Advertisements

களையெடுக்க காலா ரெடி!

ழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி… ‘நேரில் வரமுடியாத அளவுக்கு பிஸி!’ இதைத்தொடர்ந்து பத்தி பத்தியாக வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பித் தள்ளிவிட்டார்.
ரஜினி அலுவலகத்தில் நடந்த சர்ச்சைகளைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். அது இன்னும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் முடித்து, டார்ஜிலிங்கிலிருந்து சென்னை திரும்பிவிட்ட ‘காலா’ ரஜினி, இனி களையெடுப்பில் இறங்கப் போகிறாராம். சமீபத்தில், மன்றத்தின் முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்ட ராஜு மகாலிங்கம்கூட டம்மி ஆக்கப்படலாம் என்கிறார்கள். ‘‘ராஜு மகாலிங்கம், தி.மு.க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர். ஆரம்ப காலத்தில், டி.ஆர்.பாலு குடும்பத்தின் கப்பல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளைப் பார்த்தவர் ராஜு மகாலிங்கம். அது மட்டுமல்ல… மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடனும் நெருக்கமான பழக்கத்தில் இருக்கிறார். ரஜினி மன்றம் சார்பில் நடக்கும் வேலைகள் பற்றிய விவரங்கள் எல்லாம் தி.மு.க கூடாரத்துக்குப் போவதாக சில ஆதாரங்கள் ரஜினிக்குக் கிடைத்துள்ளன. அதனால்தான், ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அலுவலகத்தை உடனடியாக மூடச்சொன்னார் ரஜினி. சீக்கிரமே ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து பரபரப்பான அறிவிப்புகள் வெளியாகும்’’ என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.
ஊழல் புகார்களின் எதிரொலியாக, ‘மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் யாரும் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள மன்ற அலுவலகத்துக்குள் நுழையக் கூடாது’ என்று ரஜினி சொன்னதையடுத்து, யாரும் அங்கே வருவதில்லை. அதேபோல், யாரும் வெளியூர் டூர் போகவும் கூடாது என்று ரஜினி சொன்னதால், நிர்வாகிகள் சுற்றுப்பயணங்களை ரத்துசெய்துவிட்டனர். இதற்கு நடுவே, தனிக்காட்டு ராஜாவாக வெளியூர் டூர் போய்வருகிறார் டாக்டர் இளவரசன். ஏற்கெனவே, கடலூர் மாவட்ட மன்றப் பொறுப்பாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் என ரஜினி மன்றத்தில் மூன்று பதவிகளை வைத்திருக்கும் டாக்டர் இளவரசனுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க ரஜினி முடிவெடுத்துள்ளாராம். ‘‘நம்மள நம்பித்தானே அரசியலுக்கு வந்தாரு ரஜினி. அவரை, நம்ம ஆளுங்க சிலரே ஏமாத்துறாங்க. இந்தத் துரோகிகளை சும்மாவிடமாட்டேன்’’ என்று சூளுரைத்தபடி டூரில் இருக்கிறாராம் டாக்டர் இளவரசன். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிர்வாகிகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம். ஜூன் 14-ம் தேதியன்றுதான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுந்தர். அடுத்த இரண்டு நாள்களிலேயே மிரட்டல் கடிதம் வந்துவிட்டதாம். ஜூலை 8-ம் தேதிதான் விவகாரம் வெளியில் கசிந்து, தீவிர விசாரணை நடைபெறுகிறது. ‘‘அடிக்கடி இப்படி நீதிபதிகளுக்கு இதுபோல் மிரட்டல் கடிதமும், மிரட்டல் தொலைபேசி அழைப்பும் வருவது வழக்கம்தான். அவர்கள், அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். நீதிபதி சுந்தரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று, தலைமை நீதிபதியிடம் சொன்னார். அதன்பிறகுதான், போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டு, நீதிபதி சுந்தர் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’ என்கிறார்கள் உளவுத் துறையினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அரசுமுறைப் பயணமாக வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் இரு தரப்புமே தனித்தனியாக முயற்சி செய்தன. ஆனால், இரு தரப்புக்குமே தரிசனம் கிடைக்க வில்லை. முட்டை மற்றும் பருப்பு விவகாரத்தில் கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு நடக்கும் சூழலில், எடப்பாடி தரப்பைத் தனியாகச் சந்திப்பது தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பும் என்று அதைத் தவிர்த்துவிட்டாராம் வெங்கய்ய நாயுடு. முதல்வர் தரப்பைச் சந்திக்க மறுத்துவிட்டு, துணை முதல்வர் தரப்பை மட்டும் சந்தித்தால், அதை வைத்தே புதுப்புதுச் சர்ச்சைகள் கிளம்பிவிடும் என்பதால் அவரையும் சந்திக்க வில்லையாம். இரு தரப்புமே சந்திக்க நினைத்ததன் நோக்கம் அறிந்தே வெங்கய்ய நாயுடு தவிர்த்துவிட்டாராம்.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் குடியரசுத் துணைத்தலைவரைச் சந்திக்கவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதை விரும்பாமல், மிகக்கவனமாக தத்தமது நிகழ்ச்சி நிரல்களை அமைத்துக் கொண்டார்களாம். வெளிநாடு போன கவர்னர், ஜப்பானிலிருந்து ஜூலை 7-ம் தேதியே டெல்லி வந்துவிட்டார். ஆனால், சென்னை வரவில்லை. இந்தத் தேதிகளில்தான் தமிழகம், புதுச்சேரியில் பயணப்பட்டார் வெங்கய்ய நாயுடு. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்துக்குப் பிறகு, மத்திய அரசின் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருக்கிறாராம் புரோஹித். வெகுவிரைவில் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளருமான கெங்கப்பா என்பவரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம்.

  சட்டமன்றத்தில் மூன்று முக்கியக் குழுக்களுக்குப் புதிய நியமனங்கள் நடைபெற்றுள்ளன. அ.தி.மு.க-வைச் சேர்ந்த செம்மலை, இன்பதுரை, தோப்பு வெங்கடாசலம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்களும் பவர்ஃபுல்லான மூன்று குழுக்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பிரபல தொழிலதிபர் சக்திவேலுவின் தாயார் இறந்துபோனார். அவர் வீட்டுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக கேரள கவர்னர் சதாசிவம் போனார். சதாசிவம் அந்த வீட்டில் இருந்த நேரத்தில், டி.டி.வி.தினகரனும் துக்கம் விசாரிக்கப் போயிருக்கிறார். இவரை உள்ளே விடுவதா, வேண்டாமா? என்று போலீஸாருக்கு ஏகக்குழப்பம். ‘‘கேரள கவர்னர் உள்ளே இருக்கிறார்…’’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தயங்கித் தயங்கிச் சொல்ல, காரை விட்டு தினகரன் இறங்கவில்லை. ஆனால், அவருடன் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், ‘‘இவரு யாரு தெரியுமுல்ல… வருங்கால சி.எம்’’ என்று குரலை உயர்த்த, போலீஸார் ஒதுங்கிவிட்டனர். உள்ளே போன தினகரன், சக்திவேலுவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, உடனே கிளம்பிவிட்டார். அதுவரை வேறு ஓர் அறையில் சதாசிவம் அமர்ந்திருந்தாராம். 
  தமிழகத்தின் மூத்த மாண்புமிகு ஒருவருக்கு, தன் பெயருக்கு முன்பாக டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசை வந்துவிட்டது. இதற்காக சில பல்கலைக்கழகங்களை அணுகி, அவரின் சாதனைகளைப் பாராட்டிக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அழுத்தம் கொடுத்துள்ளனர் சிலர். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு விஷயம் தெரியவர, அவர் தடைபோட்டு விட்டாராம். 
ஏழு எம்.பி-க்கள், 10 எம்.எல்.ஏ-கள் சகிதம் வலம் வந்தவர், முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம். அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர், அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்… என முக்கியப் பதவிகளில் இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு, வைத்திலிங்கத்தின் நெருக்கமான உறவினர் ஒருவர் இறந்துபோனார். படத்திறப்பு விழாவுக்கு பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். கடைசியில், விழாவுக்கு வந்திருந்தது நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான். பலரும் அணி மாறிவிட்டதுதான் காரணமாம்.

  சட்டசபைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூலை 9-ம் தேதி லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. இதில், ‘லோக் ஆயுக்தா அமைப்புக்குத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வுசெய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் மட்டும்தான் இருப்பார்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறது. குழுவில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், மெஜாரிட்டியின் முடிவே இறுதியாகும். எனவே, தி.மு.க இதை எதிர்த்தது. ஆனால், எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது. கர்நாடகாவில் லோக் ஆயுக்தா தேர்வுக்குழுவில், முதல்வர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, சட்டசபை சபாநாயகர், மேலவை சபாநாயகர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய ஆறு பேர் அடங்கிய குழு உள்ளது. ஆளும் தரப்பு சார்பில் மூன்று பேரும், ஆளும்தரப்பைச் சாராத மூன்று பேரும் சம அளவில் இடம்பெற்றிருக்கின்றனர். இதேபோல, லோக் ஆயுக்தா தேர்வுக் குழு அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சட்டசபைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாதுகாப்புக்குப் புதிதாக ஒரு படை வந்தது. வி.எஸ்.ஜி எனப்படும் ‘வி.ஐ.பி செக்யூரிட்டி கார்டு’ வீரர்கள் இவர்கள். என்.எஸ்.ஜி படைக்குத் தேசப் பாதுகாப்பு பொறுப்புகள் இருப்பதால், வி.ஐ.பி-க்கள் பாதுகாப்புக்காக என்று தனியாக சி.ஆர்.பி.எஃப் போலீஸ் பிரிவிலிருந்து இந்தப் பாதுகாப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீரர்களின் உடையையும், இவர்கள் கைகளில் இருந்த நவீனத் துப்பாக்கிகளையும் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: