உங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்?

ம்மில் பலரும் பல நோக்கங்களுக்காக முதலீட்டை மேற்கொள்கிறோம். சிலருக்கு சொந்த வீடு கட்டத் தேவையான பணத்தைச் சேர்ப்பது முக்கிய இலக்காக இருக்கும். இன்னும் சிலருக்கு 50 அல்லது 100 பவுன் நகை சேர்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். இன்னும் சிலருக்கு,  குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்கும். இன்னும் சிலருக்கு, ஓய்வுக்காலம் தொடர்பான பணத்தைப் பெறுவதுதான் முக்கிய லட்சியமாக இருக்கும்.

இந்த இலக்குகளை நிறைவேற்ற நாம் பணத்தை முதலீடு செய்கிறோம். ஆனால், அந்தப் பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்கிறோமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

சுபாவத்துக்கேற்ற முதலீடு

ஒவ்வொருவரும் தனது சுபாவத்திற்கு ஏற்றவாறு முதலீட்டை மேற்கொள்கிறார்கள்.  சிலர், பங்குச் சந்தை என்றால் அய்யோ என்று அலறுவார்கள்; இன்னும் சிலர், மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே ரிஸ்க் அதிகம் என்பார்கள். இன்னும் சிலர், வீடு வாங்கி வாடகைக்கு விடுவது தான் உலகத்தின் மிகச் சிறந்த முதலீடு என்பார்கள். இன்றைய இளைஞர்கள் தங்கம் என்றாலே வேண்டாம் என்கிறார்கள். ஆனால், இன்றைக்கும் நமது வீடுகளில் உள்ள பெண்களின் ஃபேவரிட் முதலீடு, தங்கம்தான். சிலர், பி.பி.எஃப்-ல் மட்டும்தான் பணத்தைப் போடுவார்கள். சிலர் வங்கி எஃப்.டி-யை மட்டுமே நம்புவார்கள்.

இந்த முதலீட்டு வழிமுறைகள் எல்லாம் அவரவருக்கு சரி என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை  சிறப்பானதுதானா என்று ஆராய்ந்தால், தவறான முதலீட்டு முறையின்மூலம் நமது இலக்கை எட்டிப்பிடிக்க நாம் முயற்சி செய்துகொண்டிருப்பது நமக்குத் தெரியவரும். எனவே, நம் இலக்கினை நிறைவேற்றும் பெஸ்ட்டான முதலீட்டு வழிமுறைகள் எவை என்று பார்ப்போம்.

பெஸ்ட்டான முதலீடு என்றால்…

எந்த இலக்கிற்காக நாம் பணத்தை சேர்க்கி றோமோ, அந்தப் பணத்தை எந்த வகையிலும் நாம் இழக்காத வகையில் இருக்க வேண்டும். இரண்டாவதாக, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்குமா என்கிற அடிப்படையிலும் பார்க்க வேண்டும். தவிர, குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும்  கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், மிதமான ரிஸ்க் எடுக்க விரும்பும் மாடரேட் முதலீட்டாளர்கள்  மற்றும் அதிக ரிஸ்க் எடுக்க நினைக்கும் அக்ரெஸிவ் முதலீட்டாளர்கள் என முதலீட்டாளர்களை மூன்று வகையாகப் பிரித்து, அதற்கேற்றவாறு முதலீடுகளைப் பரிந்துரை செய்திருக்கிறோம். இனி உங்களுக்கான இலக்கு களையும், அதற்கான முதலீட்டுத் திட்டங்களையும் பார்ப்போம்.

எமர்ஜென்சி ஃபண்ட்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மிடம் கட்டாயம் இருக்கவேண்டிய பணம்தான் இந்த எமர்ஜென்சி ஃபண்ட். ஆனால், இன்றைக்கு நம்மில் பலரிடமும் இல்லாத ஒன்றும் இந்த எமர்ஜென்சி ஃபண்டுதான். இன்றைக்கு நமக்கு ஏற்படும் திடீர் செலவுகளில் நாம் அதிகம்  பயப்படுவது மருத்துவச் செலவுகள்தான். சிறு நகரங்களில் வசிக்கும் பலர் இந்தத் தேவைக்காகவே ரொக்கமாகப் பணத்தை வைத்திருப்பார்கள். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி  இருப்பவர்கள் இந்தத் தேவைக்கான பணத்துக்கு எங்கே போவது என்று பயப்படத் தேவையில்லை.

தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

இந்தச் செலவுக்கான பணத்தை பலரும் வங்கி சேமிப்புக் கணக்குகளில்தான் வைத்திருப்பார்கள். இப்படிச் செய்வதற்குப் பதிலாக, வங்கியில்       ஆர்.டி கணக்கு தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைச் சேர்த்து, அதை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தி ருக்கலாம். மொத்தமாகப் பணம் இருந்தால், அதை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைத்திருக்கலாம்.  வங்கி ஆர்.டி, எஃப்.டி-யைவிட சற்றுக் கூடுதல் வருமானத்தைப் பெற விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். குறைந்தது ஆறு மாதத் தேவைக்கான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்வது அவசியம்.  

பள்ளிக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ் பிரீமியம், பண்டிகைக் காலச் செலவுகள்

ஒவ்வொரு வருடத்திலும் பல்வேறு கால இடை வெளியில் இந்தத் தேவைகளுக்கான பணம் தேவைப்படும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணத்தைச் சேர்க்க பெஸ்ட் வழிகள் இரண்டுதான்: ஒன்று, வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் தொடங்கி, பணத்தைச் சேர்த்து, தேவை வரும்போது அந்தப் பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொள்வது. மற்றொன்று, லிக்விட் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவிட்டு, தேவைப்படும்போதெல்லாம் எடுத்துக்கொள்வது. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். 

நுகர்வோர் பொருள்களை வாங்குவது

நம்மில் பலர், இன்னும் ஒரு வருடத்தில் வாஷிங் மெஷின் வாங்கவேண்டும் அல்லது, இன்னும் இரண்டு வருடத்தில் பெரிய எல்.இ.டி டிவி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.  இதுபோல், செல்போன் வாங்குவது, ஏ.சி. ஃப்ரிஜ் போன்றவற்றை வாங்குவது அல்லது வீட்டில் உள்ள ஃபர்னிச்சரை மாற்றுவது எனப் பலரும் பலவிதமான இலக்குகளை வைத்திருப்பார்கள். 

இன்றைய தேதியில், இதுமாதிரியான பொருள்களை நாம் வாங்க நினைத்தால், உடனே கடன் வாங்கி அதை இ.எம்.ஐ முறையில் திரும்பக் கட்டத் தயாராகிவிடுகிறோம். இப்படிச் செய்வதன் மூலம் நாம் வாங்க நினைக்கும் பொருள் நமக்கு உடனே கிடைத்துவிடும். ஆனால், நிறைய வட்டியைக் கட்ட வேண்டியிருக்கும். இந்த இலக்குகளுக்கான பணத்தைச் சேர்ப்ப தற்கான பெஸ்ட் முதலீடுகள் மூன்று: வங்கி  ஆர்.டி., எஃப்.டி, லிக்விட் ஃபண்டுகள். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆர்.டி அல்லது லிக்விட் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க லாம். மொத்தமாக இருக்கும் பணத்தைப் போட்டு வைக்கவேண்டு மென்றால் எஃப்.டி அல்லது லிக்விட் ஃபண்டு களைத் தேர்வுசெய்வது நல்லது. 

பைக், கார் வாங்குவதற்கு

இந்தக் காலத்தில் சொந்தப் பணத்தைக் கொண்டு பைக் அல்லது காரை வாங்குபவர்களை விட, கடன் வாங்கி, அதன்மூலம் பைக்கையும், காரையும் வாங்குபவர்கள்தான் அதிகம். இந்தக் கடனை வாங்கிவிட்டு, 3-5 ஆண்டுகள் வரை கஷ்டப்பட்டு  கடனைக் கட்டுகிறார்கள். இப்படிக் கடனில் காரையோ, பைக்கையோ வாங்குவதற்குப் பதிலாக 3-5 ஆண்டுகளுக்குப் பணத்தைச் சேர்த்து, அந்தப் பணத்தைக்கொண்டு வாங்கி னால், கடன் சுமை இருக்காது.

இந்த இலக்குக்காக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஆர்.டி, லோ டுரேஷன் ஃபண்டுகள் அல்லது வங்கி/கம்பெனி டெபாசிட்களில் முதலீடு செய்வது சிறந்தது. மிதமான ரிஸ்க் எடுப்ப வர்கள் கடன் சார்ந்த ஃபண்டு களான கிரெடிட் ரிஸ்க் ஃபண்டு களில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட் டாளர்கள் சிறிது கூடுதல் வருமானம் பெற ஹைபிரிட் ஃபண்டுகளில் (கடன் அல்லது பங்கு சார்ந்தது) முதலீடு செய்யலாம்.
 
வீடு வாங்குவது

நம்மில் பலரின் வாழ்நாள் லட்சியம் வீடு வாங்குவதுதான். இன்றைய தினத்தில், பெரிய நகரங்களில் வீடு வாங்குவது ஒரு சாமானியனுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இருந்தாலும், சரியாகத் திட்டமிட்டால் வீடு வாங்கிவிடலாம். வீடு வாங்கு வதற்கான முழுப் பணத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு வீடு வாங்க வேண்டுமென்பதில்லை. டவுன்பேமென்ட்டுக்குத் தேவைப்படும் பணத்தையாவது திட்டமிட்டுச் சேர்ப்பது அவசியம். உங்களுக்குத் தேவைப்படும் பணத்துக்கேற்ப  குறைந்தது 2-3 ஆண்டுகளில் இந்தப் பணத்தைச் சேர்க்கலாம்.இந்த இலக்குக்கான பணத்தை  சேர்க்க விரும்புவர்கள்   ரிஸ்க்கே எடுக்க வேண்டாம் என்று நினைத்தால், வங்கி ஆர்.டி  அல்லது லிக்விட் ஃபண்டுகளில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேர்க்கலாம்.

மிதமான ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், அதிக ரிஸ்க் எடுக்க நினைப்ப வர்கள் லார்ஜ் மற்றும்  மிட்கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து கொள்ளலாம். அதிக ரிஸ்க் எடுத்துப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் சந்தை சரிந்தால், அது சரியாகும் வரை வீடு கட்டுவதைச் சற்று ஒத்திப் போடலாம். 

குழந்தைகளின் கல்வி

ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தனது குழந்தையை மிகச் சிறந்த கல்லூரியில் படிக்க வைக்கவேண்டும் என்பதுதான். அதற்கான செலவுகளுக்குத் திட்டமிட்டுச் சேமிப்பது / முதலீடு செய்வதுதான் சிறந்த வழி. இந்தக் காலத்தில்  கல்விக் கடன் கேட்டவுடன் கிடைக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்தக் கடன் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஒரு சுமையாகவே முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த இலக்குக்கான முதலீட்டைக் குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவது புத்திசாலித்தனம். குழந்தைக்குச் சராசரியாக  8 – 9 வயதாகும்போது, பலர் இந்த முதலீட்டைச் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த இலக்கிற்கான முதலீட்டைச் செய்ய விரும்பும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் வி.பி.எஃப் (VPF – Voluntary Provident Fund), ஆர்.பி.ஐ பாண்டுகள், என்.சி.டி-க்கள், கம்பெனி/ வங்கி டெபாசிட்டுகள், கடன் சார்ந்த ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அஞ்சலக ஆர்.டி-யையும்  கவனிக்கலாம். தற்சமயம் அஞ்சலக       (5 வருட) ஆர்.டி-க்கு ஆண்டிற்கு 6.90% வட்டி கிடைக்கிறது.

மிதமான ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர் கள் ஹைபிரிட் ஈக்விட்டி மற்றும் சில்ரன்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய லாம். சில்ரன்ஸ் ஃபண்டுகள் செபியின் புதிய உத்தரவின்படி, 5 வருடத்துக்குப் பணத்தைத் திரும்ப (lock-in) எடுக்க முடியாது. அதிக ரிஸ்க் எடுக்கும் சக்தி உடையவர்கள் லார்ஜ் + மிட்கேப் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 

குழந்தைகளின் திருமணம்

குழந்தைகளின் திருமண வைபவம் தான் பெற்றோர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். சமீபகாலம்  வரை பெண் குழந்தை பிறந்தவுடனேயே, தங்கத்தைச் சேர்க்க ஆரம்பித்துவிடுவார் கள் பலர். ஆனால், இப்போது தங்கம் மட்டும் இருந்தால் போதாது; திருமணத்தை ‘கிராண்ட்’-ஆக நடத்த  ரூ.10 – 20 லட்சம் தேவைப்படும்.
 
இந்த இலக்குக்கான முதலீட்டை பி.பி.எஃப், செல்வமகள் திட்டம், மத்திய அரசாங்கத்தின் கோல்டு பாண்டுகள்,   இ.பி.எஃப், வி.பி.எஃப், எஃப்.டி, கடன் ஃபண்டுகள் போன்றவற்றை ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் கவனிக்கலாம். தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக மத்திய அரசாங்கம் வெளியிடும் கோல்டு பாண்டுகள் சிறந்ததாகும். லாபத்திற்கு லாபம், அத்துடன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி, பாதுகாப்பு, வரிச் சலுகை என பல சௌகர்யங்கள் இந்த பாண்டுகளில் உள்ளன. மிதமான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் சில்ரன்ஸ் ஃபண்டுகள் அல்லது பங்கு சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்கும் நினைக்கும் முதலீட்டாளர்கள் லார்ஜ் + மிட்கேப் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 

ஓய்வுக்காலம்

எதற்கு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். ஓய்வுக் காலச் செலவிற்குக் கடன் வாங்க முடியாது. எனவே, இந்த இலக்குக்கான பணத்தை முன்னுரிமை தந்து சேர்க்க வேண்டும். இதற்கான பணத்தைச் சேர்க்க பி.பி.எஃப்-தான் பெஸ்ட்.  இதற்கடுத்து, இ.பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் பெஸ்ட் முதலீட்டு வழிமுறைகளாகும். கடன் சார்ந்த ஃபண்டுகள், டிபெஞ்சர், டெபாசிட்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.

என்.பி.எஸ் (NPS – National Pension Scheme), இ.டி.எஃப் (ETF – Exchange Traded Funds), இண்டெக்ஸ் ஃபண்டுகள், ஹைபிரிட் மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் மிதமான ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் வீடு மற்றும் அலுவலகத்தை வாங்கி வாடகைக்கு விட்டு  தங்கள் ஓய்வுக் காலத்திற்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டுகளிலும், புளூசிப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். 

உங்கள் இலக்குகளுக்கான பெஸ்ட் முதலீடுகளைச் சொல்லிவிட்டோம். இனி இந்த முதலீடுகளைப் பரிசீலித்து, அவற்றின்படி செயல்பட வாழ்த்துகள்!


செல்வத்தைப் பெருக்கும் வழி!

செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு மத்திய அரசு வெளியிடும் பாண்டுகள்தான் பெஸ்ட். இவை தவிர, மத்திய அரசின் கோல்டு பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், என்.சி.டி-க்கள், டெபாசிட்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் மிட்கேப் மற்றும் லார்ஜ் + மிட் கேப் ஃபண்டுகளிலும், புளூசிப் பங்குகளிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மிட் அண்டு ஸ்மால்கேப் பங்குகளில் நேரடியாக முதலீட்டை மேற்கொள்ளலாம். அதுபோல் நன்றாக வளர்ந்து வரக்கூடிய ஏரியாக்களில் வீட்டு மனைகளிலும் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் செல்வத்தைப் பெருக்க பெஸ்ட் சொந்தத் தொழிலில் இறங்குவதுதான்.

%d bloggers like this: