Advertisements

அழகுக்கு உதவும் வாழைப்பழம்! தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள் 

உலகம் முழுதும் பரவலாக பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒன்று வாழைப்பழமாகும். வாழைப்பழங்கள் எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுவது, கொழுப்பைக் குறைப்பது, புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைப்பது எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர, சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளும் வாழைப்பழத்தில் உள்ளன. துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் C வைட்டமின் B6 வைட்டமின் A போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். வாழைப்பழம் 75% நீரைக் கொண்டுள்ளது, ஆகவே சருமத்திற்குத் தேவையான நீர்ச்சத்தும் இதிலிருந்து கிடைக்கிறது. அழகு சம்பந்தமாக வாழைப்பழம் அளிக்கும் பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்:

முதுமையைத் தாமதப்படுத்துகிறது (Anti-aging)

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை: வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.

சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது (Soft and Glowing Skin)

இதில் பொட்டாசியமும் நீரும் நிறைந்திருப்பதால், சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. வறண்ட சருமத்திற்கு ஈரப்பதமூட்டி உயிரூட்டுகிறது, சருமத்தின் சேதங்களையும் சரிசெய்கிறது. இது மிக எளிது, வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20-25 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E (வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும்) மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

முகப்பருவைப் போக்குகிறது (Acne Treatment)

வாழைப்பழத்தின் தோலும் சருமத்திற்கு பல நன்மைகளை அளிப்பதாகும். உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

இறந்த, சேதமடைந்த செல்களை அகற்றி சருமத்தைப் புதுப்பிக்கிறது (Exfoliate and Rejuvenate)

வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகம் உள்ளன,சருமத்தை உரசித் தேய்ப்பதற்காக வீட்டிலேயே தயார் செய்யும் ஸ்கிரப்பில் வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம், இதனால் அதிக பலன்கள் கிடைக்கும். ஒரு வாழைப்பழத்தைப் பிசைந்துகொண்டு, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்துக் கழுவவும். இறந்த சரும செல்களை அகற்ற சர்க்கரை உதவுகிறது, வாழைப்பழம் சருமத்திற்கு ஈரப்பதமூட்டி மென்மையாக்குகிறது.

கரும்புள்ளிகளைப் போக்குகிறது (Dark Spots)

கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

பாதங்களை மென்மையாக்குகிறது (Feet Softener)

குதிகால்களை மென்மையாக்கவும் வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் உங்கள் கால்களை சிறிதுநேரம் ஊறவைத்த பின், பிசைந்த வாழைப்பழத்தை பாதங்கள் முழுவதும் தேய்த்துக்கொள்ளவும், குதிகால் போன்ற தோல் வறண்டு போயிருக்கும் பகுதிகளில் முக்கியமாகத் தேய்க்கவும். பிறகு சிறிது நேரம் கழித்துக் கழுவினால், உங்கள் பாதம் மென்மையாகியிருப்பதை அப்போதே கண்கூடாகப் பார்க்கலாம்!

கண் வீக்கத்தைப் போக்குகிறது (Puffy Eyes)

ஃபேஸ் மாஸ்க் போட வாழைப்பழத்தைப் பயன்படுத்தினால், தோலைத் தூக்கி எறியவேண்டாம். களைப்படைந்து கண்கள் வீங்கியது போல் இருந்தால், அதைக் குறைக்க வாழைப்பழத் தோல்களைப் பயன்படுத்த முடியும். வாழைப்பழத் தோலை கண்களின் மீது சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துக்கொள்ளவும். பிறகு அவற்றை எடுத்துவிட்டு கழுவவும். இப்போது கண்கள் பார்க்க அவ்வளவு களைப்பாக, வீங்கியது போலத் தெரியாது!

 

Advertisements
%d bloggers like this: