Advertisements

ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்?

காலா படத்துக்கு முதல் ‘ஷோ’ போகிறேன். படம் பார்த்துவிட்டு வந்து தகவல்களைச் சொல்கிறேன் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த கழுகார், துணுக்குகளாகச் செய்திகளைக் கொட்டினார்.
முதலில் தடங்கல்!
வழக்குகள், எதிர்ப்புகள் என காலா ரிலீஸ் விவகாரம் ரஜினியைப் படு டென்ஷனாக்கியிருந்தது. தியேட்டர்கள் தரப்பிலிருந்து கடைசி நேரம் வரை ஒத்துழைப்பு இல்லாததால், ரஜினி அப்செட். அடுத்த பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் போயிருந்தாலும், தமிழக நிலவரத்தை விசாரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் காலி செய்துவிட்டது படத்தின் ரிசல்ட். எல்லாப் பக்கங்களிலும் படத்தைப் பற்றி பாஸிட்டிவ்வான ரிசல்ட் வந்ததில், காலா டீம் மகிழ்ச்சி. ‘‘ரஜினி இன்னும் பல படங்களைப் பண்ணுவார், அந்த அளவுக்கு உற்சாகம் கிடைத்துவிட்டது’’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

காலா படத்துக்குக் கர்நாடகாவிலும் பலத்த எதிர்ப்பு இருந்தது. அந்த மாநில முதல்வர் குமாரசாமியே, ‘படத்தை இந்த நேரத்தில் வெளியிடுவது சரியாக இருக்காது’ என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு சிக்கல் நீடித்தது. அதையடுத்து, குமாரசாமியுடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்திலிருந்து கமலும், கர்நாடகாவிலிருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் குடும்பமும் இந்தப் பேச்சுவார்த்தையில் இறங்கியது. அதன் பிறகுதான், குமாரசாமி காலா வெளியீட்டுக்கு உதவிகள் செய்தார். 

பதவியிழந்த பாலாஜி!
ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, தேர்தல் படிவத்தில் அவரிடம் கைரேகை பெற்றதாகச் சொல்லி சர்ச்சைக்குள்ளானவர், டாக்டர் பாலாஜி. அதற்குப் பரிசாக, தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக 2016-ல் அவர் நியமிக்கப்பட்டார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘உறுப்பு தான நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாத இவரை நியமித்தது சட்டவிரோதமானது. உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று  நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் பல ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இதில் இறுதி வாதங்கள் நடைபெற உள்ள நிலையில், ‘என்னைப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொண்டேன்’ என டாக்டர் பாலாஜி ஜூன் 6-ம் தேதி மாலை ஒரு கடிதத்தை பலருக்கும் அனுப்பினார். சில நிமிடங்களில், அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் TRANSTAN இணையதள டெண்டர் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆறுமுகசாமி ஆணையத்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலமும், குறுக்கு விசாரணையின்போது சொன்ன தகவல்களும் எடப்பாடி தரப்புக்கு ஏமாற்றம் தந்தனவாம். இவை எல்லாமே அவர் மாற்றப்படுவதற்குக் காரணங்கள் ஆகின.
  முதல்வர் அருகில் ஆனந்த்!
கோவையில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பதுபோல் ஒரு போட்டோ தற்போது வைரலாகியுள்ளது. இது கொங்கு மண்டல அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிலையைத் திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வந்தபோது, எடப்பாடியும் வந்தார். அப்போது, இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் கோவை ஏஜென்டாக இருந்த ஆத்மா சிவக்குமார் மூலம்தான் இந்த சந்திப்பு நடந்தது. ஆனால், ‘‘அவர் தவறானவர் என தெரிந்ததும் ஒதுக்கிவிட்டேன்’’ என இப்போது சொல்கிறார் ஆத்மா சிவக்குமார். எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன.
உருகுகுமா பிளாஸ்டிக்!
சட்டமன்றத்தில் கடந்த வாரம் வெளியானவற்றில் இரண்டு அறிவிப்புகள் முக்கியமானவை. ஒன்று, பிளாஸ்டிக் தடை. இது பரவலாகப் பாராட்டுப் பெற்றாலும், சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி ராஜா, “இந்தத் தொழிலில் 10 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் என்ன மாற்று ஏற்பாடு செய்யப்போகிறது, பிளாஸ்டிக்குக்குப் பதிலாக வேறு எதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் போகிறீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. சுதாரித்துக்கொண்ட முதல்வர் எழுந்து, முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை போகப்போகத் தெரியும்’’ என்று சமாளித்தார். அதையடுத்து பிளாஸ்டிக் தொழிலில் இருப்பவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோழிக்குப் பின்னணி என்ன?
முதல்வரின் மற்றொரு அறிவிப்பு இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தால், கொங்கு மண்டல அ.தி.மு.க அகமகிழ்ந்துள்ளது. காரணம், ஆடு, மாடு கொடுப்பதுபோல் கோழி கொடுப்பது கடினமான காரியம் கிடையாது. நிறைய பொருள் செலவும் இல்லை. அரசாங்கத்தை மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் எளிதில் கொண்டுசென்றுவிடும். ஒவ்வொரு வீட்டிலும் நேரடியாகப் பிரசாரம் செய்ததுபோல் ஆகிவிடும். தற்போது, கோழிப் பண்ணைத் தொழிலில் முன்னணியில் உள்ளது கொங்கு மண்டலம். இந்தத் திட்டத்துக்காக கோழிகளை இங்கிருந்துதான் வாங்கவேண்டும் என்பதால், அந்தப் பகுதி அ.தி.மு.க-வினரும், கோழிப்பண்ணை உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். சுற்றி வளைத்துப் பார்த்தால், கஜானாவின் பணம் சரியாகச் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும். ‘இது கோழித்திட்டம் அல்ல, கொங்கு திட்டம்’ என்கிறார்கள்!
கனிமொழி கவிதை சர்ச்சை!
தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்தநாள் அன்று, கனிமொழி தன் முகநூல் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதையில், ‘ஊர்கூடி வடமிழுக்கிறோம்; தேர் நகரவில்லை; கைகள் சோர்ந்து, நம்பிக்கை இற்று விழும்முன் வா’ எனக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதியைப் புகழ்ந்திருந்தார். ஆனால்,  தி.மு.க-வில் ஒரு டீம், இந்த கவிதைக்கு வேறு மாதிரி அர்த்தம் சொல்கிறது. அதாவது, ‘‘கருணாநிதியைப் போல் திறமையாக மு.க.ஸ்டாலின் செயல்படவில்லை; தற்போதைய தி.மு.க-வால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதைத்தான் மறைமுகமாக கனிமொழி குத்திக் காட்டியிருக்கிறார்’’ என்று திரி கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இது கட்சிக்குள்ளும் கருணாநிதி குடும்பத்துக்குள்ளும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

Advertisements
%d bloggers like this: