இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு… எளிதாகப் பெற என்ன வழி?

ன்றைக்கும் நம்மில் பலருக்கும் இருக்கிற பெரிய சந்தேகம், நமக்குப்பின் நம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான இழப்பீடு நம் குடும்பத்தினர் எளிதாகப் பெற முடியுமா என்பதுதான். இதில் சந்தேகமே வேண்டாம். ஒருவரது இறப்பு இயற்கையானதாக இருக்கும்பட்சத்தில் அவருக்கான இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார் எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டலப் பிரிவு மேலாளர் தாமோதரன். இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீட்டைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இனி…

`பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகு பாலிசியில் டெத் க்ளெய்ம் செய்வதற்கான நடைமுறை என்ன?

“பாலிசிதாரர் மரணமடைந்தால் அவரது இறப்புச் சான்றிதழை முதலில் பெறவேண்டும். அதன்பிறகு அவருடைய பாலிசி முகவரை அணுகினால், இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதற்கான அனைத்தையும் அவரே செய்துதருவார். முகவர் தொடர்பில் இல்லாத சூழலில், அந்த பாலிசிக்குரிய கிளை அலுவலகத்தை அணுகி க்ளெய்ம் பெறலாம். அங்கே, க்ளெய்ம் செய்வதற்குத் தேவையான விண்ணப்பப் பாரத்தைத் தருவார்கள். அதில் பாலிசி குறித்த விவரங்கள், பாலிசிதாரர் மற்றும் வாரிசுதாரரின் விவரங்கள், இறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டால், அதைச் சரிபார்த்தபிறகு வாரிசுதாரரிடம் க்ளெய்ம் தொகையை ஒப்படைப்பார்கள்.

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை, க்ளெய்ம் செய்யும் ஆண்டுகளின் அடிப்படையில் இரண்டாகப் பிரிப்போம். பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் செய்யப்படும் க்ளெய்ம்களை `இயர்லி க்ளெய்ம்’ (Early Claim) என்போம். பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளைத் தாண்டிய க்ளெய்ம்களை `நான்-இயர்லி க்ளெய்ம்’ என்போம். இந்த க்ளெய்மில் பூர்த்தி செய்யவேண்டிய பாரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். `இயர்லி க்ளெய்ம்’-ல் பூர்த்திசெய்யவேண்டிய பாரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஏனெனில், `இயர்லி க்ளெய்ம்’-ல் ஏதேனும் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறியவேண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளைத் தாண்டிவிட்டால், இப்படியான விசாரணைகள் தேவைப்படாது.’’

பாலிசிதாரர் இறந்தபின் இழப்பீட்டைக் கேட்க காலதாமதமானால் சிக்கல் வருமா?

“இழப்பீட்டைக் கோர மூன்று ஆண்டுகள் வரை தாமதித்தால் பிரச்னையில்லை. அதற்குப்பிறகு க்ளெய்ம் செய்தவர்களுக்குத் தாமதத்துக்கான காரணத்தை விசாரித்தபிறகே கொடுப்போம். அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தாமதித்தவர்களுக்கு இழப்பீட்டைத் தந்திருக்கிறோம்.’’

கணவன், மனைவி இருவரும் மரணிக்கும் சூழலில் டெத் க்ளெய்மை யாருக்கு அளிப்பீர்கள்?

“பாலிசியில் குறிப்பிட்டுள்ள வாரிசுதாரரும் (Nominee) இல்லாத சூழலில் அவர்களின் மகன்/மகள், வாரிசுச் சான்றிதழை வாங்கி வந்து ஒப்படைத்து அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் அந்தத் தொகையைச் சமமாகப் பகிர்ந்தளிப்போம்.’’

சந்தேகத்திற்குரிய நோயால் ஒருவர் மரணமடைந்தால், இழப்பீடு தரப்படுமா?

“இறந்தவர் எங்கே சிகிச்சை பெற்றார், எந்த நோய்க்காக சிகிச்சை பெற்றார், எவ்வளவு காலமாக சிகிச்சை பெற்றார், என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொண்டார் என்பதையெல்லாம் ஆய்வு செய்வோம். பாலிசி தொடங்கியதில் இருந்தே நல்ல முறையில் பிரீமியத்தைக் கட்டியுள்ள சூழலில், மூன்று ஆண்டுகள் தாண்டியபிறகு, உடல்நலக்குறைவால் ஏற்படும் மரணங்கள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பமாட்டோம். மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மரணம் நேரும் பட்சத்தில் மட்டுமே தீவிரமாக விசாரிப்போம்.’’

பாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால் டெத் க்ளெய்ம் கிடைக்குமா?

“கொலையை இரண்டுவிதமாகப் பார்க்க வேண்டும். ஒன்று, அந்தக் கொலையில் பாலிசிதாரருக்கும் பங்கு இருக்கிறதா, அதன் காரணமாக அந்தக் கொலை நடந்துள்ளதா என்பது. இரண்டாவது, பாலிசிதாரருக்கு நேரடித் தொடர்பு இல்லாமல் வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை நடந்துள்ளதா என்பது. பாலிசிதாரர் யாரையோ முன்னதாகக் கொலைசெய்து, அதற்கு எதிர்வினையாக இவரும் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தால், அந்த டெத் க்ளெய்மைத் தராமல் மறுக்க வாய்ப்புள்ளது.

பாலிசிதாரரின் கொலை தொடர்பாக நாங்களே தனியாக விசாரணை நடத்துவோம். காவல் துறையின் அறிக்கை, கெமிக்கல் அனாலிசிஸ் ரிப்போர்ட் போன்றவற்றை ஆய்வு செய்து கொலைக்கான காரணத்தைக் கண்டறிவோம்.’’


பாலிசிதாரரை அவரது வாரிசே கொலை செய்தால் இழப்பீடு கிடைக்குமா?

“இழப்பீட்டினைப் பெறவேண்டும் என்கிற நோக்கத்திலேயே கொலை செய்தது தெரியவந்தால், இழப்பீட்டினைத் தரமறுப்போம். இதுபோன்ற சூழலில் நீதிமன்றத்தை நாடுவோம். இத்தகைய சிக்கல்களை விசாரிப்பதற்காக, எங்கள் சார்பிலும் ஒவ்வொரு மட்டத்திலும் விசாரணைக் குழு வைத்திருக்கிறோம். டிவிஷனல் அலுவலக மட்டத்தில் விசாரணைக் குழு ஒன்று உள்ளது. அவர்களாலும் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில், அடுத்ததாக மண்டல அலுவலக மட்டத்தில் உள்ள விசாரணைக் குழுவினரால் விசாரிக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் உறுப்பினராக இருப்பார். இதிலும் திருப்தியில்லாத பட்சத்தில், இதற்கும் மேலாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும்.’’

%d bloggers like this: