Advertisements

நம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்!

ஊர் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்கும், ஓர் ஆலயத்தை மையப்படுத்தி என்னென்ன நற்காரியங்கள் நிகழ்ந்தன என்பதற் கும் இலக்கணமாகவும் சாட்சிகளாகவும்  திகழ் கின்றன, எண்ணாயிரம் எனும் ஊரும் அங்கே அமைந்துள்ள ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயிலும்!

ஊரின் மையப் பகுதியில், சுமார் நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது கருங்கல் கட்டுமானமாக, மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயில். கோயிலுக்குள் பலி பீடமும், கொடி மரத்துக்கான கருங்கல் பீடமும் காணப்படுகின்றன.

எளிமையாகக் காட்சி தரும் முன்மண்டபத்தில், நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம், காலம் கடந்தும் சிற்பக்கலைஞர்களின் கலைத் திறனைப் பறைசாற்றியபடி காட்சி தருகின்றன பல புடைப்புச் சிற்பங்கள்.

கோயிலுக்குள் நுழைந்ததுமே, அந்தக் காலத் திலேயே நம் முன்னோர்கள் செய்துவைத்திருக்கும் மழைநீர் சேகரிப்புக்கான அமைப்புகள் நம்மை வியக்கவைக்கின்றன. மேலும், கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்துவிடாதபடி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் மழைநீர் வடிகால் வசதிகள், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அந்தக் கட்டமைப்புகளுக்குள்ளும் ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பல புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

எண்ணியது நிறைவேறும்!

வியப்பும் சிலிர்ப்புமாக ஆலயத்தை வலம் வருகிறோம். கருவறை முன்மண்டபத்தில், தெற்கு நோக்கியபடி பிரமாண்ட திருமேனியராக அருள் கிறார் ஸ்ரீவராகர். அவரின் அருகிலேயே ஸ்ரீலட்சுமி பிராட்டி. இருவரையும் நாள் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அந்த அளவுக்கு எழிலார்ந்த திருக்கோலங்கள்!

கருவறையில், `கேட்ட வரத்தைக் கேட்டவுடன் அருள்வேன்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், அருள்கோலம் காட்டுகிறார் அருள்மிகு அழகிய நரசிம்மர். ஸ்ரீமகாலட்சுமியைத் தன் மடி மீது அமர்த்திய கோலத்தில், தமது திருபெயருக்கேற்ப அழகிய வடிவில் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய நரசிம்மர்.

சுவாதி நட்சத்திரத் திருநாளில் இந்த ஆலயத் துக்கு வந்து, ஸ்ரீஅழகிய நரசிம்மரை தரிசித்து வழிபட்டால், நம் எண்ணங்கள் யாவும் ஈடேறும்; விரும்பிய வரங்கள் விரைவில் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
ஸ்ரீஅழகிய நரசிம்மர், ஸ்ரீவராக மூர்த்தி ஆகியோரை மட்டுமின்றி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளும் ஸ்ரீவரதராஜர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஎம்பார் ஸ்வாமிகள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். கருவறை விமானம் மூன்று நிலைகளுடன், கிழக்கு நோக்கிய பெரிய மாடங்களுடன் திகழ்கிறது. அந்த மாடங்களில் திருமேனிகள் எதுவும் இல்லையென் றாலும், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் சுதைச் சிற்பங் களை தரிசிக்க முடிகிறது. ஸ்ரீராமாநுஜரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.

கல்விச் சாலைகள்

‘கோயில் இல்லாத ஊரில்  குடியிருக்கவேண்டாம்’ என்பதுடன், ‘கல்விச் சாலைகள் இல்லாத ஊரிலும் குடியிருக்கவேண்டாம்’ என்பதையும் அந்தக் கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர் போலும்! அதனால்தான் ஊர்தோறும் கோயில் களை எழுப்பியதோடு நின்றுவிடாமல், கல்விச் சாலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த வகையில், எண்ணாயிரம் எனும் இந்த ஊரிலும்…  உயர்கல்வி பயிலவும், வேதங்களைப் போதிப்பதற்கும் பல கல்விச்சாலைகள்  அமைக்கப் பட்டிருந்த விவரங்களை முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுச் செய்திகளின் மூலம் அறியமுடிகிறது.

கல்விச் சாலைகளுக்கு 300 காணி நிலம் வழங்கப்பட்ட விவரம், கற்பிக்கும் பாடத்துக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கான உதவித்தொகை, உணவு, உடை, தங்குமிடம் போன்ற வசதிகள், அவர்களுக்குத் திருப்பதிகம் மற்றும் திருவாய்மொழி கற்பிக்கப்பட்ட விவரம் ஆகியவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப் பட்டிருக்கின்றன. மேற்சொல்லப்பட்ட விஷயங் களை முறையாகக் கவனிக்க அரசு அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தாராம்.

மேலும், இளநிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் முதுநிலைக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் என்னென்ன பாடங்கள் மற்றும் வேதங்களைப் படித்தார்கள் என்பது குறித்த விவரங்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

சோழமும் விஜயநகரமும்…

இந்த ஆலயத்தில் தொல்லியல் துறையினரால் 1917-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மன்னர்கள் காலத்தில் இந்த ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நம்மால் அறியமுடிகிறது. அதாவது, சோழர்களும் பிற்காலத்தில் விஜயநகர அரசர்களாலும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.

முதலாம் ராஜேந்திரன் காலத்திலிருந்து 3-ம் குலோத்துங்கன் காலம் வரை, சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் போற்றிப் பராமரித்த ஊர் இது. ஸ்ரீஅழகிய நரசிம்மரின் ஆலயம், ‘இராஜராஜ விண்ணகரம்’ என்றும், இவ்வூர், ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து இராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக் கப்பட்டிருக்கிறது. எந்தக் கல்வெட்டிலும் `எண்ணாயிரம்’ என்ற பெயர் காணப்படவில்லை. தற்போது இந்தியத் தொல்லியல் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த ஆலயம்.

தமிழகத்தில் சமணம் எழுச்சியுற்றிருந்த காலத்தில், ஏராளமான சமணர்கள்  இந்த ஊரில் வாழ்ந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக   இவ்வூருக்கு அருகிலுள்ள எண்ணாயிரம் மலை மற்றும் திருநந்தகிரி குகைகளில் ஏராளமான கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இத்தலத்தில், வைகாசியில் ஸ்ரீநரசிம்மர் ஜயந்தி விழா, ஸ்ரீராமாநுஜருக்குப் பத்து நாள்கள் பிரம்மோற்சவம் ஆடிப்பூரம், ஆவணி கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி தனுர் மாத பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

நீங்களும் ஒருமுறை எண்ணாயிரத்துக்குச் சென்று, அதன் தொன்மைச் சிறப்புகளை கண்டு மகிழ்வதுடன், ஸ்ரீஅழகிய நரசிம்மரை தரிசித்து, வேண்டும் வரங்களைப் பெற்று வாருங்களேன்.


பக்தர்கள் கவனத்துக்கு

மூலவர்: ஸ்ரீஅழகிய நரசிம்மர்

தலம்: எண்ணாயிரம்

எப்படிச் செல்வது?: விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்துக்குச் செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை 7:30 முதல் 10:30 மணி வரை; மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை.

அருகில் தரிசிக்கக்கூடிய தலங்கள்: திருநந்திபுரம், பிரம்மதேசம், எசாலம் போன்ற தலங்களில் அமைந்திருக்கும் சோழர் கால சிவாலயங்களை தரிசித்து வரலாம்.


கவிக் காளமேகம் பிறந்த ஊர்

கவி காளமேகம் பிறந்த ஊர் எண்ணாயிரம் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுப் பாடல் ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

`மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணனவன் இவன் பேர் காளமுகில் – கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்’

– என்பதே அந்தப் பாடல் வரிகள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: