18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு செல்ல உள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஏன் செல்லும்

அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். மேலும், சபாநாயகரின் உத்தரவில் நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது. சபாநாகரின் முடிவு என்பது உரிய காரணங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது சபாநாயகரின் உத்தரவில் தலையிடக்கூடாது என்பதால், தகுதி நீக்கம் செல்லும் எனவும் கூறினார்.

எதிரானது

ஆனால், நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கினார்.

3வது நீதிபதி விசாரணை

இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு விசாரணை 3 வது நீதிபதியிடம் செல்ல உள்ளது. விரைவில் 3வது நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். 3வது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்.

வழக்கறிஞர்கள் கருத்து

தினகரன் ஆதரவு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறுகையில், தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி கூறினார். 2வது நீதிபதி, மிகத்தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளார். சபாநாயகர் செய்தது தவறானது என தீர்ப்பு கொடுத்துள்ளார் என்றார்.
அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி 18 பேரின் ரிட் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் நீதிபதி சுந்தர் கூறுகையில், தலைமை நீதிபதி உத்தரவில் மாறுபடுகிறேன். சபாநாயர் தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டு இல்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடலாம் எனக்கூறி 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரும் நானும் வேறுபட்ட கருத்தை சொல்லியிருக்கிறோம். இதனால் 3வது நீதிபதி மீண்டும் விசாரணை நடத்துவார். அவரை, 2வது இடத்தில் உள்ள நீதிபதி தான் முடிவு செய்வார்.நான் இல்லை. அதில் தீர்வு கிடைக்கும் எனக்கூறினார்.

One response

  1. இரண்டு நீதிபதிகளும் ஒரே சட்டம் தானே படித்தார்கள்??

%d bloggers like this: