Advertisements

வந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்!

கோடை காலம் வந்தால் ‘அம்மை’ பாதிப்பும் சேர்ந்தே வரும்.  இது மிக எளிதாக, வேகமாக மற்றவர்களுக்குப் பரவும் என்பதால், பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அம்மையில் பெரியம்மை, தட்டம்மை, சின்னம்மை, அம்மைக்கட்டு எனப் பல வகைகள் உள்ளன.  இதில் பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ்  உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. தட்டமை, அம்மைக்கட்டு இரண்டும் குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும். இந்த நோய்கள் குளிர்காலத்தில்தான் உண்டாகும். கோடை காலத்தில் வதைக்கும் சின்னம்மை நோய் (Chicken Pox) ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை  பரவும். சின்னம்மை எதனால் ஏற்படுகிறது, வராமல் தடுக்க முடியுமா, சின்னம்மை வந்துவிட்டால் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்..?

அரசு தொற்றுநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
“குப்பைகளில் இருந்து உருவாகும்  ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella-Zoster)  என்னும் வைரஸ் மூலம் ஏற்படும் நோய்தான் சின்னம்மை. எல்லாக் காலத்திலும் குப்பைகளில் குடியிருக்கும்  இந்த வைரஸ், காற்றில் கலந்து, சுவாசம் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ், முதலில் தொண்டையில்தான் பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 10-15 நாள்கள் கழித்தே அதன் பாதிப்பு  தெரியவரும். தொற்றுநோய்களில் மிகவும் வீரியமான இது,  ஒருவருக்கு வந்துவிட்டால் அவரின் மூச்சுக்காற்று மூலம் மற்றவர்களுக்குப் பரவும். அதனால்தான்  சின்னம்மை பாதித்தவர்களைத் தனிமைப் படுத்துகிறோம். இதற்குத் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருமுறை சின்னம்மை வந்தால், மீண்டும் அவருக்கு வர வாய்ப்பேயில்லை. அந்தளவுக்கு  உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிடும்.
கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை, வெப்பம் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். அதனால் அம்மைநோய் மிக எளிதாகப் பாதிக்கும். இதைத் தவிர்க்க மோர், இளநீர், நீராகாரம், பழச்சாறு அதிகமாக உட்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோய் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளின் காரணமாகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல, நம் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அம்மை பாதித்த முதல் மூன்று நாள்களுக்கு உடல்வலி, தலைவலி, தொண்டைவலி, காய்ச்சல் இருக்கும். மூன்று நாள்களுக்குப் பிறகு, உடலில் நீர்க் கொப்பளங்கள் உண்டாகும். அப்போது அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும். மருத்துவர்களைச் சந்தித்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் `அசிக்ளோவர்’ (Acyclovir)என்ற ஆன்டி வைரஸ் மருந்து கொடுப்பார்கள். சாதாரணமாக 21 நாள்களில் சரியாகும் அம்மை நோய்,  `அசிக்ளோவர்’  மருந்து எடுத்துக்கொண்டால், பத்து நாள்களில் சரியாகும். இது நோயின் வீரியத்தைக் குறைத்து ஆபத்தான விளைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
அம்மை பாதித்தவர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவேண்டியது அவசியம்.  உடலில் நீர்க் கொப்பளங்கள் காய்ந்த பிறகே குளிக்கவேண்டும். அதற்குமுன் குளித்தால் நீரில் உள்ள கிருமிகள் மூலம் சீழ்ப் பிடிக்க வாய்ப்புள்ளது.
சர்க்கரைநோய், ஹெச்.ஐ.வி நோய் பாதித்தவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அம்மை வந்தால் சிக்கன்பாக்ஸ் நிமோனியா (Chickenpox Pneumonia), சிக்கன்பாக்ஸ் என்ஸெபலிடிஸ் (Chickenpox Encephalitis) ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால், மற்றவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி  `அசிக்ளோவர்’  மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம். அதையும் மீறி அம்மை வந்தாலும் மிகவும் கடுமையான பாதிப்புகளின்றி விரைவில் குணமாகிவிடும்.  குழந்தைகளுக்கே இதன் பாதிப்பு அதிகம் என்பதால் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பிணிகளுக்கு வந்தால் கரு கலைந்து போகவும்,  பிறக்கும் குழந்தை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே மிகுந்த கவனம் தேவை”.

Advertisements
%d bloggers like this: