Advertisements

ஜெயா டி.வி-க்கு தடை! – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு!

டெல்லி போவதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா… அது இதற்காகத்தான்’’ என்று சொல்லி டேபிளில் ஒரு நீதிமன்ற உத்தரவை வைத்தார் கழுகார்.
‘‘என்ன இது?’’ என்றோம்.
‘‘ஜெயா டி.வி-யை மொத்தமாகத் தடை செய்து, சசிகலாவுக்கு செக் வைக்க நினைக்கிறது மத்திய அரசு. அந்தக் கதையைச் சொல்லும் உத்தரவுதான் இது.’’
‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

‘‘ஜெயா டி.வி., ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் மற்றும் ஜெ. மூவி ஆகிய நான்கு சேனல்களை நடத்துவது Mavis Satcom Ltd என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 80 சதவிகிதம் பங்குகளை வைத்திருப்பவர் சசிகலா. எனவே, இந்த சேனல்களுக்கு தகவல் ஒளிபரப்புத் துறையிலிருந்து ஒளிபரப்பு அனுமதி பெறுவது, உள்துறையிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெறுவது என எல்லாவற்றுக்கும் சசிகலா பெயரிலேயே விண்ணப்பம் செய்யப்படும். மே 15-ம் தேதி மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திலிருந்து இந்த நிறுவனத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ‘உங்களின் நான்கு சேனல்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி தர மறுத்துவிட்டது. எனவே, தகவல் ஒளிபரப்புத் துறை வசம் இருக்கும் சேனல்கள் பட்டியலிலிருந்து இந்த நான்கு சேனல்களையும் நீக்கிவிட்டோம். உடனடியாக இவற்றின் ஒளிபரப்பை நிறுத்துங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. அதைப் பார்த்து ஜெயா டி.வி அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆடிப் போய்விட்டார்கள்.’’
‘‘எதனால் இப்படி ஆனதாம்?’’
‘‘ஜெயா டி.வி வட்டாரத்தில் விசாரித்தேன். சேனல் ஒளிபரப்புக்குத் தேவைப்படும் டெலிபோர்ட் லைசென்ஸைப் புதுப்பிக்க 2017-ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளனர். பல மாதங்களாக பதிலே இல்லையாம். திடீரென இப்படி தடை உத்தரவு வந்திருக்கிறது. 30.06.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவர்கள் யாராவது ஒளிபரப்பு நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்தால், அது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆபத்து. அப்படி இருக்கும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி தருவதில்லை’ என்பதே அந்தக் கொள்கை முடிவு.’’
‘‘இதை வைத்துத்தான் சசிகலாவுக்கு செக் வைக்கிறார்களா?’’

‘‘ஆமாம். 2017 பிப்ரவரி 14-ம் தேதி சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்தது. அதே ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, மத்திய உளவுத் துறையான இன்டலிஜென்ஸ் பீரோவிலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் போகிறது. சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ‘இதுபற்றி உடனே முடிவெடுங்கள்’ என அந்தக் கடிதம் வலியுறுத்தியதாம். ‘அதன் அடிப்படையில் தான், ஜெயா டி.வி உள்பட நான்கு சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டது’ என்கிறார்கள்.’’
‘‘ஜெயா டி.வி தரப்பில் என்ன செய்தார்கள்?’’
‘‘பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடனடியாக இந்தத் தகவல் போனது. இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தைப் பிடித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். மே 25-ம் தேதி இது விசாரணைக்கு வந்தது.  ‘ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் பங்குதாரராக இருக்கக்கூடாது’ என உள்துறை அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்தது எங்களுக்குத் தெரியாது. இதை முன்பே சொல்லியிருந்தால், சசிகலா பெயரில் இருக்கும் பங்குகளை வேறு நபர்களுக்கு மாற்றியிருப்போம். எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல், நேரடியாக சேனல் ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிட்டது சட்ட விரோதம்’ என வாதாடிய கோபால் சுப்ரமணியம், மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை பெற்றுவிட்டார்.’’
‘‘இனி என்ன ஆகும்?’’
‘‘வரும் செப்டம்பர் 7-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே கோர்ட் தடையை நீக்கி ஜெயா டி.வி-யை முடக்கும் வேகத்தில் இருக்கிறது மத்திய அரசு. சசிகலாவோ, தன் பெயரில் Mavis Satcom Ltd நிறுவனத்தில் இருக்கும் பங்குகளைக் கைமாற்றி விடும் எண்ணத்தில் இருக்கிறார். அவர் யார் பெயருக்கு மாற்றுவார் என்பதே இப்போதைய கேள்வி’’ என்ற கழுகாரை மற்ற செய்திகள் பக்கம் திருப்பினோம்.
‘‘அ.தி.மு.க-வில் பன்னீர் மற்றும் எடப்பாடியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தந்ததன் மூலம் பிரச்னை ஓய்ந்துவிட்டதே?’’
‘‘ஆமாம். எடப்பாடியும் பன்னீரும் பயந்தது இந்த விஷயத்துக்குத்தான். 2017 செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். அதை தினகரன் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் கமிஷன் இதனை ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார்கள். இதுபற்றி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்கள். ஆனால், இந்த மாற்றத்தைத் தேர்தல் கமிஷன் அங்கீகரித்து விட்டது. இனி அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி கிடையாது. ஒருங்கிணைப்பாளர்கள்தான் இருப்பார்கள் என்பதை தேர்தல் கமிஷன் உறுதிப்படுத்திவிட்டது.’’
‘‘இனி தினகரன் என்ன செய்வார்?’’
‘‘இது தேர்தல் கமிஷனின் முடிவுதான். எங்கள் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது என்று தினகரன் தரப்பினர் இன்னமும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.’’
‘‘கட்சிப் பொறுப்பாளர்களாக ஸ்டாலின் சிலரைப் புதிதாக நியமித்துள்ளார், சிலரை நீக்கியுள்ளாரே?’’
‘‘ஆம். 2018 பிப்ரவரி தொடங்கி மார்ச் மாதம் வரை, ‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ என்ற பெயரில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அதுபற்றி விரிவாக எழுதியிருந்த நமது நிருபர் ‘ஆறு மாவட்டச் செயலாளர்களின் தலை உருளப்போகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கான ஆரம்பப்புள்ளிதான் இது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு, கொங்கு மண்டலத்தில் கிடைத்த மோசமான தோல்வி மிக முக்கியக் காரணம். அது, அப்போதே தி.மு.க-வுக்குள் பரவலான விமர்சனத்துக்கு உள்ளானது. ‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ நிகழ்ச்சியிலும் கோவை பிரச்னைகளில் தனிப்பட்ட கவனம் காட்டினார் ஸ்டாலின். அதற்குமுன்பு, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒரு ரகசியக் குழுவையும் அமைத்திருந்தார் ஸ்டாலின். அந்த டீம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருந்தது. அதையும், கள ஆய்வில் ஸ்டாலின் நேரடியாகக் கேட்டதையும் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.’’

‘‘நிறைய பேர் பதவியை இழந்துள்ளனரே?’’
‘‘கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். சரியாக செயல்படாதது, கட்சி அணியினர் மற்றும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லாதது உள்ளிட்டவை தமிழ்மணி மீதான புகார்கள். அதுபோல, பொங்கலூர் பழனிசாமியின் தலை உருளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரைத் தூக்குவதற்குப் பதில், அவர் ஆதரவாளர்கள் கூடாரத்தையே காலி செய்துள்ளார் ஸ்டாலின். திருப்பூரில் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இங்கு சாமிநாதனின் ஆதரவாளர்கள் பலர் பதவிகளை இழந்துள்ளனர். கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று எதிர்பார்த்த டி.கே.டி மு.நாகராஜனுக்கு திருப்பூர் மாநகரப் பொறுப்பாளர் பதவி வழங்கியிருப்பது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் செல்வராஜுக்கு வலதுகரம். இவர்மீது ஏராளமான புகார்கள் அறிவாலயத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்டாலின் நடத்திய கள ஆய்விலும், நாகராஜன்மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. இப்படி செல்வராஜ் ஆதரவாளர்கள் பலர் பதவி பெற்றிருப்பது, திருப்பூரிலிருந்து கள ஆய்வுக்கு வந்த நபர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம். நாங்கள் கொடுத்த அறிக்கைக்கு நேர்மாறாக அறிவிப்பு வந்திருக்கிறது என்று பலர் போனில் அழைத்துப் புலம்பியிருப்பதாகத் தகவல். என்னதான் ஸ்டாலினுக்கு நெருக்கமான இடத்தில் இருந்தாலும், மாவட்டத்துக்குள் சாமிநாதன் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஸ்டாலினின் அடுத்த அதிரடி மதுரையில் இருக்கும் என்கிறார்கள்.’’
‘‘அங்கு அழகிரி புயல் மீண்டும் வீச ஆரம்பித்துள்ளதே?’’
‘‘ஆமா. ஸ்டாலினைக் குறிவைத்து அழகிரி நக்கலாகப் பேசியது தி.மு.க-வுக்குள் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னனின் மகள் ப்ரீத்தி-சுவாதித்தன் திருமணம், ஜூன் 10-ம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடந்தது. இந்தத் திருமணத்தில் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதியுடன் கலந்துகொண்டு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்திய அழகிரியின் பேச்சுதான் தி.மு.க-வுக்குள் மீண்டும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. ‘தி.மு.க-வில் இப்போது உள்ளவர்கள் அனைவரும் பதவிக்காக இருப்பவர்கள்தான். அடுத்த ஆண்டு தேர்தலின் போது, அங்கே எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்று சொல்ல முடியாது. இதை அடுத்த ஆண்டு தேர்தலின்போது பேசலாம் என்றிருந்தேன். நண்பர்கள் வற்புறுத்திய தால் இப்போதே பேச வேண்டியதாகிவிட்டது’ என்றார் அழகிரி.’’
‘‘குட்கா விவகாரத்தில் அமலாக்கத் துறையும் ஒரு வழக்கு போட்டிருக்கிறதே?’’
‘‘சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது. சி.பி.ஐ டெல்லி யூனிட் எஸ்.பி கிருஷ்ணா ராவ் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், சில வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், அமலாக்கத் துறையும் நுழைந்துள்ளது. விரைவில், இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள சிலரின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை இருக்கலாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements

One response

  1. ம் நல்லது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: