Advertisements

வரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்!

ம்பளதாரர்கள் மட்டுமல்ல, சுயதொழில் உள்ளிட்ட பிற தொழில்மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், தங்களது ஆண்டு வருமானம், வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்பதால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது குறித்து யோசிப்பதே இல்லை. இன்னும் சிலர், வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் கூட, உரியக் காலத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல்  தள்ளிப்போடுகிறார்கள். மற்றொரு பிரிவினர், வங்கிக் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் சூழ்நிலை வரை வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதில்லை. வருமான வரித் துறையும் அனைவரும் உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறும் தனிநபர்களுக்கு, அதுகுறித்து உடனடியாக நோட்டீஸ் அனுப்புவதில்லை என்பதால், அவர்கள் இதில் எந்த அவசரமும் காட்டுவதில்லை.

வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யாமல் இருப்பதால் தவறவிடக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றி பலரும் தெரிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.  வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யாமல் போவதால்  ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றியும் அறியாமல் உள்ளனர். மேலும், யாருடைய வருமானமெல்லாம் வரி வரம்புக்குள் வரும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமா அல்லது அவசியமில்லையா என்பது போன்ற குழப்பங்களும் இவர்களிடையே நிலவுகின்றன.இந்தக் குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்குமான விளக்கத்தைப் பார்ப்போம். 

வருமான வரி வரம்புக்குள் வராத அளவுக்குத்தான் வருமானம் ஈட்டுகிறோம் எனில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிற தவறான எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஒருவருடைய மொத்த வருமானம், எந்தவிதமான பிடித்தத்துக்கும்முன் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினாலோ, 60 வயதுக்கு மேற்பட்ட வர்களின் வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் தாண்டினாலோ, 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் தாண்டினாலோ வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

மேலும் ஒருவர், வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து, வெளிநாட்டில் அவருக்குச் சொத்துகள் அல்லது முதலீடுகள் இருந்து, அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம் வரி வரம்புக்குள் வராதபோதிலும், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயமாகும். இந்தப் பிரிவுகள் எதிலும் வராதவர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயமில்லை.

பலப்பல நன்மைகள்

ஒருவர் தொடர்ந்து வருமான வரிக் கணக்கைத்  தாக்கல் செய்வதன்மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

ரீஃபண்ட்

சம்பந்தப்பட்ட நிதியாண்டில் டி.டி.எஸ் அல்லது சுய மதிப்பீடு மூலம் செலுத்தப்படும் கூடுதல் வரியை ரீஃபண்ட் ஆகப் பெற முடியும். வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றால், ரீஃபண்ட் பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்.
 
கடனுக்கு விண்ணப்பிக்க…

பர்சனல் லோன், வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தாலும், கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம்  சமீபத்திய நிதியாண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த விவரங்களை அளிக்க வேண்டியது அவசியமாகும். வரிக் கணக்குத் தாக்கல் படிவம், உங்களது வருமான விவர அறிக்கையாகவே எடுத்துக்கொள்ளப்படும். இதன்மூலம், கடனைத் திரும்பச் செலுத்தும் உங்களது திறனைக் கடன் வழங்கும் நிறுவனத்தால் மதிப்பிட்டுக் கொள்ள முடியும்.  வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், கடன் பெறுவது மிகவும் சிரமமாகிவிடும். எனவே, வருமான வரி கணக்குத் தாக்கல் விவரம் இல்லாவிட்டால், உங்களது வருமானத்தையும், கடனைத் திரும்பச்  செலுத்தும் திறனையும் வேறு வகையில் நீங்கள் நிரூபிக்க வேண்டியதாகிவிடும்.

அதுமாதிரியான சூழ்நிலையில், கடனுக்கு விண்ணப்பிக்க உங்களுடன் இன்னொருவரையும் இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக் கொள்ளுமாறோ அல்லது கடனுக்கு ஈடான பிணையத்தைத் (collateral) தாக்கல் செய்யுமாறோ அல்லது வேறு ஏதாவது ஒருவகையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தர வாதத்தை அளிக்குமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

மூலதன இழப்பைத் தொடர்ந்து கணக்கில் காட்ட…

ஒரு நிதியாண்டில் உங்களுக்கு முதலீட்டின்மூலம் மூலதன இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பு கணக்கைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று, எதிர்காலத்தில் நீங்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது உங்களது வருமானத்தில் ஈடு செய்யலாம். ஆனால், இந்தப் பலனைப் பெற ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நீங்கள் உங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். உங்களது வருமானம் வரி வரம்புக்கு உட்பட்டதாக இல்லையென்றாலும் கூட, நீங்கள் நிதி இழப்புக்கு உள்ளாகி இருந்தால், அதனைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும். எனவே, இழப்பை ஈடுகட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய் வதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

மற்ற வருவாய்களுக்கு…

உங்களது சம்பளம், வருமான வரி வரம்பின் எந்தவொரு பிரிவின்கீழ் வராவிட்டாலும்கூட, வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்கள் அல்லது வரி வரம்புக்கு உட்படாத இதர ஆதாரங்கள் மூலம் நீங்கள் ஈட்டும் மற்ற வருவாய் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டியதாக இருக்க லாம். அப்படியான நிலையில், வரிக்கு உட்படாத உங்களது வருவாயைக் கணக்கு காட்டி, வருமான வரிக் கணக்குப் படிவத்தை நீங்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படிச் செய்வது உங்களது வருமானத்துக்கான ஆதாரமாகவும் அமையும்.

Advertisements
%d bloggers like this: