Mind…Body…Soul…நல்லன எல்லாம் தரும்!–யோகா

யோகாவின் அருமை, பெருமைகளைப் பற்றி இப்போதுதான் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானப்பூர்வமான அஷ்டாங்க யோகா என்பது நமது இந்தியா உலகுக்கு அளித்த சாகாவரம்! யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச் செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது.எப்போதும் அமைதியற்று, மன சஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே எனது தொழில், உடலை வருத்தி கொடுமைப்படுத்துவதே எனது கொள்கை, சமுதாயத்தில் உள்ள அனைவரும் என் எதிரிகள் என வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள்தான் பெரும் மன அழுத்தத்தில் துன்பப்பட்டு அதன் காரணமாக பலவித நோய்களுக்கு கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். யோகா இதைத்தான் ‘எப்போதும் சோகம், உடல் தளர்ச்சி, இளமையில் முதுமை, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், கோபம், மூட்டுகளில் உயிர் போகும் வலி’ என மெதுவாக ஆரம்பிக்கும் மன அழுத்த நோயின் ஆரம்பம் என தெரிவிக்கிறது.

இதன் காரணமாக, இந்த நோயின் தொடக்கத்தால் பயம், காட்டுக் கத்தலோடு வரும் பயங்கர கோபம், தேவையற்ற எதிர்பார்ப்புகள், அளவுக்கதிகமான ஆசை, அடுத்தவர்களோடு தன்னை ஒப்பிட்டு வரும் பொறாமை, தோல்வியைக் காணவும், அனுபவிக்கவுமே நான் பிறந்தவன் என்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எதிர்மறையான, கெட்ட எண்ணங்களை மட்டுமே உங்களிடம் சேகரித்து, உங்களை வாழ்நாள் முழுவதும் துன்ப வாழ்க்கையை அனுபவிக்கச் செய்கிறது. இவை அனைத்தையும் யோகாவின் உதவியோடு அணுகிப் பயன் அடைய முடியும்.

தினசரி ‘யோகா’ பயிற்சியின் மூலம் கட்டாயமாக பலவித பலன்கள் உள்ளன. எட்டு விதமான Yama, Niyama, Asana, Pranayama, Pratyahara, Dharana, Dhyana, Samadhi என இவற்றோடு இயற்கையான, அருமையான, நன்றாக செரிக்கக்கூடிய, மனித உடலுக்கே உகந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மாமிச உணவுப் பிரியர்கள், தினசரி எடுக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள முயற்சித்து வெற்றி ெபற வேண்டும். இத்துடன் தேவையான உடற்பயிற்சியும் சேரும் போது உடலும் மனமும் வலுவடைகின்றன.

ஆசனங்களையும் பிராணாயாமத்தையும் தியானத்தையும் தொடர்ச்சியாக செய்து வருவதால் உடலின் உள்ளே உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக, சிறப்பாக செயல்படுகின்றன. மனது தூய்மையடைகிறது. இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தினசரி   தவறாமல் யோகா செய்து வரும் நண்பர்கள் பலவித நன்மைகளைப் பெறுகிறார்கள் என அமெரிக்காவின் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிரூபித்து, உலகிற்கு யோகாவின் பெருமையை விளக்குகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக யோகா மற்றும் தியானப் பயிற்சி செய்வதன் பலன்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

*     நாடித் துடிப்பை சீராக வைக்கிறது.
*    சீரான மூச்சுக்கு உதவுகிறது.
*    கூடும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
*    எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
*    உடல், மனது உறுதியாகி எதையும் தாங்கும், நோய்களை அண்ட விடாத எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
*    இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை  தள்ளிப் போடுகிறது.
*    உடலில், ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்ட விடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
    தினசரி யோகா பயிற்சி உடலில் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்து, உடல், மனது மற்றும் ஆன்மா என அனைத்தையும் சுத்தமாக்குகிறது. மேலும் தொடர்ச்சியான யோகாசனப் பயிற்சிகளின் காரணமாக உடலில் முறுக்கு அறவே நீக்கப்பட்டு, நல்ல வளைந்து கொடுக்கும் தன்மை (Flexibility) அதிகரிக்கிறது.

யோகாவின் காரணமாக சாதாரண மனிதன், அனைத்து பயன்களையும் பெற்று, வாழ்க்கையை அனுபவித்து முழுமனிதன் என்ற நிலையை அடைகிறான். யோகாவை தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாக அமைத்துக் கொண்டால், மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்கலாம். நோய்களுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளை படிப்படியாக குறைத்து, அதையே முழுமையாக 100 சதவிகிதம் நீக்கி, நோய்களே இல்லாத உடலாக மாறி மருந்துகளே தேவைப்படாத ஆரோக்கிய வாழ்வு மலரும்.

இதற்காக யோகா செய்பவர்கள் மருத்துவமனைக்கே செல்ல வேண்டாம் என்ற வீண்வாதம் செய்வதால் யாருக்கும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வரும்போது அதற்காக சென்றே ஆக வேண்டும். யோகாவின் சிறப்பு, அதன் உன்னதம், பெரும் நன்மைகள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது. நல்ல உடல் நலம் இல்லாது, என்றும் நோயோடு வாழும் மனிதர்கள், தங்கள் சொத்து, சேமிப்பு அனைத்தையும் மருத்துவத்திற்காக செலவழித்த பின்பும் கிடைப்பது மரணத்தின் பயமும், மேலும் பல நோய்களின் வரவும்தான்.

காரணம், தன்னைப் பற்றியும், தன் உடலை, உள்ளத்தை, ஆன்மாவை அறியாத, புத்தியில்லாத வாழ்க்கை முறையும்தான் காரணம். உலகமே நம் யோகாவை பின்பற்றி பயன் அடையும் போது, சாதி-மதம் பார்க்காமல் நாம் அனைவரும், குடும்பத்தில் ஒவ்ெவாரு அங்கத்தினரின் தினசரி வாழ்க்கையின் அங்கமாக யோகாவின் வழிமுறைகளை இன்றே தொடங்கி பயன் பெற வேண்டியது, காலத்தின் கட்டாயம்!

%d bloggers like this: