Advertisements

நிலப் பிரச்னைகள் நீங்கும்!

மரக்காணம் பூமீஸ்வரர் திருக்கோயில்

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள்.

எனவேதான், நம் தேசத்தை

ஆண்ட மன்னர்கள் பலரும் நாட்டு மக்கள் நன்மை அடையும்பொருட்டு, எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அவ்வகை யில் சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

சோழா் காலத்து அரசியல் மற்றும் சமுதாய நிகழ்வு களை இன்றும் நமக்கு எடுத்துக்காட்டும் பொக்கிஷமாக விளங்கும் ஈசனின் இந்த ஆலயம்,  கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் நகாில் அமைந்துள்ளது.

தமிழா்களின் தொன்மையான நாகாிகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள்,  மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு’. இதில், `சோபட்மா’ என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறை முக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. `எயில்’ என்பதும் `சோ’ என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்’ என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.

 

ராஜராஜன் கட்டிய திருக்கோயில்!

மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக் கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடி கிறது. மரக்காணம் தலத்திலிருந்த ஈசனின் திருக் கோயில், அக்காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை  சீற்றத்தால் மண்மூடிப் போனதாகவும், பின்னா் மீண்டும் ராஜராஜ சோழனின் காலத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிாியா் களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.

ஆழிப்பேரலையின் சீற்றம் காரணமாக மரக்காணம் கடற்கரையில் இருந்த சங்ககாலத்துத் துறைமுகம் அழிந்துவிட்டதற்குச் சான்றாக, உயா்ந்த மண்மேடுகள் பல இன்றும் கடற்கரைக்கு அருகே காணப்படுகின்றன.

இவ்வூா் `மரக்கானம்’ எனவும் வழங்கப்பட்டுள் ளது. `கானம்’ என்பது கடலோரப்பகுதியைக் குறிக்கும். கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடா்ந்த சோலைவனம் போன்று இந்த ஊா் உள்ளதால் `மரக்கானம்’ என அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

கடற்கரை மணல்பிரதேசமான இப்பகுதி, `மணற்கானம்’ என்று வழங்கப்பட்டு, பின்னா் மரக்காணமாக மருவி இருக்கலாம் என்றும் `மரக்கலம்’ என்பதே மரக்காணமாக மருவி இருக் கலாம் என்றும் விளக்கம் தருகிறார்கள் சில ஆய்வாளர்கள்.

மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ் வரத்தாழ்வாா், திரு பூமீசுவரமுடையாா், ஸ்ரீபூமீஸ் வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா் என்று பல திருநாமங்களுடன் வணங்கப் பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.

விஜயநகர மன்னா்களின் ஆட்சிக்காலத்தில், இத்தலத்து ஈசன் `பூமீஸ்வரமுடைய தம்பிரான்’ என்றும் `திருபூமியப்ப தம்பிரானாா்’ என்றும் வணங்கப்பட்டுள்ளாா்.

இங்கு ஈஸ்வரன் நிகழ்த்திய அருளாடலை  அற்புதமாக விவரிக்கிறது தலபுராணம்.

`மரக்காலைக் காணோம்!’

வேதகாலத்தில், தன் சிந்தையில் எப்போதும் சிவனை நிறுத்திப் பூசித்த சிவபக்தா் ஒருவா் இத்தலத்தில் வாழ்ந்து வந்தாா். அவரிடம் தனது திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்ட ஈசன், முனிவராக உருவெடுத்து அந்த பக்தாின் இல்லத்துக்குச் சென்றாா்.

முனிவரை வரவேற்று உபசாித்த சிவனடியாா் அவருக்காக அறுசுவை உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைத்தாா்.

உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாாிடம் கூறினாா் முனிவா். அருகில் சிவத்தலம் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அடியாா், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தன்னி டமிருந்த `மரக்கால் படியை’ குப்புறக் கவிழ்த்து, அதையே சிவலிங்கமாகக் கருதி, நீறு பூசி மலா்களால் அலங்காித்து முனிவரை பூஜைக்கு அழைத் தாா்.

முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீா்வதித்து விடைபெற்றார்.

அவர் சென்றதும், சிவனடியாா் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அசைக்கக்கூட முடியவில்லை அடியவரால். மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயா்த்தெடுப்பதற்காக உபகரணம் எடுக்கச் சென்ற அடியாா் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்கால் படியைக் காணவில்லை. அதிா்ச்சியடைந்த சிவபக்தா் `மரக் காலைக் காணோம்’ என்று சத்தமிட்டபடி, அதைத் தேடிச் சென்றார். தேடலின் விளைவாக, கடற்கரை மணலில் மரக்கால்படி சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்துப் போனவர், அந்த லிங்கத் திருமேனிக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தார் என்கிறது திருக்கதை.

மணற்பகுதியில் மறைந்திருந்து, பின்னர் பூமியிலிருந்து வெளிப் பட்ட மாமணிச் சோதியனுக்கு `ஸ்ரீபூமீஸ்வரா்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. சிவனடியாா் மூலம் வெளிப்பட்ட ஈசனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்த சோழ மன்னர்கள், பிற்காலத்தில் இந்த இடத்தில் திருக்கோயிலை நிா்மாணித்தனா்.

`மரக்காலைக் காணோம்’ என்று சத்தமிட்ட சிவனடியாாின் வாக்கே, இத்தலத்திற்கு `மரக்காணம்’ என்ற திருநாமம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்ற கா்ணபரம்பரைக் கதையும் இத்தலத்தில் கூறப்படுகிறது.

செல்வங்கள் சேரும் நிலப் பிரச்னைகள் தீரும் !

பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த ஈசனைத் தொழுது வழிபட்டால், நிலம் தொடா்பான பிரச்னை களில் விரைவில் தீா்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல் பலித்ததும், ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.

இத்திருக்கோயில் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீகிாிஜாம்பிகை. கருணை ததும்பும் திருமுக மண்ட லத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் சாந்த சொரூபி யாகத் திகழ்கிறாள் அம்பிகை.
பக்தா்களுடைய துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தி, அன்னையின் கடைக்கண் பாா்வையில் உள்ளதை நிதா்சன மாகத் தாிசிக்க முடிகிறது.

திருக்கோயிலின் தற்போதைய நிலை…

பல்லவ மன்னா்களும் பொன்னியின் செல்வரான மாமன்னா் ராஜராஜ சோழனும் அவருடைய வாாிசுகளும், பாண்டிய மன்னா்களும் வந்து வழிபாடு செய்து, பல கொடைகளை அளித்த இந்தத் திருக்கோயில் தற்போது பக்தா் களின் வருகை அதிகமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.

கோஷ்டத்திலும் பிராகாரச் சுற்றிலும் அருளும் இறை மூா்த்தங்கள் சோழா்கால சிற்பி களின் கலைத்திறனுக்குச் சான்றாக திகழ்கின்றன. கோஷ்டத்தில், விநாயகா் இருக்கவேண்டிய இடத்தில், பிட்சாடன மூர்த்தி அருள்கிறார். தாருகாவனத்து முனிவா்களின் செருக்கை அடக்கிய ஈசனின் மகத்துவத்தை நமக்கு நினைவூட் டுகிறது இவரின் தரிசனம்.

திருக்கோயில் கல்வெட்டுகள் பல சிதைவுற்ற நிலையில் உள்ளன. சிதைவடையாத கல்வெட்டு களும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு,  படிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளன. இத்திருக்கோயிலின் கல்வெட்டுகளைப் பாதுகாக்க, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் தொல்லியல் துறையும் உாிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட திருக் கோயிலின் புனித தீா்த்தமான `பிரம்ம தீா்த்தம்’   மாசடைந்து, பராமரக்கப்படாமல் உள்ளது.

சங்க காலத்தில் தமிழகம் கடல்வழி வணிகத்தில் பல உலக நாடுகளுடன் தொடா்பு கொண்டிருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகளும் தொல் பொருள் சான்றுகளும் ஏராளமாக உள்ள தலம் மரக்காணம். இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஸ்ரீபூமீஸ்வரப் பெருமானின் திருக்கோயிலைப் பாதுகாத்து, அதை மன்னா் காலத்தின் மகோன்னத நிலைக்குக் கொண்டுவரவேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

நீங்களும் ஒருமுறை பூமீஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். `கண்டேன் அவா் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’ என்று ஐயாறப்பாின் தாிசனம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த நாவுக்கரசரின் பரவச நிலை, பூமீஸ்வரரை தரிசிக்கும் உங்களுக்கும் வாய்க்கும். அந்தப் பரவசத்தோடு, அவரின் தாள் வணங்கி வரம்பெற்று வாருங்கள்.


இந்தத் தலம் குறித்து சங்க நூல்களும் கல்வெட்டுகளும் தரும் அதிசய தகவல் களைத் தெரிந்துகொள்ள இங்குள்ள QR code – ஐ பயன்படுத்தவும்.


பக்தர்கள் கவனத்துக்கு…

மூலவர்: அருள்மிகு பூமீஸ்வரர்

அம்பிகை: அருள்மிகு கிரிஜாம்பிகை

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சோி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ளது புராதனமான மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில். சென்னை திருவான்மியூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8:30 மணி வரை.


தத்புருஷ தரிசனம்!

கருணைக் கடலான பூமீஸ்வரா் இந்தத் திருத்தலத்தில் கிழக்கு திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றாா்.

ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ’ வடிவிலான இந்தத் திருக்கோலத்தைப் பணிந்து வணங்குபவா்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவாா்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: