Advertisements

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம்

வாழ்த்துகள், நீங்க அம்மாவாகப் போறீங்க…” என்று உறுதிப்படுத்தும் தருணம் உண்மையிலேயே உன்னதமானது. பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் ஏராளமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் பெண்ணுக்கானதாகவே இருக்கும். அப்படியானாால், பெண் கருவுற்ற காலத்தில் ஆண்களுக்குப் பொறுப்புகளோ, கடமைகளோ இல்லையா?

“நிச்சயமாக ஆணுக்கும் பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ரேகா சுதர்சன்.

“ஒரு பெண் தாயாகும்போது எப்படி உணர்கிறாரோ, அப்படித்தான் ஆணும் உணர்கிறார். பெண் கருவுற்ற காலத்தில், அந்தப் பெண்ணைவிட அதிகப் பொறுப்பு ஆணுக்குத்தான் இருக்கிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மனைவியின் தேவைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்தில் இப்படியான அரவணைப்பு பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. பல ஆண்கள், கர்ப்ப காலம் தொடர்பான விஷயங்களை ஏற்கெனவே இணையத்தில் தேடித் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மனைவியை அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக பயப்படுவார்கள் என்பதால், அவர்களை அக்கறையுடன் கவனித்து தைரியமூட்ட வேண்டும். அக்கறையான ஆண்களுக்கும்கூட குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. உதாரணமாக, குழந்தை ஏன் அழுகிறது, எப்போது பசி எடுக்கும் என்றெல்லாம் தெரியாது. இரண்டாவது குழந்தை என்றால், இரண்டு குழந்தைகளையும் சேர்த்து எப்படிச் சமாளிப்பது என்பதும் தெரியாது.

 

இவற்றையெல்லாம் எதிர்கொள்ள, மனைவி கர்ப்பமான நாள் முதல் அனைத்து மாற்றங்களுக்கும் மனதளவில் ஆண்கள் தயாராக வேண்டும். ‘பேட்டர்னல் போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்’ (Paternal Postnatal Depression-PPND) எனப்படும் உளவியல் பிரச்னை சில ஆண்களுக்கு ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ள ஆண்களை மனைவியுடன் உட்கார்ந்து மனம்விட்டு பேசச் செய்வோம். அடுத்தடுத்த சிகிச்சையில் உடல்நலம் குறித்த அறிவுரைகள் வழங்குவோம்…” என்கிறார் ரேகா சுதர்சன்.

கர்ப்ப காலத்தில் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று விரிவாகப் பேசினார் மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம்.

“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் `மார்னிங் சிக்னெஸ்’ பற்றிக் கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் சில மாதங்களுக்குக் குமட்டல் உணர்வு, வாந்தி, மனநிலையில் மாற்றங்கள் போன்றவை அதிகமாக ஏற்படும். அத்தகைய சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றை ஆண்களே ஏற்றுக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி, கால்வலி ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வலி உணர்வு அதிகமாகவே இருக்கும். எனவே, தினமும் இரவில் கால்களை அமுக்கி விடுவது, இடுப்பில் எண்ணெய் தடவி நீவி விடுவது, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது போன்ற எளிதான சிகிச்சைகளைச் செய்துவிடலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் பயணிக்கக்கூடாது. வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால் கார் போன்ற வசதியான வாகனங்களை ஏற்பாடு செய்து தரலாம்.

மனைவியின் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலர் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவார்கள். அப்படியில்லாமல் சரிவிகித அளவில் பேலன்ஸ்டு உணவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு அளவுக்கதிகமாகப் பசி எடுக்கும்; சிலருக்கு பசியே இருக்காது. பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடலாம். ஆனால், என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் தேவை. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள், காரசாரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மனைவி சாப்பிட வேண்டிய மாத்திரைகள் பற்றித் தெரிந்துகொண்டு, அந்தந்த நேரத்தில் சாப்பிடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.

பிரசவ வலி

கணவன்-மனைவி இருவரும் அனைத்து மனநல வகுப்புகளிலும் பங்கேற்க வேண்டும். முதல் குழந்தை என்றால் நிறைய சந்தேகங்கள் வரும். என்ன செய்வதென்றே தெரியாது. அவர்கள், பெற்றோருக்கான வகுப்புகளுக்குச் (Prenatal Preparation Classes) செல்வது நல்லது. அனைத்து மருத்துவமனைகளிலும், பிரசவ வலி வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சொல்லித்தரப்படுகிறது. நிஜமான பிரசவ வலி (Labour Pain) எப்படியிருக்கும், எது போலியான வலி (False Pain) என்பது பற்றியெல்லாம் சொல்லித்தரப்படும். வலி தொடர்ச்சியாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். எல்லாத் தருணங்களிலும் மனைவிக்கு உறுதுணையாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டும். குழந்தை பிறப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள தேதிக்கு முன்னரே, மருத்துவமனையில் தங்குவதற்கு தேவையானவற்றை `பேக்’ செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தனிமை

தாயின் தனிமை கருவையும் பாதிக்கும். எனவே, எந்தச் சூழலிலும் மனைவியைத் தனிமை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு அதிகப் பசி எடுக்கும். கேட்கக் கூச்சப்படுவார்கள். கணவன், மனைவி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் இப்பிரச்னையைச் சரிசெய்யலாம். வேலைக்குச் செல்லும் தம்பதிகள், குறைந்தபட்சம் காலை மற்றும் இரவு வேளைகளிலாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும். சிகரெட், மது பழக்கமுள்ள ஆண்கள் மனைவி மற்றும் குழந்தையின் நலன் கருதி அவற்றிலிருந்து மீண்டு வரவேண்டும். ஒவ்வொருமுறையும் மனைவி மருத்துவமனைக்குச் செல்லும்போது அவருடன் செல்ல வேண்டும். முடியாதவர்கள், குறைந்தபட்சம் வீட்டுக்கு வந்தவுடன் மருத்துவர் என்ன சொன்னார் என்பதைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

 

உடற்பயிற்சி

கர்ப்பிணிகளை உடற்பயிற்சி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. ஐந்தாம் மாதத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தால் கணவனும் கட்டாயம் இருக்கவேண்டும். கருவுற்ற நான்கு மாதத்திலிருந்து, கண்டிப்பாக உடல் அசைவு இருக்கவேண்டும். வாக்கிங், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம். சிலருக்கு வீட்டுவேலைகள் செய்ய ஆர்வம் இருக்கும். எதைச் செய்தாலும் அந்த நேரத்தில் கணவரும் உடனிருக்க வேண்டும். இது மனதளவில் தைரியத்தைத் தரும்.

ஏழாவது மாதம் முதல் எட்டாவது மாதம் வரை, கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி அதிகமாக இருக்கும். அப்போது என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யவேண்டும், எப்போது மசாஜ் செய்யவேண்டும், ஏழாவது மாதத்துக்குப் பிறகு ‘லேபர் எக்ஸர்சைஸ்’ எப்படிச் செய்யவேண்டும் என்பனவற்றைக் கணவர் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பின்பு செய்வதற்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான பெண்கள் அவற்றைச் செய்வதில்லை. குழந்தை பிறந்தபிறகும் ஃபிட்னெஸ் மீது அதிக அக்கறை காட்டவேண்டும். சுகப்பிரசவம் ஆனவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகும், சிசேரியன் என்றால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகும் உடற்பயிற்சிகளைத் தொடர வேண்டும்.

    ஓய்வு – உறுதுணை

கர்ப்ப காலத்தில் உடல்ரீதியாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான மாற்றங்களைக் கவனித்து, அரவணைப்போடு நடந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று வாரங்களுக்குச் சோர்வு, தலைச்சுற்றல் இருக்கும். இந்தச் சூழலில், அவர்களுக்குச் சில சுவைகள் மயக்கத்தை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றை முழுவதுமாகத் தவிர்த்துவிட வேண்டும். மிகவும் சோர்வாக இருந்தால், முழு ஓய்வில் விட்டுவிட வேண்டும்.

கடைசி சில வாரங்களில் (27 முதல் 40 வாரங்கள்) வயிற்றிலிருக்கும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் உடல் அசைவுகள் அதிகமாக இருப்பதால், அம்மாவுக்குப் பயம் ஏற்படக்கூடும். இத்தகைய சூழலில், கணவன் தன் மனைவிக்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் ஆண்கள் இரவில் சீக்கிரம் வீடு திரும்பி மனைவியுடன் நேரம் செலவழிக்க வேண்டும். உணவு, மாத்திரைகள், ஓய்வு, உடற்பயிற்சி என அனைத்திலும் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். உரிய நேரத்தில் எல்லாவற்றையும் செய்கிறார்களா என்றும் கவனிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

பிறக்கப்போவது ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ… எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் கடமை பெற்றோருக்கு உள்ளது. ‘வீ ஆர் ப்ரக்னென்ட்’ என்று சொல்லிப் பழகுங்கள். கருவில் காட்டிய அக்கறையைவிட, குழந்தை பிறந்தபிறகு அதிக அக்கறையும் கவனமும் தேவை. முடிந்தவரையில் குழந்தையின் அனைத்துத் தருணங்களையும் பதிவு செய்யுங்கள். கூட்டுக்குடும்பங்கள் பெருமளவில் குறைந்து வருவதால், பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். உங்கள் குழந்தைக்கு அப்படியான எந்தவொரு சிக்கலையும் கொடுக்காமல், உறவுகளின் தன்மையையும், மனிதர்களையும் கற்றுக்கொடுங்கள்.

ஹேவ் எ ஹேப்பி ப்ரெக்னன்சி!


 

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

* கர்ப்பமான முதல் மூன்று மாதம், உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல, நீண்டதூரப் பயணம் கண்டிப்பாக வேண்டாம்.

* 4 முதல் 6 மாதம் – உடலுறவு வைத்துக்கொள்ளலாம். பயணம் செய்ய விரும்புபவர்கள் ரயில் மற்றும் விமானப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

* 6 முதல் 9 மாதம் – இந்தக் காலக்கட்டத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால், சுகப்பிரசவமாகும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், விருப்பமும் மனோதிடமும் இருப்பவர்கள் ஈடுபடலாம். சுகப்பிரசவத்தை மனதில்கொண்டு சிரமப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது சிலருக்கு ரத்தப்போக்கை ஏற்படுத்தும்; சிலருக்கு வலியை ஏற்படுத்தும்.

சோதனைகளின்போது உடனிருங்கள்!

* மூன்றாம் மாதத்தின் முடிவில், ‘டவுன் சிண்ட்ரோம் ஸ்க்ரீனிங்’ (Down Syndrome Screening) எனப்படும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படும். கூடவே ரத்தப்பரிசோதனையும் செய்யப்பட்டு, வயிற்றில் வளரும் கருவுக்கு ஏதேனும்  குறைபாடுகள் இருக்கின்றனவா என்று கண்டறியப்படும். இந்தப் பரிசோதனையின்போது கணவரும் உடன் இருக்கவேண்டும்.

* நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவ்வப்போது அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் குழந்தையின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ளலாம்..

* ஐந்தாம் மாதத்தின் முடிவில், ‘டார்கெட் ஸ்கேன்’ என்ற ஒரு பரிசோதனை செய்யப்படும். குழந்தையின் உடல் வளர்ச்சியைக் கண்டறிய உதவும் மிக முக்கியமான ஸ்கேன் இது.

* ஆறாம் மாதம் தொடங்கும்போது, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆறாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், அதற்கான பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. இந்த எல்லாப் பரிசோதனைகளின்போதும் கணவன் உடனிருப்பது அவசியம்.


 

கணவர்கள் கவனத்துக்கு!

* சிறுநீர் பரிசோதனை மூலம் கருத்தரிப்பதை உறுதிசெய்தபிறகு  உடனடியாக மனைவியை  மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

* முதல் மூன்று மாதங்கள் எந்த மாத்திரையும் சாப்பிடக்கூடாது என ஒரு நம்பிக்கை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால், ஃபோலிக் அமிலத்துக்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மனைவி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறாரா என்று கவனிக்க வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: