Advertisements

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு

சுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே!

நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.
இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர் அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.
`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!

15-ம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளுக் கான போர் உச்சத்திலிருந்தபோது, பிற நாடுகளுக்குக் கிராம்பின் இருப்பிட ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய அளவிலான கிராம்புக் காடுகளை டச்சுக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
கி.மு 17-ம் நூற்றாண்டில், மெசபடோமியா நாகரிகப் பகுதி மக்களின் சமையலறையில் கிராம்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தனது பிறப்பிடமான இந்தோனேசியாவின் மலுக்கா தீவுகளிலிருந்து நீர் வழி (கடல் பயணம்) மற்றும் தரைவழிப் பயணமாகத் தென்னிந்தியாவைத் தாண்டி, அரேபிய பாலைவனத்தையும் கடந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா பகுதிகளுக்கு கிராம்பு சென்றடைந்துள்ளது. கிராம்பைத் தேடி சீனர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மலுக்கா தீவுகளுக்கு விரைந்தனர் என்கிறது வரலாறு. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகான சீன இலக்கியங்களிலும் கிராம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்’ முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது.
மண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப் போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின் மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்’ நடைமுறையில் இருக்கிறது.
இனிப்புச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான `பார்ஸி மசாலா’வில் பொடித்த கிராம்பு சேர்க்கப் படுகிறது. பண்டைய குஜராத்திய சமையல் கலாசாரத்தில் இனிப்பு, புளிப்புச் சுவை கலந்த ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் கிராம்பும் ஏலக்காயும் இடம் பிடித்திருக்கின்றன. திராட்சை ரசத்தில் கிராம்பும் லவங்கப்பட்டையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து அருந்தும் வழக்கம் ஐரோப்பியருக்கு உண்டு.
பொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப் பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம். 
விலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கிராம்பு வடகம்’ மயக்கம், வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு, புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால் உடலும் மனமும் உற்சாகமடையும்.
கிராம்புக்கு ஆன்டி-ஹிஸ்டமைன் செயல்பாடு இருப்பதால், அலர்ஜி சார்ந்த நோய்களுக்கும் பயனளிக்கும்.
வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம்பை நம் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துவந்தால், முதிர்ந்த வயதில் வரக்கூடிய பல நோய்கள் தடுக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. `புரோஸ்டாகிளாண்டின்ஸ்’ எனும் வேதிச்சேர்மத்தை உற்பத்திச் காரணிகளைத் தற்காலிக மாகத் தடுத்து, வலியையும் வீக்கத்தையும் தடுக்க கிராம்பில் உள்ள `யுஜெனால்’ உதவும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோட்டின், தயாமின் என நுண்ணூட்டச் சத்துகளும் கிராம்பில் இருக்கின்றன.
கிராம்பு வாங்கும்போது, நான்கு மடல்களால் மூடிய மொட்டாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முழுமையாக இல்லையென்றால், வேறு சில குச்சிகளைச் சேர்க்கவும் மலர் மொட்டுகளில் கலப்படம் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
இனி உங்கள் நண்பர்களை வாழ்த்த வேண்டுமென்றால், விரைவில் வாடக்கூடிய பூங்கொத்துகளுக்குப் பதில் வாடாத மலர்மொட்டுகளைப் பரிசளியுங்கள், கிராம்பின் வடிவில். உங்கள் வாழ்த்துகளின் விருப்பம், அவர்களது ஆரோக்கியத்தின் மூலம் நிறைவேறும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: