Advertisements

இன்னும் 30 நாள்கள்தான்… டாக்ஸ் ஃபைலிங் செய்யத் தயாராகுங்கள்!

தோ இந்த ஜூலை மாத முடிவில் நாமெல்லோருமே வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்தாக வேண்டும். கடந்த மார்ச் மாத முடிவிலேயே நம்மில் பலரும் வருமான வரியைக் கட்டியிருப்போம். அதற்கான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய கடைசித் தேதி வரும் 31.07.2018.

இழப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்

இந்தத் தேதிக்குள் நாம் வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறினால் பலவிதமான இழப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். என்னென்ன இழப்புகள்?

* 31.07.2018-க்குள் செய்ய வேண்டிய வரிக் கணக்குத் தாக்கலை தாமதமாக செலுத்தினால் அபராதம் கட்ட வேண்டும்.

* 01.08.2018க்கு பிறகு 31.12.2018 வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள், அபராதமாக ரூ.5,000 கட்ட வேண்டியிருக்கும்.

* 01-01-2019 க்கு பிறகு 31.03.2019-க்குள் தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். தவிர, தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் குறையோ, பிழையோ இருக்குமானால், அதனைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. மேலும், தாமதமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு பிரிவு 80-ன்கீழ் உள்ள வரிச் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும். இத்தனை இடர்பாடுகளையும் தவிர்ப்பதற்கான ஒரே வழி வருகிற 31.07.2018-க்குமுன்பே வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்துவிடுவதுதான்.

தாக்கல் முக்கியம்

அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என பலரும், வருமான வரியை முறையாகச் செலுத்தி யிருந்தபோதிலும் வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யத் தவறவிட்டுவிடுகிறார் கள். வரி செலுத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வது. இந்த அடிப்படை உண்மையைச்  சிலர் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

வருமான வரித் துறையின் சமீபத்திய நடவடிக்கைகளால் வரிக் கணக்குத் தாக்கல் பற்றிய விழிப்பு உணர்வு தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஆண்டிலேயே 1.07 கோடிப் புதியவர்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். இன்னும்கூட 65 லட்சம் பேர் வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யாமலே இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது வருமான வரித் துறை. அவர்களை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. வருமான வரித் துறை அதிகாரிகள் நம்மைத் தேடி வந்து, வரி கட்டச் சொல் வதைவிட, நாமே வரி கட்டி விட்டு, வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிடுவது நல்லது.  சரி, வரிக் கணக்குத் தாக்கல் செய்ய எப்படித் தயாராவது?

மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) 2018-2019

நாம் ஒவ்வொருவரும் வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். வருமான வரி பற்றிய அடிப்படைத் தகவல் களை ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது வருமான வரித் துறை. அந்த வகையில், ஒவ்வொரு நிதியாண்டும் (Financial year) அதற்கு முந்தைய நிதியாண்டின் மதிப்பீட்டு ஆண்டாக (Assessment year) இருக்கும் என்பதே வருமான வரி பற்றிய அடிப்படைத் தகவல். இந்த நியதியின்படி, 2017-18 நிதியாண்டுக்கான வரி கணக்குத் தாக்கலை 2018-2019-ல் செய்கிறோம்.

சம்பளக்காரர்களுக்கான படிவம் 1

தற்போது ஏழு விதமான படிவங்கள் உள்ளன. அவற்றுள் சம்பளம் அல்லது பென்ஷன் மூலம் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் மற்றும் ஒரு வீட்டு வாடகை வருமானம் + இதர வருமானம் உள்ளவர்களுக்கு உரியது ஐ.டி.ஆர் படிவம் 1 (சஹாஜ்). எனவே, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட சம்பளதாரர்களில் பெரும்பான்மையினருக்கு இதுவே படிவம்.

சம்பளம் மற்றும் பென்ஷன்

இங்கு அவசியம் குறிப்பிட வேண்டிய தகவல்கள் என்று பார்த்தால், அடிப்படை ஊதியம் (Basic Pay), சிறப்பு ஊதியம் (Spl.pay) தனி ஊதியம் (personal Pay) தர ஊதியம் (Grade pay) ஃபீஸ், கூலி (wages) போனஸ் முதலானவை.

2017-2018-ல் ஓய்வுபெற்றவர்களுக்கு இந்த இனங்களுடன் அடிப்படை ஓய்வூதியம் (Basic pension) சேர்க்கப்பட வேண்டும். 2017-2018-க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் மட்டும் சொன்னால்போதும். 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் (Addisional pension) பெறக்கூடும். அதுவும் சேர்க்கப்பட வேண்டும்.

படிகளுக்கு வரிவிலக்கு உண்டா?

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருக் கும் பொதுவான படிகள் பற்றி பார்ப்போம்.

1. வீட்டு வாடகைப்படி

2. அகவிலைப்படி

3. மருத்துவப்படி

4. நகர ஈட்டுப்படி (பெருநகரங்களில் பணிபுரி வோர்க்கு மட்டும்)

இவற்றுள் வீட்டு வாடகைப்படிக்கு மட்டுமே பகுதி அளவாகவோ, முழுமையாகவோ வரி விலக்குக் கிடைக்கும். இதர மூன்று படிகளும் முழுமையாக வரிக்கு உட்படும். (வீட்டு வாடகைப் படி தவிர, மேலும் 25 வகையான படிகள் வரிவிலக்கு பெற்றவை. அவை அவரவர் பதவி மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்தவை)

2. வீட்டுச் சொத்து வருமானம்

பூர்வீகமாகச் சொந்த  வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஊழியர்களுக்குப் படிவம் 1-ல் எதுவும் சொல்லத் தேவையில்லை. கடன் வாங்கிக் கட்டிய வீட்டில் குடியிருப்பவர்கள் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டிருப்பவர்கள் மட்டுமே அது குறித்துச் சொல்ல வேண்டும்.
 
3. இதர வருமானம்

வட்டி வருமானம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இதன்கீழ் வருமானமாகக் காட்ட வேண்டும். பணியில் இருந்துகொண்டு சம்பளம் வாங்குபவர்களும் ஓய்வுபெற்று பென்ஷன் வாங்குபவர்களும் குடும்ப ஓய்வூதியம் பெற வாய்ப்புண்டு. ஓராண்டு குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.15,000 வரிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகைத் தொகை போக நிகரத் தொகையானது இதர வருமானமாக இருக்கும். அந்தத் தொகை இந்தப் படிவத்தில் காட்டப்பட வேண்டும்.

என்னென்ன வரிச் சலுகைகள் கிடைக்கும்?

*வீட்டுக் கடன் மீதான வட்டிக்குப் பிரிவு 24-ன் படியான அதிகபட்ச வட்டிச் சலுகையான ரூ.2 லட்சத்துடன், பிரிவு 80EE-யின்படி மேலும் ரூ.50,000 வட்டிச் சலுகையும் கிடைக்கும். ஆனால், இதற்கான வீட்டுக் கடன் 2016-2017-ல் பெறப் பட்டிருக்க வேண்டும்.

*பிரிவு 80TTA-யின்படி, சேமிப்புக் கணக்குமீது கிடைக்கும் வட்டியில் ரூ.10,000 வரிச் சலுகை கிடைக்கும். என்றாலும், பிப்ரவரி மாதச் சம்பளத்துடன் நிதியாண்டுக்கான வரியைக் கணக்கிட்டு இறுதி செய்தபோது, கடைசிக் காலாண்டுக்கு மார்ச் 2018-ல் வரவு வைக்கப்பட்ட வட்டி தெரிய வந்திருக்காது. அதனை இப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

*வீட்டுக் கடன் மீதும், வட்டி மீதும் வரிச் சலுகை பெறுபவர்கள் அதுபற்றிய விவரம் பணிப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*கருவூலப்பட்டியலில் டி.டி.எஸ் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி இதுவரை 26AS கணக்கில் கொண்டுவரப்படாமல் இருந்தாலும், அதனைக் கணக்கிட்டு வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். விடுபட்ட வரியைப் பின்னர் சரிசெய்துகொள்ளலாம். இதற்காக வரிக் கணக்குத் தாக்கலைத் தாமதப் படுத்த வேண்டியதில்லை.

*வருமான வரியை உபரியாகச் செலுத்தி விட்டால் அதனைத் திரும்ப (Refund) பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குறைவாகச் செலுத்தியிருந் தால் வட்டியும் செலுத்த நேரிடும்.

ரூ.2.5 லட்சம் என்ற வருமான வரம்பைத் தாண்டியவர்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆடிட்டர் ஒருவரை அணுகினால், சிறிது  செலவு என்றாலும், வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டு, நிம்மதியாக இருக்கலாமே!


கடந்த ஆண்டுகளுக்கான வரித் தாக்கல்… சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!

‘இத்தனை வருடங்களாக வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யவில்லை. இப்போது போய் புதிதாக வரித் தாக்கல் செய்தால் பிரச்னை வருமோ’ என்ற குழப்பம் ஏற்படுவது இயல்பு. பிரச்னைக்குப் பயந்து கொண்டு இதற்கு மேலும் வரித் தாக்கல் செய்வதைத் தவிர்க்க நினைப்பது, வலிக்குப் பயந்து அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடுகிற கதையாகி, கடைசியில் ஆபத்தில் போய் முடிந்துவிடும். எனவே, தயக்கமின்றி கடந்த காலங்களுக்கும் சேர்த்தேகூட வரிக் கணக்கினைத் தாக்கல் (வரி செலுத்த வேண்டியிருந்தால், அதையும் செலுத்தி) செய்துவிடுவது அவசியம்.

ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்துக்கு உட்பட்டிருந்தால், அதிகபட்ச அபராதம் ரூ.1,000 மட்டுமே என்பது கவனிக்கத்தக்க விஷயம். வருமான வரித் துறை விதிக்கும் அபராதத் தொகையானது, செலுத்த வேண்டிய வரிக்கு உட்பட்டதாகவே இருக்கும். அப்படிப் பார்த்தால், வருமானம் எவ்வளவாக இருந்தாலும் வரிக் கணக்குத் தாக்கல் போக நிகர வரி ‘பூஜ்யம்’ என்று இருக்குமேயானால், அபராதத் தொகையும் பூஜ்யமாகவே இருக்கும். (இந்தச் சலுகை வருமான வரித் துறையின் முடிவைப் பொறுத்தது) எனவே, இனியும் தயங்காமல் தாமதிக்காமல் கடந்த ஆண்டுக்கான வரிக் கணக்கையும் தாக்கல் செய்வது நல்லது!


வரிக் கணக்குத் தாக்கல்… அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டியவை!

ரசு ஊழியர்கள் செலுத்தும் ஜி.பி.எஃப் சந்தா, சி.பி.எஸ் சந்தா, குடும்பப் பாதுகாப்பு நிதிச் சந்தா, எஸ்.பி.எஃப் சந்தா, அஞ்சலக ஆயுள் காப்பீட்டு (பி.எல்.ஐ.) சந்தா, நியூ ஹெல்த் இன்ஷூரன்ஸ் சந்தா, அரசு மூலம் பெற்ற வீட்டுக் கடன் மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்பட்டிருக்கும். எனவே, 1.4.2017 முதல் 31.3.2018 முடிய பணமாக்கப்பட்ட சம்பளப் பட்டியல்களில் பிடித்தம் செய்யப்பட்ட மேற்படி இனங்களைச் சலுகைக் கணக்கில் கொண்டு வந்துவிடலாம். ஆனால், இன்ஷூரன்ஸ் பிரிமீயம், வங்கி முதலானவற்றின் மூலம் பெற்ற வீட்டுக் கடன், கல்விக் கடன் வட்டி, தொழில் வரி முதலானவற்றைப் பொறுத்தவரை, அவை 1.4.2017-க்கும் 31.3.2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும்.

குறிப்பிட்ட இந்தத் தேதிகளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தொகை செலுத்தப்பட்டிருந்தால், அந்த இனங்கள் 2017-2018 நிதியாண்டுக்கு வரிச் சலுகை கிடைக்காது. எனவே, அந்தத் தொகைக்கு உரிய வருமான வரி மற்றும் கல்வித் தீர்வையைச் செலுத்திவிட்டு வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். 80 gg-யின்படி வாடகைக்குத் தரப்படும் வரிச் சலுகை அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது. இது வீட்டு வாடகைப்படி பெறாதவர்களுக்கு உரியது. அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி பெறுகிறார்கள். அல்லது அரசுக் குடியிருப்பில் வசிக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம்.

Advertisements
%d bloggers like this: