சிகரெட்டை நிறுத்த உதவும் சிகிச்சைகள்!

புற்றுநோயில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை வருகிறது என சிகரெட் அட்டையிலேயே எச்சரிக்கை வாசகங்களை  அச்சடித்தும் புகைப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. சிகரெட்டை நிறுத்துவதற்கு எலெக்ட்ரானிக் சிகரெட், நிகோடின் சூயிங்கம், கையில் ஒட்டிக்கொள்ளும் பேட்ச் என எத்தனையோ வழிகள் இருந்தும், அதை ஏன் நிறுத்த முடிவதில்லை?

பல ஆண்டுகளாக புகைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று நிறுத்துவது மிகவும் கடினமான விஷயம். மீண்டும் புகைப்பிடித்தலுக்கு தூண்டப்பட்டாலோ, முன் குடித்துக் கொண்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமாக பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சிகரெட்டை நிறுத்துவதைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபர் சுயமுனைப்புடனும் விருப்பத்துடனும் மட்டுமே செய்ய வேண்டும். புகைப்பதை நிறுத்தும்போது, மூளையானது பழகிய நிகோடினை கேட்கும்.
அதனால், நிகோடினை மட்டும் மூளைக்கு அனுப்பி அதனை திருப்தியுறச் செய்து, சிகரெட் புகைத்தலை தவிர்க்க செய்யும் சிகிச்சைக்கு Nicotine replacement therapy என்று பெயர். நிகோடின் சூயிங்கம், உடலில் ஒட்டிக் கொள்ளும் நிகோடின் பேட்ச் பயன்படுத்தியும் பயன் அடையலாம். சிகரெட் புகைக்கும் எண்ணம் வரும் நேரத்தில் நிகோடின் சூயிங்கத்தை வாயில் போட்டு மெல்லலாம். உடலுக்குத் தேவையான நிகோடின் இதன் மூலம் கிடைத்துவிடும். சிகரெட் பிடிக்கும் எண்ணம் குறையும்.
சிகரெட்டை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு வருபவர்களின் குடும்பச்சூழலையும் பணியிடச்சூழலையும் அறிந்து கொண்டுதான் அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நபருக்கு எதற்காக சிகரெட் தேவைப்படுகிறது, இப்போது எதற்காக விட நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டறிய வேண்டும். சிகரெட் பிடிக்கும் நேர இடைவெளியையும் அதிகமாக்கிக் கொண்டே வர வேண்டும்.
10 சிகரெட் குடிப்பது 5 சிகரெட்டாக குறையும். இப்படி மெல்ல சிகரெட்டுகளின் எண்ணிக்கை அளவை குறைத்து, ஒரு நாள் நிறுத்திவிட வேண்டும். சிகரெட்டை நிறுத்திய பின்னும், 6 மாத காலம் வரை, ‘மறுபடியும் பிடிக்கலாமா’ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதற்கு இடம் கொடுக்காமல் 6 மாத காலம் தாக்குப்பிடித்துவிட்டால், பிறகு சிகரெட் பக்கம் அவ்வளவு எளிதில் போக மாட்டார்கள்.
இதெல்லாம் பலன் அளிக்கவில்லையெனில் ஆன்டி டிப்ரஸண்ட் மாத்திரைகள் கொடுத்து, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தைப் போக்க முயற்சி செய்வோம். சிகரெட்டை நிறுத்த விரும்பும் நபர் மிகுந்த சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் எளிதாக இப்பழக்கத்தை விட்டு விடலாம். அதோடு, குடும்பத்திடமும் இது பற்றி தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மனநலம் சார்ந்த ஆதரவும் அவருக்குக் கிடைக்கும் !

%d bloggers like this: