சசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்?

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டாரே தினகரன்?” என்றோம்.
‘‘ஆமாம்… அவரது சபதம் ஆச்சே! ‘எதிரிகள் தடுத்தாலும், சொந்தக் குடும்பத்தினர் தடுத்தாலும், கட்சியைத் தொடங்கி என் போக்கில் பயமில்லாமல் செல்வேன்’ என்று சபதம் போட்டுள்ளார் தினகரன். அதன் முதற்கட்டமாகவே, தலைமை அலுவலகத்தை  அவர் திறந்துவிட்டார்.”
‘‘இந்தத் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்?”

‘‘திவாகரனின் திடீர் எதிர்ப்புதான் காரணம். ஜூன் 3-ம் தேதி திறப்பு விழா என்று தினகரன் அறிவித்ததும், ‘கருணாநிதியின் பிறந்தநாள் அன்று, கலைஞர் கருணாநிதி நகரில் தினகரனின் அலுவலகம் திறப்பு’ என்று கிண்டல் செய்தார்கள். அதைப் பற்றியெல்லாம் தினகரன் கவலைப்படவில்லை. கடந்த ஆண்டு இதே ஜூன் 3-ம் தேதி திகார் சிறையிலிருந்து விடுதலை பெற்று தினகரன் சென்னைக்கு வந்தார். அதனால்தான், இந்தத் தேதியைத் தேர்வு செய்தாராம். அலுவலகம் அமையும் இடம், முன்னாள் அமைச்சரும் அம்மா பேரவை இணைச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது.”
‘‘திறப்பு விழாவில் என்ன விசேஷம்?’’
‘‘தினகரனை சசிகலா குடும்பத்தினர் தனியாக விட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரவியிருந்தது அல்லவா? அதற்கு பதில் தரும் வகையில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் வந்திருந்தனர். தினகரன் வரும் வரையில் வெளியே மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் விவேக். தினகரன் வந்ததும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினார். தினகரனும் அவசர அவசரமாக ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றிவிட்டுக் கிளம்பிப்போனார். வந்திருந்தவர் களுக்கு தினகரனே மைசூர் பாகு கொடுத்தார்.’’
‘‘விவேக் வந்தார், வெங்கடேஷ் வந்தார். ஆனால், தினகரனுக்கு இடதும் வலதுமான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரைக் காணோமே?’’

‘‘வெற்றிவேல், குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்றும், தங்க தமிழ்ச்செல்வன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ‘உடம்பு சரியில்லையா, மனசு சரியில்லையா?’ என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உள்பட தினகரன் பக்கம் வந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வாரத்தில் வந்துவிடும் என்கிறார்கள். இதற்கிடையே, இவர்களில் பலரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆளும்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரப்போகும் தீர்ப்பு ஆளும்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா, அல்லது தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.’’
‘‘என்ன செய்கிறார் திவாகரன்?’’
‘‘தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ‘அ.தி.மு.க அம்மா அணி என்கிற பெயரில் இனி செயல்படுவோம்’ என்று கூறிய திவாகரன், தனியாக அலுவலகத்தையும் மன்னார்குடியில் திறந்தார். வரும் 10-ம் தேதி அம்மா அணியை வேறு பெயரில் தனிக்கட்சியாக அறிவித்து அதற்கான கொடியையும் மன்னார்குடியில் அறிமுகம் செய்கிறார். அன்றைய தினத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. கட்சியின் பெயரில் ‘அண்ணா’ நிச்சயமாக இருப்பாராம். அ.தி.மு.க கொடியில் உள்ள வண்ணங்களும் அப்படியே இருக்குமாம். ஆனால், ‘கொடியில் இடம்பெற உள்ள சின்னம்தான் ரொம்ப ஸ்பெஷல்’ என சஸ்பென்ஸுடன் சொல்கிறார்கள், திவாகரன் ஆதரவாளர்கள்.’’
‘‘சசிகலா குடும்பத்தில்தான் எத்தனை கட்சிகள்?”
‘‘தினகரனின் அ.ம.மு.க., திவாகரனின் அம்மா அணி, தினகரன் தம்பி பாஸ்கரனின் பாஸ் நற்பணி மன்றம், ஜெயானந்த் நடத்தும் போஸ் மக்கள் பணியகம் ஆகியவை இப்போது இயங்கி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா புது அமைப்பு ஒன்றைத் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்.’’
‘‘அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யான நவநீதகிருஷ்ணனின் மகள் திருமணத்தில் என்ன விசேஷம்?’’
‘‘ஜூன் 3-ம் தேதி தஞ்சையில் திருமணம் நடைபெற்றது. அ.தி.மு.க தரப்பிலிருந்து வைத்திலிங்கம், அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஆர்.காமராஜ் மற்றும் லோக்கல் நிர்வாகிகள் என ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் வந்து சில நிமிடங்கள் இருந்துவிட்டு உடனே சென்று விட்டனர். 11 மணிக்கு மேல் திவாகரன் வந்தார். அவரைக் கட்டிப்பிடித்து வரவேற்றார் நவநீதகிருஷ்ணன். இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தினகரன் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. ‘மாற்றுக் கட்சியினர்கூட வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். நாம் இருக்கும் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் நிறையப் பேர் வரவில்லையே’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நவநீதகிருஷ்ணன் புலம்பினாராம்’’ என்ற கழுகார், அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் குறித்த செய்திகளுக்கு வந்தார்.

‘‘இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆணையம் விசாரித்துவிட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்களையோ, அப்போலோ மருத்துவர்களையோ இதுவரை ஆணையம் விசாரிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. ‘ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், அதைவிட்டுவிட்டு பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து வருவது ஏன்’ என்று சசிகலா தரப்பில் கேட்கிறார்கள். ‘ஆணையத்தின் செயலாளர், சசிகலா தரப்புக்கு எதிராகவே செயல்படுகிறார். ஆணையத்தின் தகவல்களை அவர்தான் பத்திரிகைகளுக்குக் கசியவிடுகிறார்’ என்று சசிகலா தரப்பு சொல்கிறது. அநேகமாக, இதுபற்றிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம்.’’
“ம்!”
‘‘கன்னியாகுமரி, தூத்துக்குடி என தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பிற்கு எதிரான மனப்போக்கு அதிகரித்து வருகிறது. ‘தூத்துக்குடி விவகாரத்தை ஆரம்பத்திலேயே ஒழுங்காகக் கையாண்டிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. தென் மாவட்டங்களில் செல்வாக்கான இனங்களைச் சேர்ந்த பவர்ஃபுல் அமைச்சர்கள் யாரும் இல்லை. இதனால், பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலை உள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்னைகளைக் கிளப்பும்போது, ஆளும் கட்சி கமுக்கமாக இருந்துவிட்டது’ என்று உளவுத்துறை நோட் போட்டுள்ளது. இது முதல்வரை யோசிக்க வைத்திருக்கிறதாம்.’’
‘‘சட்டசபை விவகாரத்தில் தி.மு.க-வின் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்னவாம்?”
‘‘கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரும் சொன்னதால் மீண்டும் உள்ளே செல்லலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்தாராம். ‘பயந்து ஓடிவிட்டார்கள்’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்வதைத் தவிர்க்க நினைத்தாராம். தமிழகத்தின் மூன்று இடங்களில் போட்டி சட்டமன்றங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ‘இவற்றில் கலந்துகொள்ள முடியாது’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். ‘நாம் இல்லையென்றால் ஆளும்கட்சிக்குத்தான் வசதியாகப் போகும்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் சொன்னார்கள். அதன்பிறகுதான், சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மார்ச் 20-ம் தேதி கூண்டோடு அவையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் தி.மு.க-வினர். இரண்டாவது முறையும் இப்படி ஏதாவது காரணம் சொல்லி வெளியேற்றப்பட்டால், அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது சிக்கலாகும். 18
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வரும்போது, ஒரு முடிவெடுக்க உள்ளது தி.மு.க. அதனால்தான், மீண்டும் சட்டசபைக்கு வரத் தீர்மானித்தார் ஸ்டாலின்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார் பறந்தார்.

%d bloggers like this: