சிம் கார்டுகளே இல்லா மொபைல்…. சீக்கிரமே வரும்!

முதலாவது Full size (1FF) சிம் கார்டுகள். 1991-ம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏடிஎம் கார்டின் அளவு இருந்த அதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் அதன் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு 1996- ம் ஆண்டில் Mini-SIM (2FF)என்ற வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தக் கால நோக்கியாவோ, மோட்டோரோலோவோ இந்தக் கால ஐபோனோ, ஆண்ட்ராய்டோ எந்த மொபைலாக இருந்தாலும் அதில் மாறாத விஷயம் சிம்கார்டுதான். காலத்துக்குத் தகுந்தவாறு மொபைலின் தொழில்நுட்பங்களும் அதன் வடிவமும் மாறினாலும் கூட சிம் கார்டுகள் காலம் காலமாக அப்படியேதானிருக்கின்றன.

சிம் கார்டுகளின் பயன்பாடு

ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. சிம்மில் அதன் நெட்வொர்க் தொடர்பான தகவலும், அதன் உரிமையாளர் பற்றிய தகவலும் பதியப்பட்டிருக்கும். GSM தொழில்நுட்பத்தை வரைமுறைப்படுத்துவதற்காக GSM Association என்ற அமைப்பு 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புதான் சிம்களுக்கான வரைமுறைகளை நிர்ணயம் செய்திருக்கிறது அவற்றின் அளவுகளையும் வரைமுறைப்படுத்துகிறது. இதுவரை 4 வகை சிம்கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிக்கின்றன. முதலாவது Full size (1FF)  சிம் கார்டுகள். 1991-ம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏடிஎம் கார்டின் அளவு இருந்த அதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னர் அதன் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு 1996- ம் ஆண்டில் Mini-SIM (2FF)என்ற வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுதான் நமக்கு அறிமுகமான முதல் சிம் கார்டு. இந்தியாவில் மொபைல் பிரபலமானபோதும் சரி அதற்கு பிறகும் சரி பல வருடங்களுக்கு இந்த வகை சிம் கார்டுகளே புழக்கத்தில் இருந்தன. அதன் பிறகு அதன் அளவை மீண்டும் குறைத்தார்கள். Micro-SIM (3FF) என்று பெயரிடப்பட்ட இந்த வகை சிம் கார்டுகள் 2003-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை 2003-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும் இந்தியாவில் பிரபலமாகவில்லை. அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியாவில் இவற்றைப் பயன்படுத்தும் மொபைல்கள் வரத் தொடங்கின. அதன் பின்னர் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது Nano-SIM (4FF). சிம் கார்டில் இருக்கும் பிளாஸ்டிக்கைத் தவிர்த்து சிப்பை மட்டும் வெட்டியெடுத்தால் என்ன கிடைக்குமோ அதுதான் நானோ சிம்.

 சிம் கார்டு

பெரும்பாலும் அனைத்து ஸ்மார்ட்போன்களுமே இந்த நானோ சிம் கார்டைத்தான் பயன்படுத்துகின்றன. சொல்லப்போனால் நமது ஊர் மக்களுக்கு மினி சிம்களின் அளவைக் குறைப்பதில் விருப்பம் இல்லையென்றுதான் கூற வேண்டும். ஆனால், சிம்களின் அளவைக் குறைக்கும் போது மொபைல்களின் அந்த இடத்தை மிச்சமாக்கலாம் என்பதால் இந்த மாற்றம் மொபைல் நிறுவனங்களுக்கு அவசியமாக இருந்தது. மற்ற நிறுவனங்கள் எப்படியோ ஆப்பிள் எப்பொழுதுமே புதுமையை விரும்பும் என்பதால் மாற்றங்களை விரைவாகவே ஏற்றுக்கொண்டது. அவ்வப்போது ஐபோனின் சிம் அளவையும் மாற்றியமைத்தது. 

இனி இ-சிம்களின் காலம்

நீண்ட காலமாகவே வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் இருந்த சிம்கள் இனிமேல் காணாமல் போகப்போகின்றன. மொபைலில் டச் ஸ்க்ரீன், கேமரா எனப் பல்வேறு வசதிகள் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டாலும் அது முதலில் ஒரு தொடர்புக்கான சாதனம் என்பதால் சிம் கார்டுகளின் தேவை தவிர்க்க முடியாமல் இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது அந்த இடத்தைப் பிடிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறது இ-சிம் தொழில்நுட்பம். embedded SIM சுருக்கமாக eSIM எனப்படும் இவையும் கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத்  தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். வழக்கமான சிம் கார்டுகள் போல இல்லாமல் இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது.

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் இதில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டியை எடுத்துக்கொண்டால் அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டைத்தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தச்  சிக்கல் இருக்காது. பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப்  பதிந்துகொள்ளலாம். இந்த இ-சிம்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியுமா என்பதற்கான வழிகளை 2010-ம் ஆண்டிலேயே  GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு  2016-ம் ஆண்டில் இதனை அறிமுகப்படுத்தியது. தற்பொழுது சில நிறுவனங்கள் இ-சிம்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. அதிலும் முதலிடம் பிடித்திருப்பது ஆப்பிள்தான். ஆப்பிள் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக மொபைலில் எந்த எண்ணைப் பயன்படுத்துகிறோமோ அதே எண்ணை ஆப்பிள் வாட்சிற்கும் பதிவு செய்து கொள்ளலாம். வாட்சிலிருந்தும் கால் செய்யவும், பெறவும் முடியும். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கின்றன. ஒரே தொடர்பு எண் ஒரே தகவல் ஆனால் இரண்டு வேறு சாதனங்கள். இதைத்தான் சாத்தியப்படுத்தியிருக்கிறது இ-சிம் தொழில்நுட்பம். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகப்  பயன்பாட்டிற்கு வந்துவிடும் அதன் பிறகு மொபைல்களில் தற்பொழுது நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகள் காணாமல் போகும்.

%d bloggers like this: