பதினெண் கீழ்க்கணக்கு!

ழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து, செயலிழந்த தம் பதவி மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழிபிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை பதினெட்டு. பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு, சேராத இடம் சேர்ந்தால், பிறகென்ன சேதாரம்தானே’ என்று அந்தக் கவிதையின் சில வரிகளை வாசித்து முடித்தவர், ‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்த இன்று காலையில் வெளியாகியுள்ள கவிதை இது’’ என்றார்.

‘‘தீர்ப்பில் யாரும் பாஸும் இல்லை; ஃபெயிலும் இல்லை. தீர்ப்பு வெளியானபோது தினகரன் வீட்டில் என்ன நடந்ததாம்?’’

‘‘தினகரனின் மனைவி அனுராதா வழக்கமாகவே வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கோ பூஜை நடத்துவார். இதற்காக, வெளியிலிருந்து பசுவை வீட்டுக்கு அழைத்துவந்து அதற்கு பயபக்தியுடன் பூஜை நடக்கும். தினகரன் வீட்டில் ரெய்டு நடந்த ஒரு வியாழக்கிழமையிலும் கோ பூஜை நடந்தது உமக்கு நினைவிருக்கும். அப்போது, அது பரபரப்பாக மீடியாவில் வெளியானதையடுத்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் தினகரன் வீட்டில் கோ பூஜையைப் பார்க்க அக்கம் பக்கத்தினர் கூடுவதும் வழக்கமானது. அதனால், இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் கோ பூஜையை நடத்தி வருகிறார் தினகரனின் மனைவி அனுராதா. இது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலருக்கே தெரியாத விஷயமாக இருந்தது. ஆனால், அதை அனைவருக்கும் தெரியப்படுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆம். தீர்ப்பு வெளியாகப் போகிறது என்பது தெரிந்ததும், தினகரன் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் போன் செய்து, ‘மதியம் தீர்ப்பு வருவதால், அந்த நேரத்துக்குப் போனால் போதும் என்று ஊரிலேயே இருந்துவிடாதீர்கள்.  காலையிலேயே வீட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டு இருந்தார். இதையடுத்து, அன்று காலை 18  எம்.எல்.ஏ-க்களும் அடித்துப்பிடித்து சென்னை வந்தனர். தினகரன் வீட்டுக்குக் காலையில் முதல் ஆளாக வந்தவர் வெற்றிவேல். கடைசியாக வந்தவர், குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி. பிரபல ஹோட்டலிலிருந்து சுடச்சுட காலை டிபன், காபி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய சாப்பாடும் அதே ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினகரன் வீட்டில் வைத்துப் பரிமாறப்பட்டது. தினகரனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.’’

‘‘ தினகரன் என்ன சொன்னாராம்?’’

‘‘தினகரன் அன்று தீர்ப்பைப் பற்றி அவர்களுடன் எதுவும் பேசவில்லை. அவர் கூலாக, வேறு டாபிக் பற்றிப் பேசினாராம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில் ஒவ்வொரு தொகுதியையும் கவனமாகப் பார்க்க வேண்டும், எந்தத் தொகுதிக்கு யாரைப் பொறுப்பாளராகப் போடுவது என ஆலோசனை நடத்த ஆரம்பித்தாராம். அந்த நேரத்தில் டி.வி-யில் தீர்ப்பு விவரங்களும் வெளியாகின. அதைப்பற்றி தினகரன் பெரிதாக அலட்டிக்கொள்வில்லை. இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததாம்.’’
 
‘‘தீர்ப்பு வந்தபோது சட்டமன்றத்தில் என்ன நடந்தது?’’

‘‘சட்டமன்றத்தில் அப்போது மக்கள் நல்வாழ்வு துறையின் மானியக் கோரிக்கைமீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று காலை கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து ஏதோ கருத்து சொல்ல முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘இன்று நீங்கள் நிறையப் பேசுவீர்கள். நானும் அதை அனுமதிக்கும் மூடில் இருக்கிறேன்’ என்றார். அதாவது, நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், எதிர்க்கட்சித் தரப்பில் எதிர்ப்புகள் கடுமையாக இருக்கும் என்பதைச் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார் சபாநாயகர். முதல்வர் வழக்கம்போல சகஜமாகவே இருந்தார். ஆனால், ஸ்டாலினிடம் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. அவைக்குள் இருந்தால் உடனடியாகத் தீர்ப்பை அறிந்துகொள்ள முடியாது என்பதால், அரை மணி நேரத்திற்கு முன்பாகவே, ஸ்டாலின் தனது அறைக்கு வந்துவிட்டார்.’’

‘‘முதல்வர்?’’

‘‘அவர் தீர்ப்பு வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால், அவையிலிருந்து வெளியேறி தனது அறைக்குச் சென்றார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம் சிறிது நேரம் அங்கு ஆலோசனை நடத்தினார். அந்த நேரத்தில் தீர்ப்பு வந்தது. முதலில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த ‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லும்’ என்ற தீர்ப்பைக் கேட்ட அ.தி.மு.க-வினர் அவையில் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், சிறிது நேரத்தில் இன்னொரு நீதிபதி சுந்தர் அதற்கு மாறான வேறு தீர்ப்பை வழங்கியதால், மேஜை சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில், முதலில் உற்சாகம் இழந்த தி.மு.க-வினர் இரண்டாவது தீர்ப்பைக் கேட்டு கொஞ்சம் நம்பிக்கை பெற்றனர். தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தயாராக இருந்தது தி.மு.க. இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் ஸ்டாலின் அப்செட்.’’

‘‘ஓஹோ!’’

‘‘தீர்ப்புக்கு முதல் நாள் இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இரவு ஆலோசனை நடந்துள்ளது. அந்த ஆலோசனையில் பொன்முடி, வேலு, ஆ.ராசா, நேரு உள்ளிட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் இளங்கோ மற்றும் சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். தீர்ப்பு வெளியான ஜூன் 14-ம் தேதிக்குப் பிறகு சட்டமன்றத்துக்கு 10 நாள்கள் விடுமுறை. மீண்டும் 25-ம் தேதி கூடுவதற்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான நோட்டீஸை சபாநாயகரிடம் கொடுப்பது பற்றி ஆலோசித் துள்ளார்கள். தினகரன் வீட்டிலும் அன்று இரவு ஆலோசனை நடந்துள்ளது. தீர்ப்பு சாதகமாக வந்தால், தினகரன் தலைமையில் 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்திற்கு வரும் முடிவில் இருந்துள்ளார்கள்.’’

‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?’’

‘‘மதியம் 1 மணிக்குத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே, தினகரன் அணி வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பி.எஸ்.ராமன், அரசு வழக்கறிஞர்கள், தி.மு.க வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் வந்து நீதிமன்ற அறையை முற்றுகையிட்டிருந்தனர். அரசு வழக்கறிஞர்கள் முகத்தில் பூரிப்பு தெரிந்தது. தினகரன் அணி வழக்கறிஞர்கள் கொஞ்சம் டல்லாக இருந்தனர். சரியாக மதியம் 1.10 மணிக்கு நீதிபதிகள் இருக்கைக்கு வந்தனர். வந்ததும், முதல் வழக்காக தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை எடுத்து தீர்ப்பளித்தனர். அதைத் தொடர்ந்து ஐந்து வழக்குகளில் வேகவேகமாகத் தீர்ப்பு வெளியானது. ஆறாவது வழக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வழக்கு வந்தது. அது 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அதை முடித்துவிட்டு சரியாக 1.30 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தனர். தலைமை நீதிபதி, ‘சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது’ என்றார். நீதிபதி சுந்தர், ‘நான் இதிலிருந்து மாறுபடுகிறேன். தகுதிநீக்கம் செல்லாது’ என்றார்.’’

‘‘ஏன் இந்த மாறுபட்ட தீர்ப்பு?’’

‘‘பொதுவாக இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கும்போது, இருவரும் இணைந்து ஒரே தீர்ப்பையே எழுதுவார்கள். அரிதாகவே, தனித்தனி தீர்ப்புகள் எழுதப்படும். இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் தனியாகவே தீர்ப்பு எழுதினார். அப்போதே முரண்பட்ட தீர்ப்புதான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் போகிறது. ஜூலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிகிறது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில்தான் சட்டசபை கூடும். அதுவரை எடப்பாடி அரசுக்குப் பிரச்னை இல்லை என்பதுதான் இந்தத் தீர்ப்பு சொல்லும் செய்தி.’’

‘‘ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 14-ம் தேதி  அப்பல்லோ மருத்துவர்களான திவாகரனின் மருமகன் விக்ரம், மகள் ராஜமாதங்கி ஆகியோர் ஆஜரானார்களே… அதில் என்ன விசேஷம்?’’

‘‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக திவாகரனை சந்தித்துப் பேசவில்லை. மேலும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை என மருத்துவர் விக்ரம் வாக்குமூலம் அளித்துள்ளார். ‘செயற்கை சுவாசம் அளிப்பது தொடர்பாக தெரிந்துகொள்வதற்காக 2016 செப்டம்பர் 28-ம் தேதி என்னை ஜெயலலிதா அழைத்ததால், அங்கு சென்றேன். அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டரைப் பொருத்துவது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவக்குமார் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம் சம்மதம் பெறப்பட்டது. இதயக்கோளாறு, நுரையீரல் தொற்று, தைராய்டு, நீரிழிவு நோய் என சிரமப்பட்ட ஜெயலலிதா போன்று யாராக இருந்தாலும், மருத்துவ ரீதியாக தேற்றிக் கொண்டு வருவது கடினம். அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்’ என ராஜமாதங்கி விளக்கம் அளித்துள்ளார்’’ என்ற கழுகார் பறந்தார்.

%d bloggers like this: