Advertisements

உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி!

செரிமான உறுப்புகள் மற்றும் சுரப்பிகளோடு சேர்ந்து, அஜீரணத் தொந்தரவுகளைத் தடுக்கும் அற்புத மருந்து இஞ்சி.  ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை இஞ்சியின் வேறு பெயர்கள். `காலையில் இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய்…’ என்பது எளிமையான ஆரோக்கியச் சூத்திரம். இப்படி, காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டால் உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது.

இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி, தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டால் நரை, திரை, மூப்பு சீக்கிரம் நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். இந்த ‘நரை திரை மூப்பு’ என்பதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அவிழ்ப்பதற்காக இஞ்சி சார்ந்து இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதன் முடிவுகளோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டு ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.

ஜப்பானில் புகழ்பெற்ற `பெனி-ஷோகா’ எனப்படும் சிவந்த நிறமுள்ள இஞ்சி ஊறுகாய்மீது, அந்நாட்டு மக்களுக்கு அலாதிப் பிரியம். நொதிக்கவைத்த காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் கொரிய வகை சாலட்டுகளில் இஞ்சி முக்கியமானது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் `ஜிஞ்சர்-பிரெட்’ என்கிற இஞ்சி ரொட்டிகள் பிரபலம். மியான்மர் நாட்டு மீன்கறியில், மீன் வாசனையைவிட, இஞ்சியின் வாசனை தூக்கலாக இருக்கும். அதிக அளவில் இஞ்சி சேர்த்து மீன்கறி சமைக்கும்போது, மீன்வாடை குறைவதாக மியான்மர் மக்கள் கருதுகின்றனர். ஜமைக்கா நாட்டின் ‘காரமான மசாலாப் பொடி’யில் இஞ்சி சேர்க்கப்படுகிறது.

பயணங்கள், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், புற்றுநோய் மருந்துகளின் தாக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் குமட்டல் உணர்வு ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கும் சில நேரம் இதே நிலை ஏற்படலாம். குமட்டல் உணர்வை நிறுத்த, பன்னெடுங்காலமாக நமது பாரம்பர்ய மருத்துவத்திலும், சீனா மற்றும் ரோமானிய மருத்துவத்திலும் பரிந்துரைக்கப்படும் மருந்து, இஞ்சிதான். குமட்டலைத் தடுக்க வழங்கப்படும் சில மருந்துகளால் ஏற்படும் நாவறட்சி, குழப்பம், சோர்வு போன்ற எவ்விதப் பக்கவிளைவுகளையும் இஞ்சி உண்டாக்காது. ‘வாஸோபிரஸ்ஸின்’ எனும் ஹார்மோன் சுரப்பைத் தற்காலிகமாகத் தடுத்து, பயணங்களில் உண்டாகும் குமட்டலை நிறுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்தில் முதன்முறையாக கப்பல் பயணம் செய்வோருக்கு, குமட்டலைத் தடுக்க அனுபவமுள்ளவர்கள் பரிந்துரைத்த முதன்மை மருந்து இஞ்சி.

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் எனும் வேதிப்பொருளுக்கு எதிர்-ஆக்ஸிகரணி, வீக்கமுறுக்கி, நுண்ணுயிர்க்கொல்லி எனப் பல செயல்பாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் சார்ந்த ஆய்வு களின் முடிவில், இஞ்சியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ’ஜெரும் போன்’ எனும் பொருள், புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணுவைத் தூண்டுவதாகத் தெரிகிறது. அதேவேளை வேறு இடங்களுக்குப் புற்றுநோய் செல்கள் பரவுவதையும் தடுக்கிறது.

இரைப்பையில் தங்கும் உணவுப்பொருள்களின் நகர்வை விரைவுபடுத்தி எதுக்களித்தல், செரியாமை, ஏப்பம் ஆகியவற்றைத் தடுத்து செரிமானத்துக்குத் துணை நிற்பதாக ஐரோப்பிய ஆய்வுக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது. இஞ்சி சார்ந்த மருந்துகள் சிந்தடிக் வலி நிவாரணி மருந்துகளைப்போல செயல்பட்டு, தீராத ஒற்றைத்தலைவலியைக் (மைக்ரேன்) குறைப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

இஞ்சி மற்றும் சிறிது புதினா இலைகளை வெண்ணெய் சேர்த்து அரைத்து, உணவுகளுக்குத் தொட்டுக் கொள்ளலாம். பழத்துண்டுகளின் மீதும் பனிக்கூழ்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட, சுவை அதிகரிக்கும். குரல் கம்மல் இருக்கும்போது, தோல் சீவிய இஞ்சியை மென்று அதன் சாற்றைக் கொஞ்சமாக விழுங்கினாலே உடனடியாகப் பலன் கிடைக்கும். உணவைச் சாப்பிட்டு முடித்ததும், சிறிய இஞ்சித்துண்டை வாயில் போட்டு சுவைக்கும் ஆரோக்கியமான பழக்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.

இஞ்சிச் சாற்றோடு தேன் சேர்த்துப் பாகுபோல செய்து ஏலம், ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றின் பொடி சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அவ்வப்போது சிறு நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட, வயிற்றுப்பொருமல், வாய்வுக்கோளாறு, வாந்தி போன்றவை சாந்தமடையும். `இஞ்சி முரப்பா’ செரிமானக் கோளாறு, வாய்வுக்கோளாறை விரட்ட பல கால மாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோதுமை மாவு, பால், தேன், சர்க்கரை, இஞ்சி, ஏலம், மிளகு சேர்த்து பழங்காலத்தில் தயாரிக்கப்படும் ‘சம்யவா’ என்ற இனிப்பு பற்றி உணவு நூல்களில் குறிப்புகள் காணப்படுகின் றன. உடலுக்கு பலமூட்டும் பானகம், குடலுக்கு நன்மை தரும் மோர், பல விதங்களில் நலம் பயக்கும் கரும்புச் சாறு போன்ற பான வகைகள் தொடங்கி, பெரும்பாலான நமது உணவுத் தயாரிப்புகளில் நுண்கூறுகள் நிறைந்த இஞ்சி சேர்க்கப்படுகிறது. சைனசைட்டிஸ் பிரச்னைக்குப் பயன்படுத்தப்படும் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை, இஞ்சிச் சாற்றில் உரைத்து வெளிப்பிரயோகமாக பற்றுபோட, விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

பானைக்குள் ஈரமணலை நிரப்பி, அதில் இஞ்சியைப் புதைத்து, அவ்வப்போது ஈரம் குறையாமல் நீர் தெளித்துவந்தால், சில வாரங்களில் இஞ்சி வளரத் தொடங்கிவிடும். தேவையானபோது, அதிலிருந்து இஞ்சித் துண்டுகளை எடுத்துப் பயன் படுத்தலாம். இஞ்சியின் தோலில் நச்சுப் பொருள்கள் இருப்பதால், தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பார்வைக்கு மெல்லிய தோலுடனும் மெத்தென்றும் தொட்டுப் பார்க்கும்போது சற்று திடமாகவும் இருக்கும் இஞ்சியை வாங்குவதே சிறந்தது. கேரளாவில் உற்பத்தியாகும் இஞ்சிதான் நிறைய மருந்துவக்கூறுகளை உள்ளடக்கியது. இதற்கு ஜமைக்கா நாட்டு இஞ்சியும் சளைத்ததல்ல.

நமது ஆரோக்கியத்துக்கு உதவும் இஞ்சி எனும் மாமருந்துக்கு நாம் நன்றி சொல் கிறோமோ இல்லையோ, நன்றி மறவா நம் செரிமான உறுப்புகள், நமக்குத் தெரியாமலேயே நன்றி கூறிக்கொண்டேதான் இருக்கின்றன.

இஞ்சி, பூமிக்கடியில் மறைந்திருக்கும் அற்புதம்!


இஞ்சிச் சூரணம்

500 கிராம் இஞ்சியின் தோலைச் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, அதை நெய்யில் லேசாகப் பொரிக்க வேண்டும். பிறகு 250 கிராம் அளவு சீரகத்தை லேசாக வறுத்து, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் 750 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மூன்று விரல் அளவு இஞ்சிச் சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வாந்தி, வயிற்று மந்தம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி மணப்பாகு

250 கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கிப் பயன்படுத்தலாம். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவந்தால் சுவையின்மை, பசியின்மை தீரும்.

 

இஞ்சி டீ

இஞ்சியின் அத்தியாயம் முழுமையடைய, ‘இஞ்சி-டீ’ பற்றிப் பேசியே ஆக வேண்டும். அரை டீஸ்பூன் ஏலம், இரண்டு மிளகு, சிறிது லவங்கப்பட்டை, கால் ஸ்பூன் பெருஞ்சீரகம். இவற்றை நன்றாகப் பொடித்து, பாலில் கலந்து லேசாகக் கொதிக்கவைக்கவும். கூடவே, அரை டீஸ்பூன் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். மற்றொரு கோப்பை கொதிக்கும் நீரில் தேயிலைகளைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு, நறுமணமூட்டிகள் சேர்ந்த மேற்சொன்ன பாலில், தேயிலை சேர்ந்த கொதிநீரைக் கலந்து கொடுப்பதே பாரம்பர்யமிக்க இஞ்சி டீ!


லா-காமா மசாலா!

ஒரு டீஸ்பூன் அரைத்த இஞ்சி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் லவங்கப்பட்டை, ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கலந்து வைத்துக்கொள்ளலாம். இதை `லா-காமா’ மசாலா என்பார்கள். மொராக்கோ நாட்டின் குழம்பு வகைகள், சூப் வகைகள், மண்பானையில் சமைக்கப்படும் `டகைன்’ (Tagine) எனப்படும் பாரம்பர்ய உணவு என அனைத்திலும் மருத்துவ குணம்மிக்க `லா-காமா’ மசாலா சேர்க்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: