மூங்கில் போலாகும் முதுகுத் தண்டு!

கழுத்து வலி, முதுகு வலி இரண்டும் இன்று பொதுவான பிரச்னைகள். வாழ்க்கை முறை மாறி விட்டது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டியுள்ளது.
ஒரு நாளில், பல கி.மீ., துாரம் பயணம், குறிப்பாக, இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டிய நிலை. இப்படி கழுத்து, முதுகு வலிக்கு பொதுவான காரணங்கள் பல உள்ளன.

இருபது – முப்பது வயது வரையுள்ள இளம் வயதினரை அதிகம் பாதிக்கும், இப்பிரச்னைக்கு இன்னொரு முக்கிய காரணம், ‘அங்கிலோசிங் ஸ்பான்டிலிடிஸ்!’ உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், முதுகுத் தண்டை தாக்கி, வீக்கத்தை ஏற்படுத்துவதே இதற்கு அடிப்படைக் காரணம்.
இந்த பிரச்னை, பெண்களை விட, ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. மூங்கில் எப்படி வளையாமல் நேராக நிற்குமோ, அப்படி முதுகுத்தண்டும் ஆகிவிடும்.
முதுகின் கீழ் பகுதியில் அல்லது உட்காரும் இடத்தில், இரவு நேரத்தில் ஏற்படும் வலி, காலையில் எழுந்தவுடன் வரும் வலி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.
தாங்க முடியாத வலியுடன், குறிப்பிட்ட இந்த இடங்களில் உள்ள தசைகள், இறுக்கமாக இருக்கும்; வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்த அரை மணி நேரத்திற்குப் பின், தசைகள் தளர்வாகி, வலி குறையும். இது போன்ற பிரச்னை இருப்பவர்கள், குனிந்து, எந்த வேலையும் செய்ய முடியாது.
ரத்தப் பரிசோதனை உட்பட சில மருத்துவ பரிசோதனைகள் செய்து, ‘அங்கிலோசிங் ஸ்பான்டிலிடிஸ்’ இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வலி நிவாரணியோடு, வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி என்று, ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளால், பிரச்னையை கட்டுக்குள் வைக்க முடியும்.
தொடர்ந்து வலி நிவாரணிகளை சாப்பிட வேண்டியிருக்கும். ஸ்டீராய்டு அல்லாத மாத்திரைகள் என்றாலும், நீண்ட நாட்களுக்கு சாப்பிடும் போது, ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
பயோலாஜிக்ஸ் எனப்படும், ஜெனிடிக் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தில் உருவான புரதம், இப்பிரச்னைக்கு நல்ல தீர்வாக உள்ளது. பிரச்னையை ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை தடுக்கும் வலிமை கொண்டது, பயோ லாஜிக்ஸ்.
இந்த சிகிச்சையானது வலியை குறைத்து, முதுகுத்தண்டு, இடுப்பு பகுதியின் இயல்பான இயக்கத்திற்கு வழி செய்வது மட்டுமல்லாது, பிரச்னை தீவிரமடைவதையும் தடுக்கிறது; இதோடு, ஸ்ட்ரெச்சிங், தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை வலியைக் குறைப்பதோடு, மூட்டுகள் மற்றும் முதுகுத்தண்டின் வளையும் தன்மையை அதிகப்படுத்தும்.
‘ஹைட்ரோ தெரபி’ எனப்படும் நீராவி குளியல், நீச்சல் இரண்டும் நல்ல பலனைத் தரும். தலையணை இல்லாமல் துாங்குவது, கொழகொழப்பாக இல்லாமல், கடினமான மெத்தையில் படுப்பது முக்கியம். இது முதுகுத்தண்டிற்கு பாதுகாப்பைத் தரும்.
சமச்சீரான உணவு சாப்பிடுவதும், உடல் எடையை உயரத்திற்கு ஏற்ப பராமரிப்பதும் முக்கியம்.
துவக்கத்திலேயே பிரச்னையை கண்டறிந்து, முறையான மருத்துவ ஆலோசனை பெற்றால், இந்தப் பிரச்னையை எளிதாக சமாளிக்க முடியும்.
டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்
முடக்குவியல் சிறப்பு மருத்துவர், சென்னை.
ramkisandy@gmail.com

%d bloggers like this: