பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

 

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

ழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்’ என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்’ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.    

பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகுமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும். அப்போது, சூரியன் மேற்கில் மறையும் நேரம், செவ்வாய் கிழக்கில் தோன்றும். சூரியன் கிழக்கில் தோன்றும் நேரம், செவ்வாய் மேற்கில் மறைந்துவிடும். இதனை அறிவியலில் `அப்போசிஷன்’ (Opposition) என்பார்கள்.

செவ்வாய்

கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் (elliptical orbits) சுற்றுகின்றன. நீள்வட்ட பாதையில் கிரகங்கள் சுற்றுவதால் ஒரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அருகே வரும், மற்றொரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அதிகத் தொலைவில் இருக்கும். நீள்வட்டப் பாதையில் கிரகமும் சூரியனும் அருகருகே வரும் புள்ளிக்கு `பெரிஹெலியான்’ (Perihelion) என்று பெயர். சூரியனுலிருந்து அதிகத் தொலைவில் கிரகம் இருக்கும் புள்ளிக்கு `அப்ஹெலியான்’ (Aphelion) என்று பெயர். `அப்போசிஷன்’ நிகழும்போது செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதன் பெயர் `பெரிஹெலிக் அப்போசிஷன்’ (Perihelic Opposition). இந்த நிகழ்வினால் செவ்வாய் கிரகமானது சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும். 

சராசரியாக செவ்வாய் கிரகமானது பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது பூமியிலிருந்து வெறும் 35.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இதனால் எப்போதும் இல்லாத வகையில் செவ்வாய் அதிகப் பிரகாசமாகக் காணப்படும்.வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வியாழன் கோளை விட 1.8 மடங்கு அதிகப் பிரகாசமானதாகக் காணப்படும். இதன் மூலம் சூரியன், நிலா, வெள்ளிக்குப் பிறகு செவ்வாய் நான்காவது பிரகாசமான கோளாகத் தோன்றும். 

வானத்தில் தென்கிழக்கு திசையில் சாஜிட்டேரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே தென்படும். இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் காண இயலும். வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குச் செவ்வாய் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. குறிப்பாக அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. ஆனால், தென் அரைக்கோளத்தில் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகக் காணலாம். தெற்கு கனடா, ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் செவ்வாயைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.    

செவ்வாய்

இந்த `பெரிஹெலிக் அப்போசிஷன்’ என்ற நிகழ்வானது துல்லியமாக வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி நிகழவிருக்கிறது. இதனால் ஜூலை மாதம் முழுவதும் பிரகாசமாகவும் பெரிதாகவும் காணப்படும். செவ்வாய் வழக்கத்தை விட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும். கடந்த 2003ம் ஆண்டு இதே நிகழ்வு நடந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு செவ்வாயும் பூமியும் அருகில் வந்தன. செவ்வாயின் நீள்வட்டப்பாதை நாளாக நாளாக பெரிதாகிக்கொண்டே போகிறதாம். இதனால் வருங்காலத்தில் பூமியும் செவ்வாயும் இன்னும் மிக அருகில் வருமாம். 2003 ம் ஆண்டை விட ஆகஸ்ட் 27, 2287ம் ஆண்டு நடக்கவிருக்கும் `பெரிஹெலிக் அப்போசிஷனின்’ போது செவ்வாயும் பூமியும் மிக மிக அருகில் வருமாம். வெல்கம் சூப்பர்மார்ஸ்!

%d bloggers like this: