Advertisements

கொள்ளைக் கூட்டணி… கொந்தளிக்கும் ஐ.ஜி!

புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார்.

“தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர்,

“18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிக்கக் கூடாது என்பதில்தான் தினகரன் தரப்பு குறியாக இருந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. நீதிபதி விமலா மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணாவை உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும்போது, தெம்பு கூடாமல் என்ன செய்யும்?’’ என்று சொன்னார்.

“நீதிபதி விமலா நியமனத்தில் தினகரன் அணிக்கு என்ன அதிருப்தி?

“ஜனவரி 4-ம் தேதி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த அரசு ஆணை வெளியானது. அதில் 65-வது பெயராக சாரதாதேவி என்று இருந்தது. நீதிபதி விமலாவின் மருமகள்தான் சாரதாதேவி. விமலாவின் மகனும் கவிஞருமான விவேக்கின் மனைவி. கிரிமினல் வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞராக சாரதாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மருமகளை அரசு வழக்கறிஞராக நியமித்த தமிழக அரசுக்கு எதிராக, நீதிபதி விமலா எப்படி நேர்மையாக வழக்கை விசாரிப்பார் என்பதுதான், தினகரன் அணியின் அதிருப்திக்குக் காரணம்!’’

“ஓஹோ!”

“தினகரன் அணியினரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருக்கு இங்குள்ள அரசியல் நிலையும், நீதிமன்ற நடவடிக்கைகளும் அத்துப்படி! அதனால், தினகரன் தரப்பு வாதத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மனுவில் இருந்த பல வாசகங்களை மாற்றச்சொல்லிக் கடுமை காட்டினார்.  தினகரன் தரப்பினரின் வழக்கறிஞர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொடுத்தார். பிறகுதான், நீதிபதி விமலா மாற்றப்பட்டார்.’’

“சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளாரே?”

“எல்லாம் உமது நிருபர்களின் கைங்கர்யம்தான். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். சிலைக்கடத்தல் விஷயங்கள், அதுதொடர்பாக பொன்.மாணிக்கவேல் டீமுக்கு ஏற்படும் பிரச்னைகள் என உமது நிருபர்கள்தான் மோப்பம் பிடித்தபடி உள்ளனரே. குறிப்பாக, சில இதழ்களுக்கு முன்பாக பொன்.மாணிக்கவேலுக்கு உயர் அதிகாரிகள் உள்பட தமிழக அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் குடைச்சல்கள் குறித்து உமது நிருபர்கள் விரிவாகவே எழுதியிருந்தனர். இந்நிலையில்தான், கோர்ட்டில் கொந்தளித்துவிட்டார் பொன்.மாணிக்கவேல். மதுரையில் சிலைக்கடத்தல் வழக்கை விசாரித்த அதிகாரி, திடீரென விடுப்பில் போய்விட்டார். தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலையை மீட்ட அதிகாரிகளில் ஒருவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதெல்லாம் விசாரணையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்யப்படுகின்றன என்பது அவரது வாதம். விசாரணை டைரி, ஆவணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆனால், அவருக்குத் தேவையான தகவல்களைத் தரமறுத்துள்ளனர். இதனால்தான், நீதிமன்றத்தில் மொத்தமாகக் குமுறியுள்ளார்.”

“ஏன் அவருக்கு இத்தனை முட்டுக்கட்டைகள்?”

“அறநிலையத் துறையில் முன்னாள் ஆணையராக இருந்தவர் தனபால். இவர் மன்னார்குடி குடும்ப லாபி மூலம்தான் அறநிலையத்துறை ஆணையர் பதவியைப் பெற்றாராம். குறிப்பாக, அந்தக் குடும்பத்தின் இளையவர் ஒருவருடன் தனபாலுக்கு மிகுந்த நெருக்கம். ஒரு கட்டத்தில் தனபால்மீது ஜெயலலிதாவுக்குக் கோபம் வந்தபோதுகூட, அவரைக் காப்பாற்றியது அந்த இளையவர்தானாம்.’’

“ஓ… கதை அப்படி போகிறதா?”

‘‘ஆனால், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலிடம் யாருடைய பாச்சாவும் பலிக்கவில்லை. விசாரணையில் புகுந்து விளையாடியதில், இந்து அறநிலையத்துறை விவகாரங்களும் சேர்ந்து வெளியில் வர ஆரம்பித்தன. அதில் ஒன்றுதான் பழனி முருகன் சிலை விவகாரம்! அதில் நடந்த மோசடிகளில் தனபால் சிக்கித் தலைமறைவாகிவிட்டார். அவரைக் காப்பாற்றும் வேலையை, தற்போது ஆளும் கட்சி மேலிடத்துடன் சமரசப் போக்கில் இருக்கும் மன்னார்குடி இளையவர் இறங்கியிருக்கிறாராம். இதேபோல், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர் அறநிலையத்துறை பணிகளில் செய்த மோசடிகள், சிலைக் கடத்தல் வழக்குகளில் தேசியக் கட்சியைச் சார்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவருக்கான தொடர்பு எனப் பல விவகாரங்களையும் கையில் எடுத்துள்ளார் பொன்.மாணிக்கவேல். கொள்ளைக்காரர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்காக, எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆளும் கட்சிக்கு வந்த அழுத்தம்தான், பொன்.மாணிக்கவேலுக்கு டார்ச்சராக மாறிக்கொண்டுள்ளது.”

“அடுத்து என்ன நடக்கும்?’’

“பொன்.மாணிக்கவேல் வருகிற நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறப்போகிறார். இப்படி டார்ச்சர் கொடுத்துக் கொடுத்து நான்கு மாத காலத்தைக் கடத்தினால், அதன்பிறகுத் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை வைத்து வழக்குகளை ஊத்தி மூடிவிடலாம் என்பதுதான் திட்டம்! ஆனால், அது நடக்குமா என்று தெரியவில்லை. காரணம், ஏற்கெனவே, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில்தான் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வருகிறார் பொன்.மாணிக்கவேல். அவரிடமிருந்து வழக்குகளை மாற்றுவதற்கு தமிழக டி.ஜி.பி. போட்ட உத்தரவையும் நீதிமன்றம் நீக்கிவிட்டது. எனவே, முழுச் சுதந்திரத்துடன் பொன்.மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறார். பதவிக்காலம் முடிந்துவிட்டாலும், பதவியை நீட்டிக்கச் சொல்லிக்கூட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பிருக்கிறது”

“சரி, சேகர் ரெட்டிமீது சி.பி.ஐ பதிவுசெய்த மூன்று எஃப்.ஐ.ஆர்-களில் இரண்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறதே!”

“2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அடுத்த மூன்று நாள்களில் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டுகள் சூறாவளியாக நடந்தன. வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு என்று வரிசையாக வந்து சேகர் ரெட்டியையும் அவரின் கூட்டாளிகளையும் சல்லடை போட்டுத் துளைத்தன. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டி தரப்பிலிருந்து 34 கோடி ரூபாய் மதிப்புக்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில்தான் வழக்குகளும் பதிவாகின. சேகர் ரெட்டி 87 நாள்கள் புழல் சிறையில் இருந்தார். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், அவ்வளவு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள், வங்கிகள் மூலம்தான் சேகர் ரெட்டிக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பது அரசுத் தரப்பின் வாதம். ஆனால், எந்த வங்கியிலிருந்து, எத்தனை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்குக் கிடைத்தன; அதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் யார் என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை”

 

“அது சரி, எஃப்.ஐ.ஆர்களை நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது என்கிற கேள்விக்குப் பதில் இல்லையே?”

“வருகிறேன் ஐயா… கொஞ்சம் பொறும். சேகர் ரெட்டியின் சென்னை வீடு, வேலூர் வீடு, அவரின் நண்பர் வீடு என மூன்று இடங்களில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது. மொத்தமாகச் சேர்த்துக் கணக்கு காட்டிய சி.பி.ஐ அதிகாரிகள், எப்.ஐ.ஆரை மட்டும் ஒவ்வொரு தொகைக்கும் ஒன்று எனத் தனித்தனியாகப் பதிவுசெய்தனர். அதைத்தான் தற்போது சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் ரத்து செய்துள்ளார். அனைத்தையும் ஒரே எஃப்.ஐ.ஆர் மூலமாகவே விசாரிக்கலாம் என்றும் கூறிவிட்டார். ஊழல் தடுப்புச் சட்டத்திலும் சேகர் ரெட்டிமீது வழக்கு இருந்தது. ஆனால், சேகர் ரெட்டி பொது ஊழியரோ அல்லது அரசாங்க ஊழியரோ இல்லை. அப்படியிருந்தும், ஊழல் தடுப்புப் பிரிவுகளில் வழக்குப் போட்டதற்குக் காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் அரசாங்க ஊழியர்கள் என்பதால்தான். ஆனால், இப்போதுவரை ஒரு வங்கியும் அடையாளம் காணப்படவில்லை. ஒரு வங்கி அதிகாரியும் கைது செய்யப்படவில்லை’’ என்று நிறுத்திய கழுகார்,

“அது ஏன்? உம்மிடம் பதிலிருக்கிறதா?” என்று கேட்டார்.

‘‘இதில் என்ன பெரிய சஸ்பென்ஸ். அன்றைக்கு, ஓ.பன்னீர்செல்வத்தைத் தங்களின் பிடிக்குள் கொண்டுவருவதற்காக மத்தியில் ஆளும் பி.ஜே.பி தரப்பு, திட்டங்களைத் தீட்டியது. அதற்காகவே அவரின் நண்பரான சேகர் ரெட்டி வளைக்கப்பட்டார். அப்போதைக்குக் கடுமையாக மிரட்ட வேண்டும் என்பதற்காக வழக்குகளைப் பாய்ச்சினார்கள், வழக்கம்போல ஓட்டைகளை வைத்து. தற்போது காரியம் முடிந்துவிட்டது. இனி, ஓட்டைகள் வழியாக, ஒவ்வொன்றிலிருந்தும் சேகர் ரெட்டி சூப்பராக வெளியில் வந்துவிடுவார். அவ்வளவுதானே!’’ என்று நாம் சிரிக்க… உர்ரென்று முறைத்த கழுகார்,

‘‘ஏது ஏது… உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டே ஓவராக மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிட்டீர் போலிருக்கிறது. எனக்கும் கொஞ்சம் விட்டு வையும்’’ என்று சொல்லிச் சிரித்தபடியே சிறகை விரித்தார்.

Advertisements
%d bloggers like this: