என்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா?… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…

பால்…” “சார், பேப்பர்…” – அதிகாலையில் ஒலிக்கும் இந்தக் குரல்களை கேட்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறோம். “நைட்ல எவ்வளவு நேரம் வேணும்னாலும் முழிச்சு இருக்கேன்… ப்ளீஸ் காலையிலே மட்டும் எழும்ப சொல்லாதீங்க…”என்பது ஒரு குரூப். “காலையிலே ஒரு பத்து நிமிஷம் லேட்டா எழும்பிட்டேங்க… அதில இருந்து, பஸ்ஸை விட்டு, ட்ரைனை மிஸ் பண்ணி ஒரே குழப்பங்க…” என்பது தினமும் நாம் கேட்கும் அங்கலாய்ப்பு. காலையில் சற்று முன்னதாகவே எழும்பினால், வேலைகளை பொறுமையாக செய்வதற்கு நேரம் இருக்கும். “காலையிலே எழும்பதான் நினைக்கிறேன்… ஆனால், முடியலைங்க,” என்கிறீர்களா? – உங்களுக்கு உதவவே இந்தக் கட்டுரை.

புத்தம்புது காலை

கிஃப்ட் சுற்றியிருக்கும் காகிதத்தை பிரிப்பதுபோல இருள் விலகி ஒவ்வொரு நாளும் இயற்கையின் பரிசாக புலரும் புதிய நாளின் அதிகாலைப்பொழுது, இன்பமானது. ஒலிக்கும் சுப்ரபாதம், தேவாலய மணியோசை, பள்ளிவாசலின் தொழுகைக்கான அழைப்பு என்று அவரவர் நம்பிக்கைக்கேற்ப நாளை தொடங்குவது பாரம்பரியமாக இருந்து வரும் பழக்கம். இறைவனை தொழுது கொள்ள, தியானம் செய்ய, மாணவர்கள் பாடம் படிக்க மிகவும் ஏற்ற நேரம் அதிகாலை தான்! அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி, அதிகாலையில் எழுந்து படிக்கும் மாணவர்கள், ஏனைய நேரத்தில் படிக்கும் மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிகாலையில் எழும்புவது உடற்பயிற்சி செய்வதற்கும், அன்றாட வேலைகளை நன்றாக செய்வதற்கும் உரிய நேரத்தை தருவதோடு, நமது செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. நாள் முடியும்போது, நன்றாக உறக்கம் வருவதற்கு அதிகாலையில் துயில் எழும்புவதே காரணமாகிறது. சரி! காலையில் எழும்புவதற்கு என்ன செய்யலாம்?

சின்ன சின்ன குறிக்கோள்கள்

“எப்படியாவது உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட் வச்சுங்கணுங்க” “வாழ்க்கைல கஷ்டப்பட்டு உழைக்கணும்ங்க” “ஆபீஸ்ல வேலைல நம்மள அடிச்சுக்க ஆளே இருக்கக்கூடாதுங்க” “லேட்டா ஆபீஸ்க்கு போய் அந்த மேனேஜர் முன்னாடி நிக்கக்கூடாதுங்க” – இப்படி ஏதாவது ஒரு சிறிய குறிக்கோள் இருந்தால் போதும். தானாகவே காலையில் விழிப்பு வந்து விடும். உடற்பயிற்சி செய்வதற்கு, ஜாகிங் போவதற்கு அதிகாலை நேரம் ஒதுக்குங்கள். மனதுக்கு பிடித்தமான விஷயத்தை செய்ய வேண்டுமானால், உள்ளே இருக்கும் ஆவல், உங்களை எழுப்பிவிட்டு விடும்.

மாலையில் காபி

காலையில் ஒரு காஃபி அல்லது டீ குடிப்பது, மூளையை தூண்டி நமக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். வேலை செய்து கொண்டிருக்கும்போது, இலேசாக சோர்வோ, சலிப்போ ஏற்படும்போது தேநீர் அருந்துகிறோம். சோம்பலை அகற்றக்கூடிய காஃபி, தேநீர் போன்ற பானங்களை மாலை பொழுதுக்கு பின்னர் குடித்தால், மூளையை தூண்டி நிச்சயமாக தூக்கத்தை கெடுத்துவிடும். அளவுக்கு அதிகமாக காஃபி அருந்துபவர்கள் ஆழ்ந்து உறங்க முடியாது. ஆழ்ந்த உறக்கம் இல்லையெனில் அதிகாலையில் உற்சாகமாக எழும்ப இயலாது.

சிறிது சிறிதாக மாறுங்கள் 

வீட்டில் கும்பகர்ணன் என்று பெயர்பெற்றவர்களா நீங்கள்? வெயில் வருவதுகூட தெரியாமல் காலை பத்து மணி வரைக்கும் உறங்குபவர்களா? ஒரே நாளில் தீர்மானம் எடுத்து, அதிகாலை ஆறு மணிக்கு எழும்ப முயற்சிக்காதீர்கள். உறங்கி பழகிய உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்க சிரமப்படும். அரைமணி நேரம், ஒரு மணி நேரம் அதாவது காலை 8:30 மணி, 7:30 மணி என்று கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை கூட்டி வாருங்கள். சில வாரங்களில் அதிகாலை 5:30 அல்லது 6 மணிக்கு எழும்ப உங்கள் உடல் பழகிவிடும். சீக்கிரமாக படுக்கைக்குச் செல்லுங்கள் சீக்கிரமாக படுக்கைக்குச் செல்லுங்கள் முடிந்த அளவு சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது அதிகாலையில் விழிக்க உதவியாக இருக்கும். இரவில் நீண்டநேரம் கண்விழித்து இருந்துவிட்டு தாமதமாக படுத்தால், அதிகாலையில் எழும்ப இயலாது. தொடர்ந்து தாமதமாக படுத்து, அதிகாலையில் விழித்தால் தூக்கக்குறைவினால், மறுநாள் முழுவதும் சோர்வும், மந்த தன்மை நம்மை ஆட்கொண்டுவிடும். ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம். உதாரணமாக இரவில் 10 மணிக்கு படுக்கைக்குச் சென்றால், எட்டு மணி நேரம் தூங்கி காலையில் ஆறு மணிக்கு புது உற்சாகத்தோடு எழும்ப முடியும்.

ஆழ்ந்து உறங்குங்கள்

ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு அவசியம். நாம் நன்றாக ஆழ்ந்து உறங்கும்போது, உடலுக்குள் பல செயல்பாடுகள் நடக்கின்றன. செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றத்தினால் உடலிலுள்ள நச்சுப்பொருள் பிரிக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நன்கு ஆழ்ந்து தூங்கி காலையில் எழுந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்; சோர்வு அண்டாது.

படுக்கும் முன்னர் டி.வி.

. எல்இடி போன்ற டிஜிட்டல் திரைகளை பார்ப்பது, தூக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நீங்கள் பத்து மணிக்குப் படுக்கைக்குச் செல்லும் பழக்கமுடையவராயினும் படுப்பதற்கு சற்று நேரம் முன்பு வரை எல்இடி ஸ்கிரீனை பார்த்துக்கொண்டிருந்தீர்களானால், தூக்கம் தடைபடும். அதிகாலையில் எழும்ப விரும்பினால், படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பான இடைவெளியில் டி.வி பார்க்கக்கூடாது.

அலாரமும் அதிகாலை விழிப்பும்

“ஆறு மணிக்கு அலாரம் வை” “எதுக்கு?” “ஆறு அஞ்சுக்கு தூங்கணும்” – என்பது சிரிப்புக்காக சொல்லப்பட்டாலும், அதிகாலையில் விழிப்பதில் அலாரத்தின் உதவி முக்கியமானது. நீங்கள் விழிக்க வேண்டியதற்கு கால் மணி நேரம் முன்னதாகவே அலாரம் வைத்து விடுங்கள். அதாவது நீங்கள் 6 மணிக்கு எழும்ப வேண்டுமென்றால், அதிகாலை 5:45 மணிக்கு அலாரம் வைக்க வேண்டும். அப்போது தான் உடல் மெதுவாக ஆயத்தமாகி எழும்புவதற்கு நேரம் கிடைக்கும். ஊரையே கூட்டுவது போன்று அதிக சத்தத்தோடு அலாரம் வைக்காதீர்கள். அது அனைவரது தூக்கத்தை கெடுத்து விடும். அதேவேளையில், உங்கள் படுக்கையை விட்டு சற்று தள்ளி, நீங்கள் எழுந்து சென்று நிறுத்துவதுபோன்று அலாரத்தை வைத்து விடுங்கள். அப்போதுதான், படுக்கையிலிருந்து எழுந்து சென்று, அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் படுக்கைக்கு வர மாட்டீர்கள்.

மனதோடு பேசுங்கள்

மனதோடு பேசுவது என்பது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால், அது உண்மையில் நல்ல பலனை கொடுக்கும். காலையில் நீங்கள் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டுமோ அதை திரும்ப திரும்ப மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் ஆழ்மனம் இந்த தகவலை பதிவு செய்து கொள்ளும். அப்போது உடல் அதற்கேற்ப இயங்கும். ஆனால், ஆழ்ந்து உறங்கினால்தான் இந்த முறை பலன் தரும். தூக்கம் தடைபடும்போது, ஆழ்மனம் சரியாக இயங்காது. ஆகவே, உறங்கச் செல்லும் முன், உங்கள் மனதோடு பேசுங்கள்.

தியானம்

சிலருக்கு தூக்கத்தையும் கனவையும் பிரிக்க இயலாது. மனதுக்குள் கிடக்கும் தொல்லைகளே சொப்பனங்களை கொண்டு வருகின்றன. ஒவ்வொருவர் மனதிலும் பல்வேறு வித்தியாசமான எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தேவையற்ற எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவது மனதிற்கு இளைப்பாறுதல் தரும். மனம் அமைதியாக இருந்தால், சொப்பனங்கள் வந்து தூக்கத்தை கெடுக்காது. ஆகவே, தூங்குவதற்கு முன்பு மனதை அமைதிப்படுத்துங்கள்.

உடலை கவனிங்க

நம் உடலுக்கென்று ஒரு கடிகாரம் உள்ளது, தெரியுமா? எப்போது சாப்பிட வேண்டும்? எப்போது நீர் அருந்தவேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? என்பது குறித்து உடல் குறித்த நேரத்தை வைத்திருக்கிறது. நம் சொந்த உடல், நம்மோடு என்ன பேசுகிறது என்பதை சற்று கவனிக்க வேண்டும். மனதை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது, உடல் தானாக தூங்கத்தை தழுவுகிறது. 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்துவிட்டால், தூங்கி ஆக வேண்டிய கட்டாயம் உடலுக்கு ஏற்பட்டு விடும். குறிப்பாக, இரவில் உடல் தூக்கத்தை நாடும். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? வேலை பரபரப்பில், உடல் சொல்வதை கவனிக்க தவறி விடுகிறோம். நேரந்தவறி தூங்க செல்கிறோம்; நேரங்கடந்து விழிக்கிறோம். காலையில் எழும்ப வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் உடல் சொல்வதை கவனியுங்கள்.

 உடற்பயிற்சியும் தூக்கமும்

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது, சிறுநடை கூட மூளையை உற்சாகமாக்கும். மூளை, ஆரோக்கியமாக துடிப்பாக இருப்பதற்கும் ஆழ்ந்த உறக்கத்திற்கும் தொடர்பு உண்டு.. ஏனென்றால், உடல் சோர்வடையும்போது, உறக்கமும் நன்றாக வரும். ஆகவே, உறங்குவதற்கு சற்று முன்பாக ஏதாவது உடல் சார்ந்த செயல்பாட்டில் ஈடுபட்டால், மூளை தூண்டப்பட்டு புத்துணர்வு பெற்று விடும். அப்போது தூக்கம் உடனடியாக வராது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியும். அது மனதுக்கு இளைப்பாறுதல் தரும்; நன்றாக உறங்கி, அதிகாலையில் எழும்ப முடியும். உழைப்போம்;

உறங்குவோம் உழைப்போம்;

உறங்குவோம் ஆழ்ந்த உறக்கம், நாம் படுக்கைக்குச் செல்லும் வேளை, தூங்கும் கால அளவு ஆகியவற்றோடு தொடர்புடையது. அதிகாலையில் எழும்ப வேண்டுமென்றால், உடல் நன்றாக களைத்து உறக்கம் வர வேண்டும். சீக்கிரமாகவே படுக்கைக்குச் செல்ல வேண்டும். அதற்கு நம் தாத்தா, பாட்டி காலத்தில் கடைப்பிடித்த வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் நன்றாக வேலை செய்து, பசிக்கும்போது திருப்தியாக சாப்பிட்டால், மனம் சமாதானமாக இருக்கும்; ஆழ்ந்து உறங்க முடியும்; அதிகாலையில் விழிப்பும் வரும். கோழி கூவும் நேரத்திற்கு படுக்கையை விட்டு எழும்ப முடியும்.

%d bloggers like this: