இருசக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?

பொதுவாக இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண், பெண் இருவருக்கும் முதுகுத்தண்டில் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால்  நீண்ட நேரம் இருசக்கர வாகனத்தை பயன் படுத்துவதால் பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,  அதற்கான எளிய தீர்வுகள் குறித்து பேசுகிறார் உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாசுந்தரம்.“பெண்களுக்கு இயற்கையாகவே  கர்ப்ப காலம் மற்றும்  மாதவிடாய் பிரச்சனையினால் முதுகு வலி ஏற்படும். தொடர்ந்து அவர்கள் வாகனம் ஓட்டும்  போது அதன் வீரியம் அதிகமாகும். ஏனென்றால் நாம் இருசக்கர வாகனம் ஓட்டும்போது நேராக அமர்ந்து ஓட்டுவது  கிடையாது. வளைந்தபடியே வண்டி ஓட்டுவதால் இடுப்பு எலும்பு பாதிக்கப்படுகிறது. முடிந்தவரை நிமர்ந்தபடி வாகனம்  ஓட்ட வேண்டும். இந்த இடுப்பு எலும்பு பகுதியில்தான் கர்ப்பப்பை, சினைப்பை இருக்கிறது. அந்த இடம் வலுவாக இல்லை என்றால்  முதுகுத்தண்டில் வலி ஏற்படும். இந்த முதுகுத்தண்டு பகுதியில் 5 தட்டுகள் உள்ளன. இதில்தான் பெண்களுக்கு  பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில்  அங்குதான் அதிகமான வலி ஏற்படும். இந்த தட்டுகள் வலுவாக இருந்தால் மட்டுமே கர்ப்பகாலங்களில் எலும்புகள்  விரிவடைந்து சுகப்பிரசவம் நடைபெறும்.

இன்றைய சூழலில் இருசக்கர வாகனத்திலேயே வேலைக்குச் செல்வதும், அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து  கொண்டே வேலை பார்ப்பதும் என உடலுழைப்பு குறைந்து விட்டது. இப்படி உடலுழைப்பு இல்லாமல் நீண்ட நேரம்  வாகனம் ஓட்டுவதால் இடுப்பு எலும்பு பகுதிகள் வலுவிழந்து கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. இது  மட்டுமல்லாமல் தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் சதை கூடுகிறது.  இடுப்பு மற்றும் கால்களில் வலு குறைந்து விடுகிறது. இதனால் வாகனம் ஓட்டும் போது சிறிய மேடு பள்ளத்தில்  செல்லும் போது அதனுடைய அதிர்வுகள் நேரடியாக இடுப்புப் பகுதியை பாதிக்கிறது.

இந்த பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கும், பிசியோதெரபி  சிகிச்சையையும் நாடுகிறார்கள். இவர்கள் இதையெல்லாம் தவிர்த்து விட்டு அன்றாடம் தன் வீட்டில் உள்ள  வேலைகளை தானே செய்து கொள்வது சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். . நம்முடைய வாழ்வியல் முறையில் நாம்  செய்து வந்த அன்றாட வேலைகளை இன்று வெளிநாட்டினர் உடற்பயிற்சியாக மாற்றி அதில் வருமானம் ஈட்டுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் 40 வயதை தொடும்போதே ெமனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு  குறைந்துவிடுவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து  ‘ஆஸ்டியோபொராசிஸ்’ தோன்றும். அதுவும் வலியை  அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். அதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள், அது தொடர்பான வலிகள்  ஏற்படுவதை தடுக்க தினமும் காலையில் அரை மணி நேரமாவது மூச்சு வாங்க  நடக்க வேண்டும். நாளொன்றும் 10  முறையாவது குனிந்து நிமிர வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது  தரையில் அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். இது போன்ற எளிமையான முறைகளை பின்பற்றினாலே இருசக்கர  வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் வலிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்”  என்கிறார்.

%d bloggers like this: