Advertisements

நீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா?

நெருங்குகிறது க்ளைமாக்ஸ் என்று கூறியிருந்தார் கழுகார். ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் ஆன்டி க்ளைமாக்ஸாகிவிடும் போலிருக்கிறதே!’’

கழுகார் உள்ளே வந்துகொண்டிருக்கும் நேரம் பார்த்து, அவர் காதில் விழுவதுபோல சொல்லிக் கொண்டிருந்தோம்.

‘‘ஆஹா, எனக்கும்கூட உளவாளிகளை வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே… நீங்கள் நினைக்கும் க்ளைமாக்ஸுக்கு பிறகு வருகிறேன்’’ என சிரித்தபடியே சொன்ன கழுகார், “தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரின் கவனமும் கிறிஸ்டி மற்றும் எஸ்.பி.கே குழுமங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டுகளில் பதிந்திருக்க, இன்னொரு விவகாரத்தைக் கையிலெடுத்து சத்தமில்லாமல் சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது வருமானவரித் துறை’’ என்று தொடர்ந்தார்.

‘‘என்ன அது?’’

‘‘கொஞ்ச நாள்களாக அடங்கிக் கிடந்த குட்கா விவகாரம்தான் அது. இந்த விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள முக்கியமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரின் தலையும் உருண்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தமிழக போலீஸ், விவகாரத்தையே கிடப்பில் போட்டிருந்தது. பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விஷயம் சி.பி.ஐ-யின் கைகளுக்குப் போனது. ஏற்கெனவே வருமானவரித் துறையினர் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ களம் புகுந்தது. இந்நிலையில்தான், ஜூலை 15-ம் தேதியிலிருந்து போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் வருமானவரித் துறையிலிருந்து சம்மன் பறக்க ஆரம்பித்துள்ளது.’’

‘‘ஒரே குழப்பமாக இருக்கிறதே… சி.பி.ஐ விசாரிக்கும்போது, வருமானவரித் துறை எதற்காக சம்மன் அனுப்புகிறது?’’

 

‘‘குட்கா வியாபாரி மாதவ ராவ் குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், மாமூல் வாங்கியதாகப் பலரின் பெயர்கள் சங்கேத மொழியில் குறிப்பிடப் பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, மாதவ ராவிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அவர்களை இரும்புப்பிடியாக இறுக்குவதற்கு போதுமான ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே இது. ‘உங்களுக்குள் என்ன பரிவர்த்தனை’ என்று வருமானவரித் துறை கேட்கப் போகிறது. ‘விசாரணையைப் பார்த்து எந்தெந்த அதிகாரிகள் பதற்றமடைகிறார்கள்; குட்கா விவகாரத்தில் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு யார் யார் உதவி செய்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளத்தான் இந்த ஏற்பாடு’ என்று சி.பி.ஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் எஸ்.பி-யாக இருக்கிறார் அஸ்ரா கார்க். அவருக்குக்கூட தெரியாத அளவுக்கு இந்த அதிரடி ஆக்‌ஷன்களை மறைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளும். தமிழகத்தின் சி.பி.ஐ தலைமை அலுவலக அதிகாரியாக இருக்கும் துரைகுமாருக்கும்கூட தெரியாது. அந்த அளவுக்கு இது ரகசியமாக நடந்துள்ளது.’’ 

‘‘யாராவது இந்தப் பொறியில் சிக்கியிருக்கிறார்களா?’’

‘‘மாநகரக் காவல்துறையின் குற்றப்பிரிவில் ஒரு முக்கிய அதிகாரி சிக்கியிருக்கிறாராம். இவரின் பேட்ச்மேட்களான இரண்டு அதிகாரிகள், குட்கா விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் தகவல்களைப் பரிமாறியதுடன், அவர்களுக்காக வேறு சில வேலைகளையும் முன்னெடுத்துச் செய்தாராம். ஒருவகையில் இவரும் ஆதாயம் அடைந்திருப்பதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாகவே, அந்த இருவருக்கும் உதவியிருக்கிறார் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், தற்போது வருமானவரித் துறையிலிருந்து இந்த அதிகாரிக்கும் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதே விநாயகா’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் அந்த அதிகாரி. குட்கா விவகாரம் என்றால், எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருபவர்கள்… சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தற்போதைய போலீஸ் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் ஆகியோர்தான். ஆனால், இந்த இருவரைப் பற்றியும் டெல்லிக்காரர்கள் எதையும் கேட்கவில்லை. மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகளைப் பற்றித்தான் அதிகம் விசாரிக்கின்றனர்.’’

‘‘சி.பி.ஐ பிடி இறுகும்போது, அதை உடைக்க யாரும் முயற்சி செய்யவில்லையா?’’

‘‘நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உளவுத்துறையிலிருந்து இதுபற்றிப் பேசியுள்ளனர். ‘இந்த விவகாரத்தில் நாம் யாருக்காகவும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் விசாரணையைச் சந்திக்கட்டும்’ என்று அவர் சொல்லிவிட்டாராம்.’’

‘‘சரி, க்ளைமாக்ஸ் பற்றி இன்னும் பேசவே இல்லையே?’’

‘‘வருகிறேன்… எஸ்.பி.கே நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டின் வேகம் ஜூலை 18-ம் தேதியே தணிந்துவிட்டது. அதனால்தான், கோவை விமான நிலையத்தில் முதல்வர் உற்சாகமாகப் பேசினார். கேட்காமலே பல கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இந்த ரெய்டு என்பதே தமிழக அரசைக் குறிவைத்துத்தான் என்று முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? ஆனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற வகையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கும் வைக்கப்பட்ட குறிதான் இது என்கிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராகக் கொம்பு சீவி விடப்படும் செல்வாக்கான அமைச்சர் அவர். தமிழக ரெய்டு விஷயம் தெரிந்து அவர் பதறியதும்தான், இதன் வேகமும் விசாரணையும் கொஞ்சம் தணிந்ததாம். அவர் ஏன் பதறினார் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். வருமானவரித் துறையின் வேகம் குறைந்தது என்றாலும், அமலாக்கத் துறையும் சி.பி.ஐ-யும் அடுத்து இந்த விவகாரத்தில் இறங்கும்’’ என்ற கழுகார், கிளம்புவதற்கு முன்பாக ஒரு தகவல் சொன்னார்.

‘‘ஆர்.கே.நகரில் தினகரன், மீடியாக்களிடம் பேசியபோது, ‘ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அதில் அமைச்சர் ஒருவரின் பி.ஏ பெயர் இருக்கிறது. அவர் மன்னார்குடிக்கு பக்கத்து ஊர்க்காரர். பெயர் பிச்சைக்கண்ணு என்கிறார்கள். விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப்பிடித்தால், கொடுக்கல் வாங்கல் விவகாரம் தெரியவரும்’ என்று சஸ்பென்ஸ் வைத்துச் சொன்னார். அந்த அமைச்சரும் டெல்டா ஏரியாக்காரர்தானாம். இந்த டைரி விவகாரம் பெரிதாக வெடிக்கக்கூடும்.’’ 

Advertisements
%d bloggers like this: