Advertisements

ஓராண்டில் ஜி.எஸ்.டி சாதகங்கள்… பாதகங்கள்!

சூரத் நகரம், இந்தியாவிலேயே ஜவுளி உற்பத்திக்குப் புகழ்பெற்றது. இங்கு தயாராகும் ஜவுளிகளை மொத்தமாக வாங்கி, நாடு முழுக்க வியாபாரம் செய்பவர்கள் பல லட்சம் பேர். ஆனால், 2016, ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரியானது நடைமுறைக்கு வந்த இந்த ஓராண்டில் சூரத்தின் ஜவுளி விற்பனை பெருமளவில் சரிந்திருக்கிறது. பல விசைத்தறித் தொழிற்கூடங்கள் நசிவடைத்து மூடப்பட்டுள்ளன. ஜவுளி மொத்த வியாபாரம் நடைபெறும் கடைத்தெருக்கள் இப்போது மக்கள் நெருக்கடியில்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இங்குள்ள சிந்தெடிக் டெக்ஸ்டைல் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்திக்குப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான நூலுக்கும், ஜாப் வொர்க்கிற்கும் 18% ஜி.எஸ்.டி-யும், டிரேடிங்கிற்கு 5% ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்பட்டதுதான் சூரத் நகரத்தின் தொழில் சிதைந்துபோனதற்குக் காரணம். இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளான விசைத்தறி தொழில்முனைவர்களின் பலத்த எதிர்ப்பிற்குப்பிறகு நூலுக்கு 12%, ஜாப் வொர்க்கிற்கு 5% என ஜி.எஸ்.டி திருத்தப்பட்டது. எனினும், நசிவடைந்த தொழிற்சாலைகள் மேம்பட இது போதுமானதாக இல்லை.
சூரத் நகரில், சிறு மற்றும் குறு ஜவுளி வியாபாரிகள் 75,000 பேர். அதாவது, மொத்த வியாபாரிகளில் 90% பேர் இருக்கிறார்கள். இவர்களின் விற்பனையானது 40% சரிந்துள்ளது. அதேபோல, இங்கே புகழ்பெற்று விளங்கிய வைர வியாபாரமும் ஜி.எஸ்.டி-க்குப் பிறகு குறைந்துபோனது. வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டார்கள்.

தவிக்கும் திருப்பூர்

சூரத் மட்டுமல்ல, தமிழகத்தின் திருப்பூரிலும் சிறிய அளவில் தொழில் நடத்துபவர்கள் ஜி.எஸ்.டி வரியால் நசிந்துபோயிருக்கிறார்கள். டாலர் சிட்டி, ஏற்றுமதி நகரம் என்றெல்லாம் புகழப்படும் திருப்பூர், பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முன்னணி நகரமாகத் திகழ்கிறது. இங்குள்ள காதர்பேட்டை ஏரியாவில் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், லூதியானா, ஜபல்பூர் என இந்தியாவின் பல்வேறு ஊர்களிலிருந்தும் துணி வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று வியாபாரம் செய்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப் பிறகு தற்போது அந்த வீதியே களையிழந்து காணப்படுகிறது. மாதாமாதம் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவர்கள், தற்போது அதில் பாதியளவே வியாபாரம் செய்கிறார்கள். தோராயமாக 1,200 கடைகள் இருந்த இந்த விற்பனை வீதியில், கடந்த ஆறு மாதங்களில் 300 கடைகள்வரை மூடப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதன் காரணமாக, தோராயமாக 10,000 முதல் 15,000 பேர் வரை வேலை இழந்துள்ளதாகச் சொல்கிறார்கள் இங்கு கடை வைத்திருப்பவர்கள்.
சாதகங்கள் பல
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த ஓராண்டு காலத்தில் இப்படிப் பலரும் பலவிதமான பாதகமான சம்பவங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க, இந்த வரியினால் சாதகமான பல நல்ல விளைவுகளும் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
அதிகரித்த வரி வருமானம்
முன்பு பல்வேறு வரிகள் இருந்தபோது அரசின் வரி வருமானம் என்பது பொத்தம்பொதுவாக இவ்வளவு வந்தது என்கிற ஒரு தொகையைத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபின்பு, இதன்மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களுக்குக் கிடைக்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த ஓராண்டு காலத்தில் கிடைத்த வரி வருமானம், குறைந்த அளவாகக் கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.80,808 லட்சம் கோடி இருந்தது. பிற்பாடு இது மெள்ள மெள்ள உயர்ந்து, கடந்த ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடியை அடைந்து சாதனை படைத்தது. கடந்த நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடி ஜி.எஸ்.டி மூலம் வரி வசூலானது. இதில் மாநில அரசுகள்மூலம் வந்த ஜி.எஸ்.டி வரி வருமானம் ரூ.2.91 லட்சம் கோடி. 
அதிகரிக்க வரித் தாக்கல்
முன்பு பல்வேறு வரிகள் இருந்தபோது, பலரும் வரியும் கட்டாமல், வரித் தாக்கலும் செய்யாமல் தொழிலை நடத்திவந்தனர். இவர்களிடமிருந்து வரியை வாங்குவதற்கு மத்திய, மாநில அரசாங்கள் படாதபாடு படவேண்டி யிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபிறகு, வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. முன்பு வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் 36 விஷயங்களைப் பூர்த்தி செய்யவேண்டும்.
ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபிறகு வெறும் 12 விஷயங்களைப் பூர்த்தி செய்தாலேபோதும் என்பதால்,         ஜி.எஸ்.டி வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வருவதற்குமுன் 60-65 லட்சம் பிசினஸ் நிறுவனங்களே வரி செலுத்துவதற்காக வரித் துறையின்கீழ் பதிவு செய்திருந்தன. ஆனால், ஜி.எஸ்.டி வந்தபிறகு 1.11 கோடி பிசினஸ் நிறுவனங்கள் வரித் துறையின்கீழ் பதிவு செய்துள்ளது மிகப் பெரிய வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
லஞ்சம் ஒழிந்தது
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன்பு ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்குப் பொருள்களைக் கொண்டுசெல்லும்போது சோதனை மையங்களில் நிறைய லஞ்சம் தரவேண்டியிருந்தது. இதனால் தொழில் நிறுவனங்களின் லாபம் குறைந்ததுடன், அந்த லாபத்தை சரிகட்ட பொருளின் விலையை உயர்த்தவேண்டியிருந்தது. இதன் காரணமாக மக்கள் அதிக விலை தந்து, பொருள்களை வாங்க வேண்டியிருந்தது. ஜி.எஸ்.டி-க்கு வந்தபிறகு இந்தச் சோதனைச் சாவடிகள் செயல்படாமல் போய்விட்டதால், லஞ்சம் என்கிற பேச்சு இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகரித்திருக்கிறது.
நிறைய மாற்றம் வேண்டும்
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த ஓராண்டு காலத்தில், அது பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. முன்பு முக்கியமான பல பொருள்கள் 28% என்கிற வரி வரம்புக்குள் இருந்தன. அவற்றில் பல பொருள்கள் அந்த வரி வரம்பிலிருந்து நீக்கப்பட்டு, 18% என்கிற வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்துகிற  பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியானது இன்னும் குறைக்கப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி வரியைத் தாக்கல் செய்வது இன்னும்கூட கடினமானதாக இருப்பதாகவே பல வணிகர்களும், தொழில் துறையில் இருப்பவர்களும் கருதுகிறார்கள். பெரிய அளவில் தொழில் செய்பவர்கள், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் என்கிற பாகுபாடு எதுவும் இல்லாமல் இந்த வரியை எல்லோரும் எளிதில் தாக்கல் செய்கிறமாதிரி பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றங்கள் எல்லாம் இனிவரும் காலத்தில் செய்யப்படும்பட்சத்தில் ஜி.எஸ்.டி வரியினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறையும். இதனால் இன்னும் அதிகமானவர்கள் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் வருவார்கள். இதன் மூலம் நமது பொருளாதாரம் வேகமான வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை!

Advertisements
%d bloggers like this: