கண்ணீரே… கண்ணீரே…

சிரிப்பு எப்படி உடலிலுள்ள நோயைப் போக்குமோ, அப்படித்தான் அழுகையும்! கண்ணீர் சிந்தி அழுதால், மனதில் உள்ள பாரங்கள் குறையும். அழுகை மனதுக்கு மட்டுமன்றி, கண்களுக்கும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களில் வறட்சி ஏற்படாமலிருக்கக் கண்ணீர் அவசியம்! அதேபோல, கண்களில் படும் தூசுகளிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் கண்ணீரே. அழுவதாலும் தூசு படுவதாலும் வெளியேறும் கண்ணீர் நம் கருவிழியில் படுவதால் சற்று நேரம் தெளிவற்றதுபோல இருக்கும்.

“கண்ணீர் சிந்துவதால் கருவிழிக்குப் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், கண்ணீரே வரவில்லையென்றால் அது கருவிழியை முழுவதுமாக பாதிக்கும்” என்கிறார் கண் மருத்துவர் சரவணன். கண்ணீர் பற்றிய மேலும் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

கண்ணீரின் மூன்று படலங்கள்

“கண்ணீர் மூன்று படலங்களைக் கொண்டது. வெளிப்புறம் உள்ள படலமானது, அங்கு சுரக்கும் நீர் ஆவியாகாமல் கட்டுப்படுத்தும். மேலும், கண் பார்வைக்கு உதவும். நடுவிலுள்ள ‘அக்வஸ் லேயர்’ (Aqueous Layer) படலமானது, 90 சதவிகிதம் கண்ணீரை உற்பத்தி செய்கிறது. கண்ணீரில் எலெக்ட்ரோலைட், தண்ணீர், புரதம் மற்றும் கரையும் பொருள்களுமே உள்ளன. ஆன்டி பாக்டீரியல் (Antibacterial) சத்துகளைக் கொண்ட இந்தப் படலம், கருவிழிக்குத் தேவையான புரதத்தையும் ஆக்சிஜனையும் கொடுத்து நோய்த்தொற்றுகளில் இருந்து கண்களைக் காக்கும். கடைசியாக உள்ள படலம், கருவிழியின் மேற்பரப்பில் நீரை ஒட்டிவைத்துக்கொள்ளும். தேவையானபோது வெளிக்கொண்டுவரும். படலங்களில் உருவாகியிருக்கும் நீர், சட்டென வெளியே வந்துவிடாமல் இருக்க இதுவே முக்கியக் காரணம்.

அதிகக் கண்ணீர் ஏன்?

* சிலருக்கு அதிகமாகக் கண்ணீர் வெளிவருகிறது என்றால் அதற்குச் சில காரணங்கள் இருக்கும். கண்ணில் தொற்று பாதிப்பு, ஒவ்வாமைப் பிரச்னைகள், கண்ணில் காயம் அல்லது அடிபடுவது, கண்புரை, கண் அழுத்த நோய் (Glaucoma), கிட்டப்பார்வை (Myopia) அல்லது தூரப்பார்வை, கண்ணீர்ப் படலங்களில் அடைப்பு (Blockage) அல்லது பாதிப்பு போன்றவை காரணங்களாக இருக்கும்.

* உணர்ச்சி அதிகமாகத் தூண்டப்படும்போது கண்ணீர் வரும். உதாரணமாக, காரமான உணவு சாப்பிடுவது, அதீத மகிழ்ச்சி மற்றும் துக்க நிகழ்வுகளின்போது உணர்ச்சி அதிகமாகத் தூண்டப்பட்டுக் கண்ணீர் வரும்.

* பொதுவாக, ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 15 முறை கண் சிமிட்டவேண்டும். ஆனால் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டி.வி போன்றவற்றைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண் சிமிட்டுவதை நிறுத்தித் திரையோடு ஒன்றிக் கண் சிமிட்டவே மறந்துவிடுகிறோம். அப்போது சராசரியாக மூன்று முதல் நான்கு நிமிடத்துக்கு ஒருமுறைதான் கண் சிமிட்டுவோம். இதனால், கண்ணிலுள்ள மெல்லிய திரை எரிச்சலுக்குள்ளாகி, உள்ளிருக்கும் நீரை வலுக்கட்டாயமாக வெளியே வரவைக்கும். இதுபோன்ற சூழல் அடிக்கடி ஏற்பட்டால், கருவிழியில் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

கண்களில் வறட்சி

* கண்கள் வறண்டுபோவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஏ.சி அறைக்குள்ளேயே இருப்பது கண்களில் உள்ள நீரை வறண்டு போகச்செய்யும். குறிப்பாக ஏ.சி அறைகளில் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதால் பிரச்னை தீவிரமாகும்.

* கண்கள் வறண்டுபோனால், அதைச் சில அறிகுறிகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். கண் பார்வையில் குறைபாடு, கண்ணில் எரிச்சல் அல்லது வலி, ஒளியைக் கண்டால் கண் கூச்சம் (Photophobia), கண்ணில் தூசு விழுந்த மாதிரியான உணர்வு (Foreign Body Sensation) போன்ற அறிகுறிகள் காணப்படும்.


கண்ணீர் துளிகள்

* கண்ணீர் உற்பத்தியாகுமிடம்: லாக்ரிமல் சுரப்பி (Lacrimal Glands)

* கண்ணீரின் அடர்த்தி – 7 – 8 μm (தோராயமாக)

* மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது, கண்ணாடி அணிந்து தூசு மற்றும் மாசிலிருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டும்.

* கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை முடிந்தவரைக் குறைத்துக் கொள்ளவும். குறிப்பாக, ஏ.சி அறைகளில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* ஐ.டி பணியாளர்களால் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதைக் குறைக்கமுடியாது, ஏ.சி அறையையும் தவிர்க்கமுடியாது. இவர்கள், 20-20-20 என்ற ஒழுங்குமுறையைப் பின்தொடரலாம். அதாவது, 20 நிமிடம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தபிறகு, 20 விநாடி இடைவெளி எடுத்துக்கொண்டு, 20 அடியைத் தாண்டி இருக்கும் பொருளைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால், கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கப்பெற்றுக் கண் வலி வராது.

* கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபோது கண்ணீர் அதிகமாக வெளியே வருவது, நீண்ட நாள் கண்ணீரே வராமலிருப்பது என இரண்டுமே ஆபத்து. இப்பிரச்னை உள்ளவர்கள், மருத்துவர்களை அணுகவேண்டியது அவசியம்.

* பார்வைக்குறைபாட்டுக்காக கண்ணாடி அணிபவர்கள், அவற்றைத் தொடர்ந்து அணிய வேண்டியது அவசியம்.

* பிறந்து, ஆறு மாதங்களுக்குப் பிறகே கண்ணீருக்கான மூன்று படலங்களும் வேலை செய்யத் தொடங்கும் என்பதால், பிறந்த குழந்தைகள் அழும்போது அவர்களுக்குக் கண்ணீர் வருவதில்லை. ஒருவேளை, ஆறு மாதத்துக்கு முன்பே குழந்தையின் கண்ணிலிருந்து நீர் வெளியே வந்தால், கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

%d bloggers like this: