Advertisements

குற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்

ஏதேனும் இனிப்பு சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற திடீர் உந்துதல் நமக்கு எந்த நேரத்திலும் வரலாம். அப்படியே அந்த உந்துதலின் பின்னால் சென்றுவிட்டால், அது குறித்து அதிக குற்றவுணர்ச்சி உங்களை வருத்தும். உங்கள் உடல்நலத்தை (அல்லது உங்கள் மனநிலையை) அழித்துக்கொள்வதற்குப் பதிலாக, உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில நல்ல வழிகளை இந்தக் கட்டுரை காண்பிக்கிறது.

பேரிட்சை (Dates)

இதை எங்கும் எளிதில் உடன் எடுத்துச்செல்ல முடியும், அதுமட்டுமின்றி இவை நா முழுதும் இனிக்கச்செய்யும் இனிப்பு நிறைந்தது. அதோடு, உடல்நலத்திற்கும் மிகவும் நலன் கொடுக்கக்கூடியது. இவற்றில் வைட்டமின் A, வைட்டமின் K மற்றும் வைட்டமின் B6, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை மிக அதிகமுள்ளன. இவற்றில் கொழுப்பும் குறைவு, கொலஸ்ட்ரால் அற்றவை.

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)

இது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கத் தோன்றும், ஆனால் இதில் அதிக புரதமும் நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே இது உங்கள் பசியையும் இனிப்பு ஆசையையும் ஒரே நேரத்தில் தீர்க்கும். வேர்க்கடலை வெண்ணெயில் மக்னீஷியம், வைட்டமின் B6 மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்டான வைட்டமின் E உள்ளது. இதில் எண்ணெயும் கூடுதல் சர்க்கரையும் சேர்க்கப்பட்டுள்ளதா என பாட்டிலின் லேபிளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பழங்கள் (Fruits)

சர்க்கரை சாப்பிட மிகவும் ஆரோக்கியமான வழி பழங்களைச் சாப்பிடுவதே ஆகும். கொய்யா, பேரி, வாழை, தர்பூசணி, ஆப்பிள் போன்ற பழங்கள் மிகவும் சுவையானவை மிகவும் இனிப்பானவையும் கூட. இதனால் ஒரு பழம் சாப்பிட்டு நீங்கள் உங்கள் இனிப்பு ஆசையையும் தீர்த்துக்கொள்ளலாம், ஆரோக்கியத்தையும் பெறலாம்!

டார்க் சாக்லேட் (Dark Chocolate)

சாக்லேட் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றும்போது, டார்க் சாக்லேட்டை நீங்கள் தேர்வு செய்யலாம், ஏனெனில் இவற்றில் ஆன்டிஆக்சிடண்டுகள் உள்ளன. இவற்றிலும், கூடுதல் சர்க்கரையும் கொழுப்பும் உள்ளதா என லேபிளைப் பார்த்துக்கொள்ளவும்.

ஹாட் சாக்லேட் (Hot Chocolate)

ஓரிரு ஹாட் சாக்லேட் பாக்கேட்டுகளை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு கலோரிகள் உள்ளன என்று பேக்கில் பார்த்துக்கொள்ளவும். சிலவற்றுக்கு, வெறும் வெந்நீர் மட்டும் போதும், இன்னும் சிலவற்றுக்கு பாலும் தேவைப்படும்.

நீங்களே தயார்செய்யக்கூடிய டெசர்ட்டுகள் (DIY Desserts)

இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உந்துதல் வரும்போது, கீழ்க்காணும் இனிப்பு வகைகளில் ஒன்றை நீங்களே தயார்செய்து சாப்பிட முயற்சிக்கலாம்:

சாக்லேட் பனானா: ஒரு வாழைப்பழத்தை பாதியாக வெட்டி ஃப்ரீசரில் வைத்து உறையச் செய்யவும். அது கெட்டியானதும், உருக்கிய டார்க் சாக்லேட்டில் அதனை முக்கி எடுத்து மீண்டும் ப்ரீசரில் வைக்கவும். இப்போது சாக்லேட் வாழைப்பழத்தின் மீது கெட்டியாகும். அவ்வளவுதான், உங்கள் இனிப்பு விருந்து தயாராகிவிட்டது!

யோகர்ட் டெசர்ட்: கிரீக் யோகர்ட் ஒரு கப் எடுத்துக்கொண்டு, அத்துடன் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் அல்லது பழங்களைச் சேர்க்கவும்.

பால்: இனிப்பு ஆசையைத் தீர்க்க, பாலுடன் சாக்லேட் சோயாமில்க் அல்லது பாதம மில்க்கை ஐஸ் சேர்த்துப் பருகலாம்.

ஸ்மூதிஸ்: பழங்களையும் யோகர்ட்டையும் கலக்கவும். பாதாம், பிஸ்தா என சில பருப்பு வகைகளைத் தூவவும், இன்னும் இனிப்பு வேண்டுமானால், அத்துடன் தேனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஐஸ் லாலி: உங்களுக்குப் பிடித்த பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். தர்பூசணி, ஆரஞ்சு அல்லது பிற ஏதேனும் பழத்தைச் சேர்த்தும் முயற்சிக்கலாம். அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும்.

செரல்: பழங்களையும் கொட்டை வகைகளையும் சேர்த்து நார்ச்சத்து மிக்க செரல் தயார் செய்து சாப்பிடலாம். அதிக இனிப்பு வேண்டுமெனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் உந்துதலை கண்டுகொள்ளாமல் விடுவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் ஆரோக்கியமற்ற இனிப்புக்குப் பதிலாக ஆரோக்கியமான ஒன்றை சாப்பிட்டு திருப்திப்படுத்த முடியும். இந்த எளிய மாற்று வழிகளை முயற்சித்துப் பாருங்கள், உங்கள் இனிப்பு ஆசையும் தீரும் ஆரோக்கியமும் பாதிக்காது! 

Advertisements
%d bloggers like this: