரத்தை பேணிக் காப்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம் என்றும் இதனை உடனுக்கு உடன் தீர்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் இந்த அமைப்பு உணர்த்துகிறது. தற்போது டெங்கு நோய் தடுப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற பல முக்கிய சுகாதார பிரச்னைகளில் தலையிட்டு உலக மக்களுக்கு நல் வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. இதன் பல்வேறு முயற்சியினால் இன்று நாம் பல கொடுமையான நோய்களிடமிருந்து விடுபட்டுள்ளோம் என்று கூறுவது மிகையாகாது.

One response

  1. நடைமுறை படுத்த வேண்டும் அத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்மை பயக்கும் செயல் தடை இல்லா முறையில் எவரையும் கவரும் விதத்தில் இருக்க வாழ்த்துக்கள்

%d bloggers like this: